October 02 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரெட்டியார்சத்திரம்

 1. அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)

உற்சவர்   :      நரசிம்மர்

தாயார்     :      கமலவல்லி

தீர்த்தம்    :      கிணற்று தீர்த்தம்

ஊர்        :      ரெட்டியார்சத்திரம்

மாவட்டம் :      திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு:

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் இருவரும் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தைக் காட்டி கோயில் எழுப்பும்படி கூறினர். அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புவாக சிவலிங்கம் இருந்ததைக் கண்டார். பின்பு, பெருமாள் சிலை வடித்த மன்னர் லிங்கத்தின் அருகிலேயே பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினார்.பெருமாளுக்கு, “நரசிங்கப்பெருமாள்’ என பெயர் சூட்டினார். காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, அவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்பெற்றது.

பழமையை பறைசாற்றும் இந்தக் கோயில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள்  கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில் ஆலயத்தின் கட்டிடக்கலையை பார்க்கும் போது, நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதாவது கோயிலுக்கு உள்ளேயே, கருவறையை சுற்றி வருவதற்கு இடம் உள்ளது. அதற்கான நுழைவு வாயிலில் குனிந்தபடி  உள்ளே சென்று, நிமிர்ந்தபடி வலம் வந்து மீண்டும் குனிந்து கொண்டே வெளியேறும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக்கலை நாயக்கர் காலத்தை குறிப்பிடுவதாக உள்ளது. அர்த்த  மண்டபம், மகாமண்டபம் உட் பிராகார அமைப்புடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. பண்டைக்காலத்தில் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்,  காலப்போக்கில் கன்னிவாடி ஜமீன்தார்களால் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த கோயிலை, 1964ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாத  சுவாமி ஆலயத்தின் உபகோயிலாகவும் இது விளங்குகிறது.

 

கோயில் சிறப்புகள்:

 • கதிர் என்றால் ஒளி என்று பொருள். இருளில் தத்தளிக்கும் பக்தர்களை மீட்டெடுக்கும் வகையில், ஒளி பொருந்திய பெருமாளாக இத்தல நரசிம்மர் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

 

 • கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார் லட்சுமியுடன் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் முன்பு சுயம்புலிங்கம் உள்ளது. சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி அளிக்கின்றனர்.

 

 • மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். இவர் நரசிங்கப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நரசிம்ம முகம் கிடையாது. சாந்த மூர்த்தியாகவே காட்சி தருகிறார்.

 

 • கருவறை மற்றும் கோஷ்டச் சுவருக்கு இடையே மூலஸ்தானத்தை மட்டும் வலம் வரும் வகையில் உள்பிரகாரம் ஒன்றுள்ளது.இது மிகவும் புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும்.

 

 • சன்னதி எதிரில் கருடாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 

 • மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது. முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள். சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 

 • சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 

 • சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக் கின்றனர்.

 

 • சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என நம்புகிறார்கள்.

 

 • இத்தல இறைவன் பத்மம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

 

 • பிரகாரத்தில் வடக்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.

 

 • இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள குன்றின் மீது கோபிநாதர் (கிருஷ்ணர்) கோயில் இருக்கிறது .கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது, அக்கோயிலில் இருந்து கிருஷ்ணர், இங்கு எழுந்தருளி உறியடி உற்சவம் காண்பார்.

 

 • புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம், 2வது வாரம் வெண்ணெய் காப்பு, 3வது வாரத்தில் பெருமாள்ஏகாந்த சேவை, ஆஞ்சநேயர்காய்கறி அலங்காரம், பெருமாள், செங்கமலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம், 4வது வாரம் ஆஞ்நேயர்பெருமாளுக்கு  பழ அலங்காரம், 5வது வாரத்தில் ஆஞ்சநேயர், பெருமாள் புஷ்ப அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.

 

திருவிழா: 

வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 – மாலை 6.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கதிர்நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,

ரெட்டியார்சத்திரம் – 624 622.

திண்டுக்கல் மாவட்டம்.

 

போன்:    

+91- 451 – 2554 324

 

அமைவிடம்:

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில், பழனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ரெட்டியார்சத்திரம் இருக்கிறது இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

2 × 4 =