December 07 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சக்கரப்பள்ளி

 1. அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சக்கரவாகேஸ்வரர்

அம்மன்         :     தேவநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     காவிரியாறு, காக தீர்த்தம், திருக்குளம்

புராண பெயர்    :     திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை

ஊர்            :     சக்கரப்பள்ளி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

தஞ்சை மாவட்டத்தில் சப்த ஸ்நான தலங்களும் சப்த மங்கைத் தலங்களும் பிரசித்தம். சப்த ஸ்நான தலங்களில் ஏழூர் திருவிழா நடப்பதுபோல் இந்த சப்த மங்கைத் தலங்களிலும் நடைபெறு கின்றது. சப்த மங்கைத் தலங்களுள் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகிறது சக்கரப்பள்ளி. (மற்றவை – ஹரி மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசு மங்கை, தாழை மங்கை, புள்ள மங்கை ஆகியன வாகும்.) சப்த மங்கையர்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி ஆகியோர் வழிபட்ட சிவத் தலங்கள் என்பதனால் இவ்வேழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. இவர்களுள் பிராம்மி வழிபட்ட தலமாக இந்த சக்கரப்பள்ளி சிறப்பிக்கப்படுகிறது. மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.)

திருமால் இங்கு வழிபட்டுச் சக்கரம் பெற்றார் என்பதனை, “வண் சக்கர மாலுறைப்பா வடி போற்றக் கொடுத்த பள்ளி” என தேவாரம் சிறப்பிக்கின்றது. சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாய் மாறிய பிரம்மா இங்கு வந்து தவமியற்றி, தீர்த்த நீராடி, பரமனை வழிபட்டு சுய உரு பெற்றுள்ளார். திருமால் வழிபட்டு சக்கரம் பெற்றதாலும், சக்கரவாகப் பறவை பூஜித்ததாலும் இத்தலம் சக்கரப்பள்ளி என்றானது. சக்கரவாகப் பட்சி வழிபட்ட தால் இத்தல நாதர் சக்கரவாகேஸ்வரர் எனப் போற்றப்படுகின்றார்.

 

கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும் போது விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

 • சப்த மாதர்கள் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.

 

 • ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங் களைக் கடந்து வருகிறாள். இந்தப் பருவங்களுக்கு இடையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏராளம். பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, இந்த ‘சப்த மங்கை தலங்கள்’ அமைந்திருக்கின்றன.

 

 • சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது சக்கரமங்கை. இதனை சக்கரப்பள்ளி என்றும் அழைப்பார்கள்.

 

 • சப்த மாதர்களில் பிராம்ஹி வழிபட்ட தலம் இது.

 

 • மூலவராக சக்கரவாகேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகையின் பெயர், தேவநாயகி. பார்வதிதேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இது.

 

 • இங்கு மூலவர் சுயம்புலிங்கமாக உயர்ந்த தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

 • இந்திரனின் மகன் சயந்தன், குபேரன் மற்றும் ஏனைய தேவாதி தேவர்களும் இத்தல ஈசனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். அநவித்யநாத சர்மா என்பவர் தனது மனைவி அனவிக்ஞையுடன் தினமும் இந்த ஏழு மங்கையர்த் தலங்களுக்கும் சென்று வழிபட்டு வீடுபேறு அடைந்ததாகத் தல புராணம் விவரிக்கின்றது.

 

 • சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை சிவ துர்க்கையாக கையில் திரிசூலம் ஏந்தி அஷ்ட புஜங்கள் கொண்டு அதியற்புதமாகக் காட்சியளிக்கின்றாள்.

 

 • மகாவிஷ்ணு இழந்த தமது சக்கரத்தைத் திரும்பப் பெற சிவபூஜை செய்து வழிபட்ட தலமாதலால் ‘சக்கரப்பள்ளி’ என்று பெயர் பெற்றது. அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்ததால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

 

 • மூலவர் ‘சக்கரவாகேஸ்வரர்’ ‘ஆலந்துறைநாதர்’ என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘தேவநாயகி’, ‘அல்லியங்கோதை’ என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

 

 • இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் முருகப்பெருமானின் முன்புறம் உள்ளது.

 

 • பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

 

 • திருஞான சம்பந்தர் இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். அப்பர் பெருமான் தனது க்ஷேத்திரக் கோவையில் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளார். சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை நாள் தோறும் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

 

 • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “கள்ளம் இலு அஞ்சு அக்கரப் பள்ளி தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் சக்கரப்பள்ளி தனில் தண்ணளியே” என்று போற்றி உள்ளார்.

 

 

திருவிழா: 

பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 9 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்,

சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4374-311 018

 

அமைவிடம்:

தஞ்சாவூரிலிருந்து(15 கி.மீ) கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

11 − 10 =