October 03 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பரங்குன்றம்

 1. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்        :     சண்முகர்

அம்மன்         :     தெய்வானை

தல விருட்சம்   :     கல்லத்தி

தீர்த்தம்         :     லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்

புராண பெயர்    :     தென்பரங்குன்றம்

ஊர்            :     திருப்பரங்குன்றம்

மாவட்டம்       :     மதுரை

 

ஸ்தல வரலாறு:

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ (பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடி மீது அமர்ந்திருந்த முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது.  முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு மாற்றாக அமைந்து விட்டதால், இக்குற்றத்திற்குப் பிராய்சித்தம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யத் தொடங்கினார்.

இதைப் பார்த்த சிவபெருமானும், பார்வதி தேவி அவர் முன் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று தோன்றி, அவரது தவத்தைப் பாராட்டினார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

 

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துனபத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் – தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இந்தத் திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி, பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப் பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

 

தருமியின் பாடல் பிழைக்காக சிவபெருமானையே எதிர்த்துப் பேச நேர்ந்த அபராதம் நீங்க நக்கீரன் இத்தலத்தில் வந்து சிவ பூஜை செய்துவந்தார். ஒரு நாள் அவர் பூஜை செய்துகொண்டிருக்கும்போது ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். மரத்தில் இருந்து நீரில் விழுந்த இலை ஒன்று பாதி மீனாகவும் பாதி பறவையாகவும் மாறியது. மீன் நீருக்குள் இழுக்கப் பறவை தரைக்கு இழுத்தது. இந்த மாயக் காட்சியைக் கண்டதில் நக்கீரரின் சிவபூஜை கெட்டது. சிவ அபராதம் புரிந்ததாகச் சொல்லி பூதம் ஒன்று அவரைப் பிடித்து சிறையில் அடைத்தது. அதுவரை 999 பேரை அடித்திருந்த பூதம் ஆயிரம் நபர்கள் ஆனதும் அவர்களைக் கொன்று தின்றுவிடுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தது. நக்கீரர் 1000வது நபராக சிறைப்பட்டதும் சிவ அபராதம் செய்து பிடிபட்ட மற்றவர்களும் கதறி அழுதனர்.

 

அப்போது நக்கீரர் முருகப்பெருமானை நினைத்துத் திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் தமிழிலும் பக்தியிலும் மகிழ்ந்த முருகப்பெருமான் தன் வேலை ஏவி பூதத்தை சம்ஹாரம் செய்தார். நக்கீரர் உட்பட ஆயிரம் பேரையும் விடுவித்தார். நக்கீரர் பூதம் தன்னைத் தீண்டிய பாவம் நீங்க கங்கையில் நீராட வேண்டும் என்று சொன்னார். அதைக்கேட்ட முருகப்பெருமான் தன் வேலினை ஒரு பாறையின் மீது எறிந்து கங்கை நதியைப் பொங்கச் செய்தார். அந்த தீர்த்தம் காசித்தீர்த்தம் என்று இன்றளவும் இருந்து வருகிறது. இந்தக் காசித்தீர்த்தம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது. அதற்கு அருகிலே மேற்கு நோக்கிய சந்நிதியில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் சுப்பிரமண்யர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

 • முருகன் அசுரர்களை எதிர்த்து மூன்று இடங்களில் போர் புரிந்தார். கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். நிலத்தில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம். விண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர். இதை மாயை அடங்கிய இடம் திருச்செந்தூர். கன்மம் அடங்கிய இடம் திருப்பரங்குன்றம். ஆணவம் அடங்கிய இடம் திருப்போரூர் என்பர் ஞானிகள்.

 

 • திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

 

 • பெரும்பாலும் முருகப்பெருமான் நின்றகோலத்திலேயே அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அவர் அமர்ந்த கோலத்தில் அதுவும் தெய்வயானையை மணம் முடித்த திருமணக் கோலத்தில் அருள்கிறார். இவருக்கு அருகிலேயே நாரதர், இந்திரன், பிரம்மன், நின்றகோலத்தில் வீணை இன்றி சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் அருள்கின்றனர். சூரிய சந்திரர்களும் கந்தவர்களும் திருமணக் கோலத்தை தரிசிக்கும் விதமாக மேலே இருந்து காண்பதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது.

 

 • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

 

 • இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. பாறையில் இடது புறம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்கத்தில் முருகப் பெருமானின் திருமணக் கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுவது போல் இங்கு கருவறை அமைந்துள்ளது.

 

 • கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்தியகிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

 

 • கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய மகளான தேவயானையை வளர்த்த ஐராவதம் அவளைப் பிரிய மனமில்லாமல், அப்படியே தன் வளர்ப்பு மகளான தேவயானைக்கும், முருகனுக்கும் தொண்டாற்ற அங்கேயே இருந்து விட்டதாக சொல்கின்றனர்.

 

 • கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

 

 • தற்போதுள்ள கோயிலுக்கு நேராக மலையில் மற்றொரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதுதான் மூலக் கோயில் என்றும் சொல்கிறார்கள்.

 

 • அறுபடை வீடுகளிலில் ஐந்துபடை வீடுகளில் சூரசம்ஹாரப் பெருவிழா நடைபெறும். அதிலும் இங்கு ஓர் ஆண்டில் மூன்று முறை, சூரசம்ஹார வைபவம் நடைபெறும் ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, தைமாதத் தெப்பத்திருவிழா, பங்குனி மாதப் பெரு விழா என மூன்று உற்சவ காலங்களிலும் இங்கு சூர சம்ஹாரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இத்தல முருகப்பெருமானுக்கு ஆடு, மயில், யானை, சேவல் என நான்கு வாகனங்கள் அமைந்திருப்பதும் சிறப்பு.

 

 • இங்கு குடைவரை மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாக அவர் திருக்கரத்தின் வேலுக்கு மட்டுமே இங்கு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பொதுவாக பெருமாள் சந்நிதிக்கு முன்பாக கருடாழ்வார் சந்நிதி அமைவது வழக்கம். ஆனால் இத்தலத்தில் பெருமாளுக்கு எதிராக சிவபெருமான் இருப்பதால் அங்கு கருடாழ்வார் சந்நிதி அமையவில்லை. மாறாக சண்முகர் மண்டபத்தில் உள்ள கார்த்திகேயனுக்கு அருகில் வடக்கு நோக்கி அருள்கிறார் கருடாழ்வார.

 

 • இங்கு வெள்ளை மயில்களைக் காணமுடியும். தேவர்கள் முருகனின் திருத்தலத்தில் உறைய வேண்டி வெள்ளை மயில்களாக மாறி இங்கு உலாவுவதாக ஐதிகம். பத்தாண்டுகளுக்கு முன்புவரை இங்கு நிறைய வெள்ளை மயில்களைக் காண முடிந்தது என்கிறார்கள் பக்தர்கள்.

 

 • சம்பந்தர் 7 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலில் சிவன் மீது தேவாரம் பாடியுள்ளார். ஞானசம்பந்தர் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ பாண்டிய மன்னர்கள் மூவரையும் இந்த கோவிலில் சந்தித்து உள்ளாராம். மேலும் நக்கீரர் முருகனின் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். திருப்புகழ், கந்தபுராணம் போன்ற பல சங்க இலக்கியங்கள் இந்த கோவிலின் பெருமையை நமக்கு பரை சாற்றுகிறது.

 

 • திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

 

 • இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

 

 • திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது

 

திருவிழா: 

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருப்பரங்குன்றம் – 625 005

மதுரை மாவட்டம்.

 

போன்:    

+91- 452- 248 2248, 248 2648,

98653- 70393,

98421- 93244,

94433 – 82946.

 

அமைவிடம் :

மதுரை மாநகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

5 × two =