கடிதம் – 37 – காரும், கனவும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா?

Vastu dream

குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு கஷ்டப்பட்ட காலம் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய.

பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு 2nd hand இரு சக்கர வாகனம் அல்லது குறைந்த பட்சம் TVS-50 ஆவது இருந்தால் நன்றாக இருக்குமே. கூட்ட பிரச்சினை இல்லாமல் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் போக முடியுமே என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதே எண்ணம் வலுப்பெற்றதால் தான் அந்த சுமாரான காலகட்டத்தில் கூட ரூபாய் 47,000 மதிப்புள்ள Suzuki Samurai என்ற இரு சக்கர வாகனத்தை புத்தம் புதியதாக வாங்க முடிந்தது.

இரு சக்கர வண்டி வாங்கிய இரண்டு வருடங்கள் கழித்து எனக்கு திருமணமும் நன்கு நடேந்தேறியது… திருமணத்திற்கு பிறகு காரில் சந்தோஷமாக பேசியபடி போகும் கணவன் / மனைவியை பார்க்கும் போதெல்லாம் நானும் மற்றவர்களை போல் என்னை நம்பி வந்த மனைவியை எப்பொழுது என் சொந்த காரில் கூட்டி செல்ல போக போகிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தேன்.

நினைவு வலுப்பெற்றது. முதன் முதலாக ரூபாய் .25,000/- க்கு வாங்கினேன் 3rd hand Fiat காரை. (வாங்கிய காரின் விலையானது நான் முதலில் வாங்கிய வாகனமான Suzuki Samurai பைக்கின் விலையை விட 1 மடங்கு குறைவு)

நான் வாங்கிய முதல் காரில் எந்தவித பிரச்சினையும் இன்றி 10,000 கிலோமீட்டர் ஒட்டிய பிறகு, திடீரென்று என்னுடைய அப்போதைய வாகன ஓட்டுனர் திரு.செல்வம் என்பவர் சார், எனக்கு ரொம்ப அசிங்கமாக இருக்கின்றது இந்த வண்டியை ஓட்ட. என் கூட இருக்கும் பசங்க எல்லாம் நல்ல புது மாடல் வண்டியை ஓட்டுகிறார்கள். எனவே வண்டியை மாத்துங்க சார் என்று நச்சரிக்க ஆரம்பித்தார். ஏறத்தாழ அதே நேரத்தில் தான் நானும் A/c உடன் கூடிய  புது கார் வாங்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கு காரணம் நான் Fiat காரில் போகும் போது சாலையில் ஓடும் A/c வைத்த புது மாடல் கார்களில் செல்லும் குழந்தைகள் அவர்களின் கார் கண்ணாடியை தடவி கொண்டும், முகத்தை  கார் கண்ணாடி மேல் முத்தமிட்டது போல் வைத்துக்கொண்டும், சில சமயம் சாலையில் போவோர்களுக்கு கை காண்பித்துகொண்டும் செல்வதை பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கும் போதெல்லாம் நாமும் A/c உடன் கூடிய  புது கார் வாங்கி, என் குழந்தைகளும் தங்களுடைய புத்தம் புது கார் கண்ணாடியில் முகம் புதைத்தபடி சாலையில் செல்பவர்களுக்கு கை காட்டி செல்ல வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

எண்ணம் வலுப்பெற்றது. எனக்கு அன்றும், இன்றும், என்றும் பிடித்த மற்றும் என்னுடைய  அப்போதைய கனவு காரான Maruti Wagon R – ஐ கொடுத்து(ரூபாய் 3 லட்சம்) தவணையில் வாங்கினேன்.

காலம் உருள, பின் வீட்டுத் தேவைக்கு ஒரு கார்; என் தேவைக்கு ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ண ஆரம்பித்தேன்.

எண்ணம் வலுப்பெற்றது. ஒரு நிலை வந்தபோது இரண்டாவது புத்தம் புதிய Maruti Wagan R – காரை முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன்.

பின்னாளில் நிறைய பெரிய ஆட்களை / மனிதர்களை Wagon – R காரில்  சென்று சந்திக்க நேரிட்ட போதெல்லாம் என்னுடைய சிறிய கார் என்னை அவர்கள் முன் எளியவனாக்கியது போல் ஒரு உணர்வு/எண்ணம்.

எண்ணமும், உணர்வும் வலுப்பெற்றது. வலிமையானவனாக என்னை மாற்றிக் கொள்வதற்கு ஏற்றவகையிலும் / மற்றவர்கள் மதிக்கும் வகையிலும் புத்தம் புதிய Maruti Swift காரை (ரூபாய் 7.5 லட்சம்) முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன்.

காலம் சென்றது / ஓடியது. வளர்ச்சியை எந்தவித தளர்ச்சியும் இன்றி அடைந்தபின் பாதுகாப்பு காரணத்திற்காவும், குழந்தைகள் வளர்ந்து விட்டதாலும் சற்று பெரிய கார் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தொடங்கினேன்.

எண்ணம் வலுப்பெற்றதால் ரூபாய் 17 லட்சம்  மதிப்புள்ள புதிய Toyota Innova காரையும் வாங்கினேன்.

ஏனோ இப்பொழுது எந்தக் பெரிய காரணம் இல்லை என்றாலும் கூட 90 லட்சம் மதிப்புள்ள Audi Q7 கார் வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது.

Vastu - Audi Q7

எண்ணமும் வலுப்பெற ஆரம்பித்துவிட்டது.

Audi Q7 –ஐ நான் வாங்குவேன்.

காரணம்

“I Believe in Miracles”

என்னைப் பொறுத்தவரை

நதி ஓடினால் தான் அழகு;

செடி வளர்ந்தால் தான் அழகு;

அதேபோல் மனிதனுக்கு வளர்ச்சி மட்டும் தான் அழகு:

மனிதனுக்கு வளர்ச்சி இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணமாக அவனுடைய அறியாமையையும் / அலட்சியதையும் தான் காரணமாக சொல்ல முடியும். நான் என் எண்ணங்களை எப்பொழுதும் அலட்சியப் படுத்தியதில்லை. நான் வெற்றி பெற பிறந்தவன் என்கின்ற சிந்தனை தான் என்னை நிறைய புது விஷயங்களை தினமும் கற்கவும் / கற்பிக்கவும் உந்துகிறது.

வெற்றி கோட்டை பிடிக்க தேவையான இந்த உந்துதல் ஒவ்வொருவருக்கும் உள் உள்ளது. நாம் அனைவரும் தட்டி எழுப்ப உருவ வழியாக விவேகானந்தரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

நாம் நம்மை எழுப்பிகொள்ள,நாம் நம்மை அனுதினமும் புதுப்பித்துக்கொள்ள தயவு செய்து கனவு காணுங்கள். கனவை திடமாக காணுங்கள். காரணம் உங்களுடைய கனவு தான் உங்களை தட்டி எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்ட உங்களுடைய “விவேகானந்தர்”

நான் இப்படி தான் ஒவ்வொரு விஷயத்திற்கும் கனவு கண்டேன். பின் அதை நனவு ஆக்கினேன். உங்கள் எண்ணங்களுக்கும் ஈடேற நீங்களும் தயவு செய்து கனவு காணுங்கள்.

என்னுடைய பைக், கார் கனவு நனவாகிய விதத்தை, அதற்கு உபயோகபடுத்திய மந்திரத்தை, நான் செய்த மந்திரஜாலத்தை அடுத்த கடிதத்தில் பார்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , ,

கடிதம் – 36 – தள்ளுதலும், கொள்ளுதலும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

Vastu - Sign - Throw

வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்……

வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்……

என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்…….

இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு என்று நாமே நமக்கு வரவழைத்து கொள்ளும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்கின்ற சூட்சுமம் தெரிந்து விடும் மிக எளிதாக…

இந்த விஷயத்தை எளிமையாக புரிந்து கொள்ள, ஒரு சிறிய உதாரணம்:

வேலை இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களையே இதற்கு எடுத்துகாட்டாக எடுத்துக் கொள்ளலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களின் மனநிலை கீழ் சொன்னபடி தான் இருக்கும். ஒரு சிலருக்கு கீழ் சொல்லப்படும் அத்தனை காரணங்களும் பொருந்தலாம். ஒரு சிலருக்கு கீழ் சொல்லப்படும் ஒரு காரணம் மட்டுமே பொருந்தலாம். ஆனால் காரணம் பொருந்தாமல் வேலை இல்லாமல் இருப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த காரணங்களின் பட்டியல் கீழே:

Ø   வேலைக்கு போவதற்கான முயற்சியே எடுக்காது இருப்பார்கள்.

Ø   நல்ல சம்பளத்திற்கு தான் போவேன் என்று தகுதியான வேலைகளை கூட தட்டி கழிப்பார்கள்

Ø   நல்ல வேலைக்கு போகிறவர்கள் எல்லாம் சிபாரிசு மூலம் தான் போகிறார்கள் என்று கருதுவார்கள்.

Ø   நமக்கு சுத்தமாக பேச தெரியவில்லை மற்றும்   வேலைக்குண்டான தகுதி நமக்கு இல்லை என்று கருதுவார்கள்.

Ø   தாழ்வு மனப்பான்மையோடு இருப்பார்கள்.

Ø   வேலைக்குண்டான தகுதியை மேம்படுத்த முயற்சி எடுக்க மாட்டார்கள்.

Ø   குறைந்த சம்பளம் என்று கிடைக்கின்ற வேலையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

Ø   ஒரே நாளில் அண்ணாமலை ரஜினியாகவும், சூரியவம்சம் சரத்குமாராவும் மாறும் வகையில் அதிர்ஷ்ட வேலையை எதிர்பார்த்து இருப்பார்கள்.(ஒருகால் விக்கிரமன் படம் எடுத்து அதில் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தால் வேண்டுமானால் அது சாத்தியமாக ஆகலாம்)

Ø   உழைப்பு குறைவான / அலைச்சல் இல்லா வேலையை எதிர்பார்ப்பார்கள்.

Ø   வேலை தேடுவதை விட்டு, விட்டு வேலை கிடைப்பதற்காக கோவில், குளம், பரிகாரம் என்று தெரு தெருவாக சுற்றி வருவதை முழு நேர வேலையாக ஆக்கி கொள்வார்கள்.

Ø   வேலைக்கு போவதற்கான அவசியம் இல்லாமல் இருப்பார்கள்.

Ø   வேலைக்கு போவதற்கான அவசியம் இருந்தாலும் நீர் நிறைந்த கிணற்றில் போட்ட கல் போல வயிற்றில் பசி இல்லாமல் இருப்பார்கள்.

Ø   தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற அதீத நம்பிக்கையோடு இருப்பார்கள்.

Ø   நமக்கு வேலை கிடைப்பது மிக கடினம் என்கின்ற மனநிலையில் இருப்பார்கள்.

இந்த விஷயங்களில் ஏதோ ஒன்றோ அல்லது பலதோ வேலை தேடும் குறிப்பிட்ட நபரை ஆட்கொள்ளும் போது அவருக்கு அஜாக்கிரதை உணர்வு அதிகரித்து விடும். அஜாக்கிரதை உணர்வு ஒருவருக்கு அதிகரிக்கும் போது அவருக்கு வெட்டி பேச்சும், வீண் அரட்டையும், புறம் பேசுதலும், உழைக்காமல் சொத்து வேண்டும் என்கின்ற மனப்பாங்கும் அதிகரித்துவிடும். இந்த நிலைக்கு வந்து விட்டால் முழுக்கை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டு, கரடுமுரடான சட்டையை அணிந்து கொண்டு, துணிக்கடையில் கொடுத்த பிளாஸ்டிக் பையுடன் தவறும், தப்புமாக பய-டேட்டா-வை அடித்து கொண்டு, Shoe அணியாமல், இன்டர்வியூ – விற்கு போகும் புத்தி வந்து விடும். வீட்டில் இருக்கும் போது லுங்கி மட்டுமே அணிந்து இருப்பார்கள். நிறைய TV பார்ப்பார்கள். நிறைய வலைதளங்களை பார்த்து பொழுதை கழிப்பார்கள்.

இந்த நிலைக்கு வந்துவிட்ட ஒருவனுக்கு வேலை கிடைக்கணும் என்றால் அது மறைந்த தமிழக சபாநாயகர் திரு.காளிமுத்து அவர்கள் சொன்னது போல்

“கருவாடு மீனாக மாறினால் தான் நடக்கும்

கறந்த பால் தானாக மடி புகுந்தால் தான் நடக்கும்

சூரியன் மேற்கில் உதித்தால் தான் நடக்கும்.”

இந்நிலையில் இப்பிரச்சினையை எப்படி கையாள வேண்டும்:-

Vastu - Mother with child

Ø  முதலில் வேலை தேடுபவனுக்கு தன் நிறை, குறை தெரிந்து (SWOT- Strength, Weakness, Threat, Opportunity) தன் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.

Ø  தான் படித்த படிப்பிற்கு ஏற்ற நிறுவனம் எது என்று தேடி அந்த நிறுவனத்தில் சேர முயற்சிக்க வேண்டும்.

Ø  ஆங்கில அறிவையையும், ஹிந்தி அறிவையையும் வளர்த்து கொண்டு இந்தியாவில் எந்த மூலையில் தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைத்தாலும் போக தயாராக இருக்க வேண்டும்.

Ø  நல்ல தகுதியான வேலை நாம் எதிபார்க்கும் சம்பளத்திற்கு கிடைக்காமல் போனாலும், அதிக பணம் கிடைக்ககூடிய நம் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு போக கூடாது. (உதாரணமாக, B.E., M.B.A., படித்து விட்டு Call center Agent வேலைக்கு போக கூடாது. அப்படி போகும் பட்சத்தில் நன்கு படித்தவர்களின் கதை செக்குமாடு கதையாக மாறி, அவர்கள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு விடும். பின் நாட்களின் வேலை மாறுவதற்கான சூழ்நிலையேயே அவர்களுக்கு அமையாது).

Ø  உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் சாதனை புரிய துடிக்க வேண்டும். துடித்து கொண்டே இருக்க வேண்டும்.அப்படி துடித்தால் தான்  நாம் பிறப்பு சாதாரணமாக சாவதற்கான பிறப்பல்ல சாதித்து பின் சாகவேண்டும்  என்கின்ற மனப்பான்மை வரும்.வந்தே ஆக வேண்டும்.

Ø  அடிவயிறு எரிய வேண்டும் – எப்போதும்

Ø  இன்டர்வியூ – விற்கு போகும் போது எப்படி தயார் நிலையில் இருப்போமோ 24 மணி நேரமும் அப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Ø  நம் கனவு முழுவதும் வேலை கிடைத்து விட்டதாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமக்கு வேலை கிடைத்து விட்டதாக கனவு காண வைக்க வேண்டும்.

Ø  கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தினமும் கடவுளுக்கு நல்ல வேலை கிடைத்து, (நிறுவனத்தின் பெயர்)- நிறுவனத்தில் சந்தோஷமாக பணியாற்றி கொண்டு இருப்பதாக சொல்லி நன்றி கூற வேண்டும்.

ஆக மொத்தத்தில் தேவையானதை உள் வைத்துக் கொண்டு, தேவை இல்லாததை வெளி தள்ளி விட்டாலே பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது சுலபமாக தெரிந்து வாழ்க்கை மிக இயல்பாக மாறிவிடும். இந்த விஷயம் அனைவருக்கும் பொருந்தும்.

குறிக்கோளை அடைய முற்படும் போது நமக்கு வரும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொண்டாகி விட்டது.

பிரச்சினைகளை சமாளித்து கொண்டே வெற்றி கோட்டை தொடுவதற்கு  மிக முக்கிய மூல காரணியான கனவை, காணும் கனவை நாம் எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?  ABCD தத்துவத்தின் மூலமாக.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , ,

கடிதம் – 35 – மனமும், மணமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

Vastu - Dream

கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய வேண்டும். அந்தப் பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அந்த

 • பெண்ணின் உடல்வாகு
 • பெண்ணின் படிப்பு
 • பெண்ணின் பொருளாதார பின்புலம்
 • பெண்ணின் குடும்ப சூழ்நிலை
 • பெண்ணின் ஜாதக கட்டங்கள்

என்று சொல்வார்கள் பொதுவாகவும், மேலோட்டமாகவும் பார்க்கும் நிலையில்.

என்னை பொறுத்தவரை பொருந்தா ஜாதக அமைப்பு கொண்டவர்கள் மனம் ஒத்து, திருமணம் புரிந்து இன்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்த்திருக்கின்றேன்.

மோசமான புற உடல்வாகு கொண்டவர்கள், நல்ல அழகான புற உடல்வாகு கொண்டவர்களுடன் நல் வாழ்க்கை வாழ்வதை இன்றும் பார்த்து கொண்டிருக்கின்றேன்.

பெரிய பணக்கார மணமகன், படிப்பறிவில்லாத ஏழை பெண்ணுடன் அன்பான வாழ்க்கை நடத்துவதை பார்த்து கொண்டிருக்கின்றேன்.

யாருமற்ற அனாதை நிலையில் உள்ள பெண்ணிற்கு, அதி அற்புதமான, நிறைய குடும்ப உறவுகள் கொண்ட மணமகன் கிடைத்து சந்தோஷமாக வாழ்வதையும் பார்த்து இருக்கின்றேன்.

ஆக விதி என்றால் மாறாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். மாறக் கூடியது விதி அல்லவே. E = MC2 போல.

அப்படி என்றால் ஒரு பெண்ணிற்கு திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக பொதுவாக குறிப்பிடப்படும் மேற்சொன்ன 5 விஷயங்களையும் புறக்கணித்து திருமணங்கள் நடைபெறுகின்றது என்கின்ற போது, மேற்சொன்ன 5 விஷயங்களும் தான் ஒரு பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு காரணம் என்கின்ற விதி அடிப்பட்டு போய் விடுகின்றது. அப்படி என்றால் இந்த இடத்தில் ஒரு புதிய விதி இருந்து ஆக வேண்டுமல்லவா? அந்த விதி தான் நாம் யாரும் புரிந்து கொள்ள மறுக்கின்ற, நம் எல்லோருக்கும் தெரிந்த,நன்கு தெரிந்த விதி. மனப்பாடம் செய்ய தேவையில்லை இந்த விதியை கையாள.

மனம் இருந்தால் போதும் மார்க்கத்தை அடைய.

Vastushastra - Mind - Marriage

அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஏற்கனவே சொன்ன திருமணம் தள்ளிப் போக கூடிய பெண்களின் உதாரணத்தையே எடுத்து கொள்ளலாம். திருமணம் சற்று தள்ளிப் போனாலே பெற்றோருக்கு பயம் வந்து விடும். உறவினர்களும், தெரிந்தவர்களும் கூடுமானவரை திருமணம் இன்னும் ஆகவில்லையா என்ற கட்டாய கேள்வியை கேட்டு இன்னும் பயத்தை பயங்கரமாக ஆக்கி விடும் போது முதலில் மன பலத்தை இழப்பது திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண் தான். அந்த பயத்தில் மொத்த குடும்பமும் கோவில், கோவிலாக ஏறி இறங்குவர். பரிகாரங்கள் எத்தனை சொல்லப்படுகின்றதோ அத்தனையும் செய்வர். காதல் கனவோடு இருக்க வேண்டிய பெண்ணை கிட்டத்தட்ட சாமியாராக்கி, அந்த பெண்ணிற்கு எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்கின்ற நிலைக்கு அந்த பெண்ணை தள்ளி விட்டு விடுகின்றோம்.

இந்த நிலைக்கு வந்த பின் மேலும் திருமணம் தள்ளி போனால் அந்த பெண் தன்னையே அநாவசியம் என்று கருதி வீட்டில் இருக்கும் போது அழுக்கு உடைகளுடன், அலங்காரமற்று தன்னையே மாற்றி கொள்ளும் நிலைக்கு வந்து விடுகின்ராள்.இந்த கட்டம் வந்த பிறகு கண்டிப்பாக அவளுடைய திருமணம் அவளாலேயே தள்ளிப் போடப்பட்டுவிடுகின்றது.மரணத்தை உயிர் வாழ்ந்து கொண்டே அனுபவிக்கும் நிலை தான் இந்த நிலை. இந்த நிலையில் தனக்கு எதுவமே நடக்காது. எந்த நல்லதுமே தன் வாழ்வில் இருக்காது என்ற எண்ணம் அப் பெண்ணின் உடல் முழுவதும் வியாபித்து விடும். வாழும் வாழ்க்கை வெற்று சடங்காக மாறி போய் விடும். சடலத்திற்கு உயிருள்ள நிலை என்று இந்நிலையை சொல்லலாம். கண்டிப்பாக இந்த நிலையில் உள்ள எந்தப் பெண்ணிற்கும் திருமணம் சாத்தியமில்லை.

இந்த நிலையில் உள்ள எந்த பட்டதாரிக்கும் வேலை சாத்தியமில்லை.

இந்த நிலையில் உள்ள எந்த பெண்ணிற்கும் குழந்தை சாத்தியமில்லை.

இந்த நிலையில் உள்ள எந்த மனிதனுக்கும் பணம் சேர்ப்பது சாத்தியமில்லை.

அப்படி என்றால் எப்படி நம் பிரச்சினைகளை கையாள்வது என்று முதலில் தெரிந்து கொண்டு, காணும் கனவை எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?  ABCD தத்துவத்தின் மூலமாக.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , ,

வாஸ்து உரையாடல் – தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெண் தொழில் முனைவோர்களுடன்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

Vastu - Hyatt Regencyதமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெண் தொழில் முனைவோர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்காக வாஸ்துவை பற்றி நான் சென்னையில் 20-01-2015 அன்று பேச போவதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். உங்கள் வாழ்த்து மற்றும் அன்புடன் இதுபோன்ற பல்வேறு மைல் கற்களை வெற்றிகரமாக கடந்து செல்வேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

பின் குறிப்பு:

இந்த நிகழ்ச்சி பொது மக்களுக்காக அல்ல. அழைப்பிதழ் உள்ளவர்களே கூட்டரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.

TV Shows , , , ,

கடிதம் – 34 – AB – யும் CD – யும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

Vastu - Positive Thought 1வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான்.

அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான்

ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

 1. யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்?
 2. யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்?
 3. யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்?
 4. யாருக்கு பயம் மட்டுமே அதிகமாக இருக்கும்?

பதில்:

வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவர்களுக்கு,

வாழ்க்கையை எதிர்கொள்ள தயங்குபவர்களுக்கு,

வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு,

வாழ்க்கையின் யதார்த்தத்தை ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு

மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளும் இருக்கும்.

எப்படி வயிற்றுக்கு கொஞ்சம் உணவு எடுத்து கொள்ளும் போது மொத்த உடலும் சுறுசுறுப்படைகின்றதோ, அதுபோல் ஒரே ஒரு விஷயத்தை செய்தால் இந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று சொல்வேன்.

அது என்ன விஷயம்:-

அந்த விஷயம் தான் AB – CD.

AB – என்றால் Any Body (யார் வேண்டுமானாலும்)

CD – என்றால் Can Dream (கனவு காணலாம்)

A.B.C.D – Any Body Can Dream – யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்.

நம் எல்லா தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமே நாம் யாரும் கனவு காணாமல் பழியை விதி மேல் போட்டுவிட்டு சும்மா இருப்பது தான்.

எவன் ஒருவன் கனவை துல்லியமாக காண்கின்றானோ, அவன் அவன் இலக்கை சரியான நேரத்தில் மிகச் சரியாக, மிகத்துல்லியமாக அடைவான். ஒரு வேலையை மிக உன்னிப்பாக, பொறுமையாக ஒருவர் செய்யும் போது, அவருடைய Breathing Pattern(சுவாச முறை) – ஐ கவனித்தால் அவர் விடும் மூச்சு நீண்ட மூச்சாகவும் இருக்கும். குறைவான மூச்சளவாகவும் இருக்கும்.

இந்த அடிப்படையில் ஒருவர் ஒரு விஷயத்தை அடைய சதா கனவு கண்டு, அந்த விஷயத்தையே தொடர்ந்து சிந்தித்து அந்த விஷயமாகவே அவர் மாறும் போது அவரின் மூச்சளவு குறைந்து, அவர் இயற்கையாகவே ஆல்பாவிற்கு அடுத்த நிலையான தீட்டா நிலைக்கு போய் விடுவார். இந்த நிலைக்கு போகும் போது ஒருவருக்கு அவரை அறியாமலே பயம் இல்லாமல் போய்விடும்; நேர்மறை சிந்தனைகள் தானாக வந்து சேர்ந்துவிடும். நேர் நம்பிக்கை மட்டுமே நிரம்பி இருக்கும். மேலும் மூச்சின் அளவு குறையும் போது விஷயங்களை அணுகும் முறையே ஒட்டுமொத்தமாக மாறிவிடுகின்றது. உதாரணத்திற்கு ஒரு சிறிய விஷயம்:-

நம்மில் அனேகம் பேர் இன்று Computer உபயோகப்படுத்துகின்றோம். நாம் உபயோகப்படுத்தும் Computer Key board – ல் ஆங்கில எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் இப்படி தான் இருக்கும்.

q w e r t y u i o p

a s d f g h j k l

z x c v b n m

என்றாவது ஒரு நாள் உங்களில் யாராவது ஏன் இந்த ஆங்கில எழுத்துக்கள் அதன் வரிசையில் இல்லாமல், மேற்சொன்ன வித்தியாசமான வரிசையில் உள்ளது என்று யோசித்து இருக்கிறீர்களா? யோசித்தும் இருக்கலாம். யோசித்தவர்கள் அது நாம் Type செய்யும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தான் என்று மேலோட்டமாக முடிவெடுத்து இன்று வரை Type செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த முடிவு சரியா?

உண்மையாக பார்த்தோமேயானால் பழைய கால typewriter – களை மிகுந்த வேகத்துடன் ஒருவர் உபயோகப்படுத்தினால், அந்த typewriter – களின் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கி பழுதாகி நின்று விடும் என்பதால் type அடிப்பவரின் வேகத்தை மட்டுபடுத்த, கட்டுபடுத்த மேற்சொன்ன வரிசைப்படி ஆங்கில சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தெரியாமல் / தெரிந்து கொள்ள முற்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் நாமாக இல்லாமல். அவசர உலகில் மூச்சை அதிகப்படுத்தி, பேச்சையும் மிக அதிகப்படுத்தி மனித ஆடுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மூச்சை கட்டுப்படுத்தி சரியான முறையில் கனவு கண்டால் இது போல் எல்லா விஷயங்களிலும் பொதிந்துள்ள சிதம்பர ரகசியம் இருக்கும் இடத்தில் இருந்தே தெரியும். புரியவும் செய்யும். புரிந்தவைகளை தெரியாதவர்களுக்கு சொல்லும் போது மானிடம் விலகி தெய்வம் நம்முள் இருப்பதை நாமும் உணர்ந்து நம்மை நம்பினோரையும் அவரக்குள்ளும் அதே விஷயத்தை உணரவைத்து உன்னதமான வாழ்க்கையை வாழ முடியும்.

எனவே கனவு காண்பது குற்றமல்ல இவ்வுலகில்… யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் இவ்வுலகில்… கனவு கண்டால் தான் மூச்சின் அளவும் குறையும்; பேச்சின் ஆழமும் குறையும். இது இரண்டும் நடந்தால் தான் நம்பிக்கை நம் பக்கம் துணை நிற்கும் முருகனுக்கு வீரபாகு போல.

கனவு காணலாம் சரி. அதை எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

 

TV Shows , , ,

கடிதம் – 33 – குளமும், உப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

எனக்கு தெரிந்த வரை வேறு எந்த துறையை சார்ந்தவர்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு வாஸ்து துறையை சார்ந்தவர்களுக்கு உண்டு. இதற்கு காரணம் வாஸ்து துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் ஒருவரின் வீட்டிற்க்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த வீட்டை பற்றிய முழு விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வீட்டை மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ள மனிதர்களையும் படிக்க முடியும். அந்த வகையில் நான் நிறைய படித்திருக்கின்றேன் – மனிதர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அவர்களை பார்த்த பின்.

வாஸ்து என்கின்ற விஷயத்தை நேர்மையாக கையாண்டதால் எனக்கு உலகமே சிறியதாகி போனது. அந்தளவிற்கு மனிதர்களை சந்தித்து விட்டேன். சந்தித்தது மட்டும் அல்லாமல் அவர்களை படமாக்கி என்னுள் அதை மறவா பாடமாக்கி பதிய வைத்ததன் விளைவு என் வாழ்க்கையை அதன் எந்த கட்டத்திலும் அசராமல் அதன் போக்கிலேயே கையாளக்கூடிய திறன் கிடைக்கப் பெற்றதை தான் என்னுடைய மிகப்பெரிய பலமாக நான் கருதுகின்றேன்.

இந்த குணாதிசயம் ஏற்பட்டதன் விளைவாக இன்று மனிதர்கள் குறை சொல்லும் முன் அதை நிறையாக்க என்னால் முடிகின்றது… எதிர்மறையாக பேசுபவனை நேர்மறையாக சிந்திக்க வைக்க முடிகின்றது. இதுபோன்று நீங்களும் நினைத்ததை அடைய, மற்றவர்களுக்கு ஒரு முழுத் தீர்வாக அமைய உங்களை நீங்கள் முதலில் தேடி கண்டுபிடியுங்கள். உங்களைத் தேடி கண்டுபிடித்த பிறகு உலகைத் தேடுதலோடு தேடுங்கள். கேள்விகளோடு தேடுங்கள். கேவிக்கான பதில் கிடைக்கும் வரை தேடுங்கள். தேடி தெளிவு பெற்றால் தான் பயம் சென்று நம்பிக்கை ஏற்படும். ஏன் தேடுங்கள் என்கின்ற விஷயத்தை அதிகம் வலியுறுத்துகிறேன் என்பதற்கு ஏதுவாக இறைவன் படைப்பில் தான் எத்தனை மர்மங்கள் என்று வியக்கும் அளவிற்கு ஆச்சரியம் தரும் அந்த உண்மையை ஒரு சிறிய உதாரணம் மூலம் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

ஆறறிவு அற்ற ஒரு சிறிய அல்லது பெரிய விலங்கை பெரிய குளத்திலோ, ஆற்றிலோ தள்ளிவிட்டால் அதற்கு நீச்சல் தெரியாவிட்டாலும் கூட அது நீந்தி பின் கரை சேர்ந்துவிடும். அதேபோல் நீச்சல் தெரியாத ஆறறிவு கொண்ட ஒரு மனிதனை பெரிய குளத்திலோ, ஆற்றிலோ தள்ளிவிட்டால் அவர் தன்னால் கரை ஏற முடியாது என்ற நம்பிக்கையின் காரணமாக நீரில் மூழ்கி இறந்து போய்விடுவார். விலங்கினத்திற்கு இந்த இடத்தில் இல்லாத / தெரியாத பயம் தான் இதற்கு காரணம். நம்பிக்கை இல்லாத இடத்தில் தான் பயம் தோன்றும். தேடுதல் இல்லாதவனுக்கு தான் எதிலும் நம்பிக்கையே இருக்காது. அதனால் தான் தேடுங்கள் என்று கூறுகின்றேன்.

ஏன் கேட்டு கொண்டு தேடுங்கள் என்றால் நாம் நமக்கு தெரிந்ததை / அரைகுறையாக புரிந்ததை அப்படியே ஏற்று கொண்டு வாழ பழகி போய்விட்டோம். அது ஏறத்தாழ எல்லா சூழ்நிலைகளிலும் கிட்டத்தட்ட தவறாகத் தான் போய் கொண்டிருக்கின்றது. வெகு ஜனங்களுக்கு புரியும் வகையில் இதற்கும் ஒரு உதாரணம் உங்கள் பார்வைக்காக:-

ஐயோடின் குறைபாட்டால் தைராய்டு பிரச்சினை வருகின்றது என்பதால் நாட்டு உப்பு பயன்பாடு குறைக்கப்பட்டு, ஐயோடின் உப்பு கலந்த உப்பு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நம் மக்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை மத்திய அரசு சட்டமாக்கிய போது எனக்கு எழுந்த ஓர் சந்தேகம் என்னவென்றால் ஐயோடின் குறைபாட்டால் தைராய்டு பிரச்சினை வருகின்றது என்பதை மருத்துவ உலகம் சொன்னதால் ஒப்புக் கொள்வோம் அப்படியே.

ஆனால் என் உடலில் ஐயோடின் அளவு தேவைப்படும் அளவிற்கு சரியாக இருக்கும் போது நான் ஐயோடின் கலந்த உப்பை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் என் உடலில் ஐயோடின் அதிகமாகி அது வேறு புது பிரச்சினையை உண்டு பண்ணாதா?

நிறைய நாள் மனதை குடைந்த இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க சரியான விடை தெரிந்த மருத்துவரை தேடினேன். தேடி கண்டுபிடித்த பிறகு என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்:-

 • உடலில் ஐயோடின் அளவு சரியாக உள்ள ஒருவர் ஐயோடின் கலந்த உப்பை சாப்பிடுவது மிகப் பெரிய தவறு. எலும்பு சம்பந்தமான பெரிய பிரச்சினைகளை அது கண்டிப்பாக உண்டு பண்ணும். மேலும் அவர் இந்த சட்டத்தை கொண்டு வந்ததே என் மாணவனாக இருந்து பின் மத்திய அமைச்சரான ஒருவர் தான். நான் இந்த தவறை சரி செய்ய தனி ஆளாக போராடி கொண்டிருக்கின்றேன். அதுவரை நான் சந்திக்கும் அனைவரிடமும் ஐயோடின் கலந்த உப்பை நீரில் நனைத்து சூரிய ஒளியில் காயவைத்து உபயோகப் படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றேன் என்றும் கூறினார்.

என்னுடைய சிறிய தேடுதல் ஒரு பெரிய தெளிவை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் என நம்புகின்றேன்.

சீரான நம்பிக்கையை நீங்கள் பெற, நம்பிக்கை இல்லாதவர்களே இழந்த நம்பிக்கையை முதலில் மீட்டெடுங்கள்

நம்பிக்கை உள்ளவர்களே தயவு செய்து உங்கள் நம்பிக்கையை தேடுதலுக்கு பிறகான நம்பிக்கையாக வைத்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையின் அடித்தளமான A. B. C. D பற்றி அடுத்த கடிதத்தில் கண்டிப்பாக பார்ப்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , ,

ஆங்கில புது வருட பிறப்பான….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஆங்கில புது வருட பிறப்பான ஜனவரி 1, 2015 அன்று வைகுண்ட ஏகாதசி வருவதால், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்

Andal 1 Andal
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , ,

கடிதம் – 32 – மார்டினும், இராமரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

10-11-1483 – ல் பிறந்து 18-2-1546 – ல் மறைந்த மார்டின் லூதர் கிங் புராடஸ்டன்ட் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, போப்பாண்டவருக்கு எதிராக பிராசாரம் மேற்கொண்டதால் பல்வேறு வகையான துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து கஷ்டப்பட்டார். அது போன்ற ஒரு தருணத்தில் மிகுந்த மன இறுக்கத்துடன் ஒரு முறை அவர் காணப்பட்டதை கண்டு அவருடையை மனைவி, கருப்பு வண்ணம் கொண்ட உடையை அணிந்து கொண்டு அவர் முன் வந்து நின்றார். அதை கண்டு மார்டின் திகைத்து போய் “ஏன் எப்போதும் இல்லாமல் இன்று புதியதாக கருப்பு வண்ண உடையை அணிந்து இருக்கின்றாய்?” என வருத்தம் கலந்த ஆச்சரியத்துடன் கேள்வியை தன் மனைவியிடம் கேட்டார்.

அதற்கு மார்டினின் மனைவி,

“கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இறந்து போனதற்காக துக்கம் அனுச்டிக்கிறேன்” என்று பதில் சொன்னார். மார்டினுக்கு பயங்கர கோபம் வந்து தன் மனைவியிடம் பைத்தியம் மாதிரி பேசாதே. அதெப்படி கடவுள் இறக்க முடியும் என்று மார்டின் கேட்க, உடனே மார்டினின் மனைவி ஆம் நான் பைத்தியம் தான். புத்தி பேதலித்து தான் போய் விட்டேன். நான் சொல்வது தவறு என்றால், கடவுள் இறக்கவில்லை என்றால், கடவுள் உயிரோடு தான் இருக்கின்றார் என்றால் நீங்கள் ஏன் எப்போதும் இல்லாத வகையில்

மன இறுக்கத்தோடு இருக்க வேண்டும்?

நம்பிக்கையற்று இருக்க வேண்டும்?

துயரத்தோடு இருக்க வேண்டும்?

மனக் கஷ்டப்பட்டு இருக்க வேண்டும்?

பயப்பட்டு வாழ்க்கை நடத்த வேண்டும்?

அவர் உயிரோடு இருந்ததால் இவ்வளவு நாள் காப்பாற்றபட்ட நாம், அவர் உயிரோடு இருப்பதால் இனிமேலும் காப்பாற்றபட்டே ஆக வேண்டும் என்பது தானே அர்த்தம். மனைவி சொன்னதை கேட்டு மார்டின் தன் தவறை உணர்ந்து தன்னை அன்று முதல் முழுவதுமாக திருத்தி கொண்டார். இந்த சம்பவத்திற்கு பின்பு அவர், அவர் வாழ்க்கையில் சரித்திரம் படைத்தார் என்பது தானே உலகம் கண்ட உண்மை.

ஆக வாழ்க்கையில் வெற்றி பெற, முதல் விதி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாம் விதி நம்பிக்கை நம்மேலும் இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது நம்மேல் இருக்கும் அளவை விட சற்று அதிகம் கடவுள் மேலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேற் சொன்ன எடுத்துகாட்டு. தன்மேல் நம்பிக்கை என்றால் எல்லோரும் அந்த கருத்துக்கு உடன்பட்டு விடுவர். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களே என்று நீங்கள் என்னிடம் கேட்டால் அதற்கு என்னுடைய பதில்

 1. கடவுள் நம்பிக்கை உள்ள சராசரி மனிதர்களை விட கடவுளை பற்றி அதிகம் பேசுபவர்கள், கடவுள் பெயரை அதிகம் உச்சரிப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே.
 2. ஏதோ ஒரு காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் வாதம், விவாதமாக மாறும் போது கடவுளின் பெயர் வழக்கத்திற்கு மாறாக அதிகம் உச்சரிக்கப்படும் வகையில் அமைந்து போய் விடுகின்றது. அப்படி நடந்தது என்றால் அதன் பலாபலன் யாருக்கு போய் சேரும் என்பதை நான் கீழே சொல்ல போகும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படித்தபின் நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு தலைவர், ஒரு கூட்டத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வணங்கும் இராமரை குடிகாரர், எந்த கல்லூரியில் படித்தவர் என்று கேட்கிறார். அவர் கேட்ட மாதம் புரட்டாசி மாதம்.

பொதுவாக புரட்டாசி மாதம் 50 கோடி இராமநாமம் உச்சரிக்கப்படும் என்றால், இந்த தலைவர் இராமரை திட்டிய உடன் இராமரை வணங்கும் அத்தனை பேரும், உலகம் முழுவதும் இருந்து அந்த தலைவருக்கு மறுப்பு வெளியிடுகின்றார்கள். இராமர் நல்லவர். இராமர் எங்கள் கடவுள். இராமர் சுத்தமானவர்…. etc., என்று அந்த மாதம் முழுவதும் எல்லோரும் இராமர், இராமர் என்று சொன்னார்கள் என்பதை விட சொல்ல வைத்து விட்டார் அந்த தலைவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆதிசங்கரரும், இராமானுஜரும் செய்ய முடியாத விஷயத்தை படிப்பறிவில்லாத, கடவுள் நம்பிக்கையற்ற அந்த தலைவர் செய்து விடுகின்றார். 50 கோடி இராமநாமம் சொல்லப்பட வேண்டிய இடத்தில் 5000 கோடி இராமநாமத்தை சொல்ல வைத்து விடுகின்றார்.

-    நிந்தனை ஸ்துதி பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் நன்கு புரியும்.

-    இது நடந்த விஷயம் மற்றும் உண்மையான உதாரணம் என்பதால் பலாபலன் யாருக்கு போய் சேரும் என்கின்ற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை வாழ்க்கையில் வெற்றி பெற தன் மேல் நம்பிக்கையும், கடவுள் மேல் நம்பிக்கையும் அதி அவசியமான இரண்டாம் விதி என்பதால் நம்பிக்கை பற்றியும் கடவுளிடம் இருந்தும் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அடுத்த கடிதத்தில் A. B. C. D., தத்துவம் மூலம் பார்ப்போமா?!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , ,

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு உன் திருமண செலவையே சமாளித்திருக்கிறாய். எனவே என்னை அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிடு. என் மருத்தவ செலவிற்கான பணத்திற்கு நீ என்ன செய்வாய் என்று என்னை கேட்டு விட்டு, கேட்டவர் அதை மட்டும் நினைத்து தூங்கி இருப்பார் என நினைக்கின்றேன். அந்த தூக்கத்திலேயே அவருடைய நிரந்தர தூக்கம் தான் என் எதிர் காலத்திற்கு நல்லது என்று தன்னை முடித்து கொள்ள முடிவெடுத்து இருப்பார் என கருதுகின்றேன்.

உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நொடி கூட தாமதிக்க விரும்பாமல், யாரும் யாரையும் தாமதிக்க விடாமல் ஓடி, பறந்து உயிர் காக்க போராடிய மருத்துவர்கள் எனக்கு அந்த நேரத்தில் கிடைத்திருந்தாலும் இன்று வரை நின்று, நின்றபின் சென்று விட்ட மூச்சை பிடித்து வந்து மனித உடலில் அடைக்கும் அளவிற்கு மருத்துவம் வளரவில்லை என்பது தானே நிதர்சன உண்மையாக இருக்கின்றது. இந்த உண்மை அந்த நொடியில் உணர்ச்சி இல்லாமல் என்னை ஆக்கிருந்தாலும், உண்மையாக போராடிய அவசரகால மூத்த மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமே என் அப்பா உடம்பை நன்கு பதப்படுத்தி கொடுத்து விடுங்கள் ஒரு உதவியாக என்பதையும் ஒரு வேண்டுகோளாக வைத்து விட்டு பின் அங்கிருந்த செவிலியரிடம் சென்று பில் கேட்டேன், அவரும் உடனே உள்ளே இருந்த மூத்த மருத்துவரிடம் கேட்டு வருவதற்காக உள் சென்று வெளி வந்து பின் சொன்னார்.

“சார், ரூ.153/- மட்டும் கொடுத்து விட்டு போங்கள் எங்கள் மருத்துவமனை மருந்தகத்தில். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிந்த அளவிற்கு குறைந்தது ரூ.20,000/- வது பில் தொகையாக கேட்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.153/- மட்டுமே கேட்கிறீர்களே, பில் எதுவும் விட்டு விட்டீர்களா மேடம் என்று நான் கேட்டதற்கு எனக்கு அளிக்கப்பட்ட பதிலை கேட்டு அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை இன்று வரை.

அவர் அளித்த அந்த பதில்:-

சார், உங்களை எங்கள் அவசரகால சிகிச்சை செய்த மருத்துவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதுவும் இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் தந்தையின் கண்களை தானமாக கொடுத்த விஷயம் குறித்து ரொம்ப சந்தோஷமாக எங்களுடன் கருத்து பரிமாறிவிட்டு In patient ஆக உங்கள் தந்தையை நாங்கள் சேர்த்து கொண்டால் கண்டிப்பாக ரூ.20,000/- மேல் தான் பில் வரும். ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் உங்களை Out Patient ஆக சிகிச்சை கொடுத்தது போல் எழுத சொல்லிவிட்டார். அதனால் மருந்தகத்தில் மருந்துக்காக வாங்கிய ரூ.153/- ஐ மட்டும் தான் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறி சென்று விட்டார்.

ஒரு வேளை விஜயா மருத்துவமனை ரூ.20,000/- தான் பில் தொகை என்று சொல்லி என்னை அந்த தொகையை கட்ட சொல்லி இருந்தால் அன்றிருந்த நிலைமைக்கு கண்டிப்பாக மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் அந்த தொகையை கட்டுவதற்கு. என் அப்பா என்றோ ஒரு முறை எங்கள் உறவுகார பெண்ணின் ஒன்பது வயது இறந்து போன குழந்தையின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டதைப் பற்றி கூறிவிட்டு, தன் கண்ணும் தானமாக கொடுக்க பட வேண்டும் என்று எதேச்சையாக கூறி இருந்த விஷயத்தை எதையும் எதிர்பாராமல் நான் உண்மையாக்கிய போது, இறந்தும் எனக்கு கஷ்டம் கொடுக்காமல் போய்விட்டார் என் அப்பா என்று தான் கூறுவேன்.

தவறான சிகிச்சை, தவறான வாகனம், அஜாக்கிரதை மருத்துவ நிர்வாகம், சுயநலம் மட்டும் நிறைந்து சாலையில் அன்று எங்களுக்கு இடம் தராமல் ஆக்கிரமித்து சென்ற மக்கள், உயிரை காக்க உண்மையான மருத்துவர்கள் போராடியது, விஜயா மருத்துவமனை மருத்துவரின் உயர்ந்த குணம் என இவை அனைத்துமே 45 நிமிடத்தில் ஒரு குறும்படம் போல் தொடங்கியதை ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே முடிந்து விட்டது.

கஷ்டத்தை தவிர வேறு எதையும் அறிந்திடாத என் அப்பா தன் மரணத்திலும் யாருக்கும் கஷ்டம் தராமல் தனக்கு மிகவும் பிடித்த என்னைத் தவிர வேறு யார் முகத்தையும் பார்க்காமல் Ambulance – ல் செல்லும் போது இரண்டு கண்களையும் மூடியவர், இறந்த பின் தன் கண்களையும் கொடுத்து 2 முகம் தெரியாத நபர்களை என் தந்தையால் பார்க்க முடியாத உலகத்தை பார்க்க செய்த புண்ணியம் ஒன்று தான் இன்று இவ்வுலகில் பலரை என்னை நோக்கி பார்க்க செய்திருக்கின்றது என்பதை நான் 100% நம்புகின்றேன்.

ஆக கொடுத்தால் நல்லது.

அதுவும் நினைத்த உடனே கொடுப்பது மிக நல்லது.

கொடுப்பவர்கள் (கொடுத்த உடனே) தாங்கள் கொடுத்ததை மறந்து விடுவது மிக, மிக நல்லது.

எதையும் எதிர்பாராமல் கொடுப்பது மிக, மிக, மிக நல்லது.

பெற்ற தாய், தந்தையரை போற்றி பத்திரமாக பாதுகாத்து அவர்களுக்கு எப்போதும் அன்பை மட்டும் கொடுப்பது மேல் சொன்ன எல்லாவற்றையும் விட மிகப் பெரிய நல்லது.

இந்த உண்மை கதை மூலம் வாழ்க்கையில் நினைத்ததை அடைய / விரும்புவதை பெற கொடுக்க முடிவெடுங்கள்.

கிடைக்க போவதை பெற தயாராகுங்கள்.

வெற்றி நமதே….

இதெல்லாம் சரி…. ஏன் இந்த கடிதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ரங்கநாதனும், ஆண்டாளும் என்ற தலைப்பை வைத்தேன் என்று நீங்கள் கேட்க கூடும். அதற்கான ஆச்சரிய பதில்

 • என் அப்பா இறந்த பிறகு அவர் உடலை எடுத்து சென்ற வாகனத்தை ஓட்டியவர் பெயர் ரங்கநாதன்
 • மருத்துவமனையை விட்டு கிளம்பும் போது எங்கள் எதிரில் வந்த லாரியில் எழுதியிருந்த பெயர் ஸ்ரீஆண்டாள்

ஆச்சரிய எடுத்துக்காட்டுகளுடன் அடுத்த கடிதத்தில் அடுத்த விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

எல்லா புகழும் ஆண்டாளுக்கே

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , , , , , , , ,

பச்சை பரப்புதல் வைபவம்…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பகல் பத்து முதல் நாளான மார்கழி 7, திங்கள்கிழமை (22-12-2014) அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரங்கமன்னாருடன் மூலஸ்தானத்திலிருந்து பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். இது ஒரு அரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , ,