October 01 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நெல்லை டவுண்

 1. அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிட்டாபுரத்து அம்மன்

புராண பெயர்    :     பிட்டாபுரம்

ஊர்             :     நெல்லை டவுண்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் அளிப்பதாக கூற, சும்பன், நிசும்பன் இருவரும் தங்களுக்கு எந்த காலத்திலும் அழிவு நேரக் கூடாது என வரம் கேட்கின்றனர், அதற்கு பிரம்மன் அழிவற்ற வரம் தரலாகாது, வேறு வரம் கேளுங்கள் என்று கூறிட, தங்களுக்கு எந்த ஒரு ஆண் மகனாலும் மரணம் நிகழக் கூடாது என்ற வரம் கேட்கின்றனர். பெண்கள் என்றால் போரில் சுலபமாக வென்று விடலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. பிரம்மனும் அவ்வாறே அவர்கள் கேட்ட வரங்களை அழித்து அருள்புரிந்தார். பெற்ற வரத்தினால் தங்களுக்கு அழிவில்லை என்ற ஆணவம் தலைக்கு ஏறிட, அரக்கர்கள் இருவரும் மூன்று உலகங்களையும் தங்கள் வசப்படுத்தி தேவர்களையும், முனிவர்களையும் அடிமைப்படுத்தி சித்ரவதை செய்கின்றனர். இதனை பொறுக்க முடியாத இந்திரன் மற்றும் தேவர்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் பார்வதி அம்மையை உற்று நோக்கி தேவர்களை துன்புறுத்தும் அரக்கர்களை சம்காரம் செய்து தேவர்களை காத்தருளும் படி கூறிட, பார்வதி அம்மை துர்க்கையை அழைத்து, சும்பன் மற்றும் நிசும்பனை அழித்திட ஆணையிடுகிறாள். துர்க்கையும் அந்த உத்தரவை ஏற்று பூலோகம் வந்து, தன் அம்சமாக காளியை படைத்து, தன் படைகளுக்கு தலைவியாக நியமித்து, காளி தேவியிடம் அசுரர்களை எப்படியாவது தந்திரமாக பேசி இந்த இடத்திற்கு அழைத்து வருவாயாக என்று கூறி அனுப்புகிறாள். அவ்வாறே காளியும் மோகினிப் பெண்ணாக உருவம் மாறி அசுர லோகத்தை அடைந்து அங்கிருந்த சண்டன் மற்றும் முண்டன் ஆகியோர்களிடம் தங்கள் அரசரை சந்திக்க வேண்டும் எனக் கூற, சண்டனும், முண்டனும் அரக்கர்களிடம் அனுமதி பெற்று மோகினியை அசுரர்களின் சபைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கிருந்த அரக்கர்கள் மோகினியின் அழகில் மயங்கி, அவளை தங்களுடனே தங்கும் படி கூற, வெகுண்ட மோகினி நான் வரைவனத்து கவுசிகையின் தோழி, நீங்களோ மூவுலக மன்னர்கள், உங்கள் தகுதிக்கு ஏற்ற கன்னியராய் கண்டு உடன் சேர்த்து கொள்க எனக் கூறி அங்கிருந்து கிளம்பி தங்கள் இருப்பிடம் சேர்ந்து கவுசிகையின் அருகில் நிற்கிறாள். அசுரர்களோ தன் படைத் தளபதியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி எப்படியாவது கவுசிகை மற்றும் மோகினியை அசுர லோகம் கொண்டு வர உத்தரவிடுகிறார்கள்.

அவ்வாறே படைத் தளபதியும் கவுசிகை மற்றும் மோகினியாகிய காளியின் இருப்பிடம் தேடி வந்து, அவர்களிடம் தங்கள் அசுர அரசர்களை மணந்து கொள்ளும் படி கூற, வெகுண்டெழுந்த அம்மையின் கோபம் தாங்காமல் பயந்து அசுரர் படைத் தலைவன் அங்கிருந்து தப்பித்து அசுரலோகம் அடைந்து தன் அரசர்களிடம் நடந்ததை கூறுகிறான். இதனைக் கேட்டு பெருங் கோபங் கொண்ட அரக்கர்கள் தங்கள் படை வீரர்களை திரட்டி போருக்கு அனுப்புகிறார்கள். முதலில் தூமலோசனன் தலைமையில் போருக்கு வந்த அரக்கர்களை, காளியானவள் கோபத்தோடு வீழ்த்தி தூமலோசனனை சம்காரம் செய்கிறாள். அடுத்ததாக சண்டன், முண்டன் தலைமையில் அரக்கர்கள் போருக்கு வந்து தங்கள் திறமைகளை வெளிக் காட்ட, இறுதியில் காளியானவள் தன் வாளால் வெட்டி முண்டனையும், சூலத்தால் குத்தி சண்டனையும் சம்காரம் செய்கிறாள்.

அப்போது தேவர்கள் அனைவரும் பூ மழை பொழிய, இருவரின் தலைகளையும் கொண்டு கவுசிகையாகிய துர்க்கையின் காலடியில் சமர்பித்து வணங்கி நிற்கிறாள். கவுசிகை மகிழ்ந்து சண்ட முண்டனை அழித்ததால் சாமுண்டி என்ற நாமம் வழங்கி காளியை சிறப்பித்தாள். அதே நேரம் தன் வீரர்கள் மாண்டு போனதை அறிந்த சும்பன், நிசும்பன் இருவரும் அசுரப் படைகளோடு போருக்கு வர, கவுசிகையானவள் தன் உடம்பிலிருந்து சப்த மாதர்களாகிய எழுவரையும் படைத்து, அசுரர்களோடு போர்புரிய, சப்த மாதர்கள் எழுவரும் சேர்ந்து சும்பனை சம்காரம் செய்திட, கவுசிகையானவள் விசுவரூபம் கொண்டு நிசும்பனை சூலத்தால் குத்தி சம்காரம் செய்தருளினாள். தேவர்கள் மற்றும் முனிவர்கள் அங்கு தோன்றி இக் காட்சியை கண்டு ஆனந்தம் கொண்டு பூ மழை பொழிந்து துதித்து மகிழ்ந்தனர்.

காளியாக தோன்றி தூமலோசனன், சண்டன் மற்றும் முண்டனை சம்காரம் செய்த அம்மையே நெல்லை மாக் காளி என்னும் பிட்டாபுரத்தி அம்மையாக திருநெல்வேலி மாநகரின் வடமேற்கில் வடக்கு வாசல் கொண்ட கோவிலில் எல்லைக் காளியாக இருந்து காவல் புரிந்து வருவதாக திருநெல்வேலி தலப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

 • நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும்.

 

 • இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

 

 • இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

 

 • இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

 

 • கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள். இந்த எழிற்கோலத்தினை தசரா அன்று காணலாம்.

 

 • இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். (பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது). இந்த பிட்டை இக்கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள், கோவிலிலேயே தயார் செய்து அம்மனுக்கு படைத்து வருகிறார்கள்.

 

 • அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் (அலங்காரத்தில்) ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 • குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

 

 • இந்த ஆலயத்தில் உள்ள அகோர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். கோவிலின் பின்புறம் இப்போது உள்ள விநாயகருக்கு முன்பு இந்த அகோர விநாயகரை வழிபட்டனர். சிதையுற்ற இந்த விநாயகரை வழிபடக்கூடாது என்று கூறியதால் இந்த விநாயகரை (அகோர விநாயகர்) அகற்றி விட்டு, புதிதாக ஒரு விநாயகரை (இப்போது உள்ள விநாயகர்) பிரதிஷ்டை செய்தனர். இதனையடுத்து அப்புறப்படுத்தப்பட்ட விநாயகரை தொண்டர்கள் நயினார் கோவிலில் வைத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து அகற்றி குளத்தில் போட எண்ணினர். அப்போது அகோர விநாயகரை வழிபட்டவர்கள், பிட்டாபுரத்தி அம்மன் அனுமதியுடன் மீண்டும் இக்கோவிலில் எழுந்தருள செய்து பிரதிஷ்டை செய்தனர். பழமை வாய்ந்த இந்த விநாயகரின் துதிக்கையும், இரு கைகளும், இடது செவியும் சிதைந்து போய் உள்ளது. இவர் 3 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில், குறுகிய கால்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சக்திவாய்ந்த இந்த விநாயகர் முன்பு இருந்துதான், பூசாரி (கோவில் அர்ச்சகர்) நோய் வாய்ப்பட்டு வரும் குழந்தைகளுக்கு, திருநீறு அளித்தும், மை இட்டும், வேர் கட்டியும் வருகிறார்.

 

 • இந்த அம்மை திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குவதால், வைகாசி மாதம் இவளுக்கு முதலில் திருவிழா நடைபெற்றப் பின்னரே, நெல்லையப்பர் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா துவங்கும்.

 

 • இங்குள்ள கருவறை அம்மைக்கு வருடத்தில் ஒருமுறை புரட்டாசி மாதம், விஜய தசமி அன்று முழு சந்தனக் காப்பு சாத்தப்படும். அன்று மட்டுமே அம்மையின் முழு உருவத்தையும் தரிசிக்கலாம்.

 

திருவிழா: 

இங்கு வைகாசி மாதம் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் அம்மன் சட்டத் தேரில் எழுந்தருள்வாள். பத்தாம் நாள் காந்திமதி அம்மை சன்னதியிலுள்ள பொற்றாமரை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி காண்பாள்.

புரட்டாசி மாதம் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறும். விஜய தசமி அன்று பரி வேட்டை உற்சவமும், அன்று இரவு திருநெல்வேலி மாநகரில் உள்ள 26 அம்மன்கள் புடை சூழ சிம்ம வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவாள்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில்,

பிட்டாபுரம் –  நெல்லை டவுண்,

திருநெல்வேலி மாவட்டம்.

 

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வட மேற்கில் இந்த திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. நகரின் முக்கியப் பகுதி என்பதால் பேருந்து வசதி அதிகம் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மேற்கே சுமார் 3.5 கி. மீ தொலைவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

18 − 6 =