February 08 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவொற்றியூர்

அருள் தரும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில்

 தல வரலாறு

 

மூலவர்                   :               படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார்,                                                    எழுத்தறியும்  பெருமாள்,  தியாகேசர், ஆனந்தத்தியாகர்

அம்மன்                 :               வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி

தல விருட்சம்      :               மகிழம், அத்தி

தீர்த்தம்                 :               பிரம்ம, நந்தி தீர்த்தம்

புராண பெயர்     :               திருவொற்றியூர்

ஊர்                         :               திருவொற்றியூர்

மாவட்டம்            :               திருவள்ளூர்

 

 

திருக்கோய்ல் தலவரலாறு :

 

பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது.

பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் பெற்றது. மற்றொரு காரணமாக இங்குள்ள இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் ஒற்றிக் கொண்டதால் அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும் வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வாசுகி என்னும் நாகம் உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர் படம்பக்கநாதர் என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால் அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை. இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிக்கின்றனர்.

ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் படையை ஏவி கருகி கிடந்த அம்பாளின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் ஒன்றுதான் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.

 

 

திருக்கோயில் சிறப்புகள் :

 

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

 

  • இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.

 

  • பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார்.

 

  • கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை.

 

  • அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும்.

 

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலய தலம் ஆகும்.

 

  • சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது.

 

  • பாண்டியனின் ஆட்சியின் போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை தெரிந்து மதுரையை எரித்துவிட்டு மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியிடம் தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறார் என்று தேடி கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி. அங்கு சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டாம் விளையாடி கொண்டு இருந்தார்கள். அப்போது கண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி நெருங்கி வருவதை சிவபெருமான் பார்த்தார். மதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி நம் திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடி கொண்டு இருக்கும் தாயகட்டையை கிணற்றில் கை நழுவிவிடுவது போல் கிணற்றில் போட்டார். இதை கண்ட கண்ணகி ஏதோ அவசரத்தில் கிணற்றில் குதித்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராசர், அந்த கிணற்றை வட்டமாக இருந்த பாறையை எடுத்து மூடினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டபாறை அம்மன் என்று பெயர் வந்தது.

 

  • ஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் இராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார். அப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. அங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்கு சென்று இராமாயண காவியத்தை எழுத தொடங்கினார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால் ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி  என்று பாடினார். இதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் இராமாயண காவியம் எழுதி முடிக்கும் வரை கம்பரின் அருகிலேயே தீ பந்தத்தை பிடித்து கொண்டு நின்றாள் காளி அம்மன்.

 

  • காளி தேவியின் சினம் அதிகமானாது. இதனால் ஊருக்குள் பல பிரச்சினைகள் அதிகமானது. அதனால் ஊர் மக்கள் காளியின் சினம் தவிர்க்க ஆடு, கோழி என்று பலி கொடுத்து வந்தார்கள். இதை விரும்பாத ஸ்ரீ ஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தை தணிக்க அவள் சன்னதி எதிரே ஒரு ஸ்ரீசக்கரம் நிறுவினார். இதனால் காளியின் சினம் தனிந்தது. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துணையிருந்து விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறாள் வட்டபாறை அம்மன்.

 

  • அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளார், பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை படைத்திருந்திருந்தவர். சிறு வயதில் இருந்தே திருவொற்றியூர் இறைவனை வணங்கி, இக்கோவிலின் தலவிருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றவர். நாள்தோறும் வடிவுடை அம்மனைத் தரிசித்தபின் இரவு வீடு திரும்புவார். அவரின் அண்ணி உணவு பரிமாறுவார். ஒருமுறை, வடிவுடை அம்மனைத் தரிசித்துவிட்டு வீடு திரும்ப நேரமாகிவிட்டதால், அண்ணி வீட்டின் உள்புறம் பூட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள். தூங்கும் அண்ணியை எழுப்ப மனமில்லாமல் இரவில் பசியுடன் திண்ணையில் படுத்துக்கொள்ள, அவரின் பசியைப் போக்க நினைத்த வடிவுடையம்மன், அவரின் அண்ணி உருவில் வந்து உணவு பரிமாறினார். இவ்வாறு இத்தலத்து வடிவாம்பிகையின் அருள் பெற்ற அடிகளார், இத்தலத்து அம்பிகையைப் போற்றி ஶ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்று 101 பாடல்களைப் பாடியுள்ளார்.

 

  • 18 சித்தர்களில் ஒருவராக்க் கருதப்படும் பட்டினத்தார், சிவபெருமானைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்று தன்னுடைய செல்வம், மனைவி, உறவு அனைத்தையும் விட்டுவிட்டு கோவணத்துடன் பல ஊர்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி பாடல்களைப் பாடி வந்தார். திருவொற்றியூர் இறைவனைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் சுவையே இல்லாத பேய்க்கரும்பு இனித்ததை அறிந்த பட்டினத்தார், தான் முக்தி அடைய இவ்வூரே சிறந்த இடமெனக் கருதி கடற்கரை ஓரத்தில் தங்கினார். ஒருமுறை மீனவச் சிறுவர்களிடம் தன்னை மண்ணில் புதைக்குமாறு செய்து பின்பு வெளிவராமல் சிவலிங்கமாக மாறி முக்தி அடைந்தார்.

 

  • 63 நாயன்மார்களில் ஒருவரான கலியநாயனார், திருவொற்றியூரில் செல்வச் செழிப்புடன் சொக்கர் குலத்தில் பிறந்தவர். திருவொற்றியூர் இறைவனுக்கு கோவிலில் அன்றாடம் திருவிளக்கு ஏற்றும் திருத்தொண்டினை செய்துவந்தார். இவரின் துருத்தொண்டினையும், பக்தியையும் உலகறியச் செய்ய எண்ணிய இறைவன், இவரின் செல்வம் யாவும் இழக்கச் செய்தார். செல்வம் இழந்தும் தனது விளக்கேற்றும் தொண்டு நின்றுவிடாமல் இருக்க, கடன் வாங்கியும் தன் வீட்டை விற்றும், பிறகு கூலி வேலை செய்தும் பாடுபட்டார். வறுமையில் வாடிய கலியநாயனார், ஒருநாள் எண்ணெய் வாங்க பணம் இன்றி அவதிப்பட்டார். எண்ணெய் ஊற்றி திருவிளக்கு ஏற்ற முடியாத நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதி, கத்தியால் தன் உடலை வெட்டிக்கொண்டார். இறுதியாக தன் ரத்தத்தை ஊற்றியாவது விளக்கேற்றலாம் என்று எண்ணி, தன் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தைக் கொண்டு விளக்கேற்ற முயற்சி செய்தார். கலியநாயனாரின் உண்மையான பக்தியைக் கண்ட திருவொற்றியூர் இறைவன் அவர் முன் தோன்றி அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

 

  • அன்னதானம் செய்தால் இந்திரபதம் கிட்டும் என்று இத்தலத்தின் தலபுராணம் விவரிக்கிறது. இத்தலத்தில் உறையும் ஆதிபுரிஸ்வரர், வடிவாம்பிகை, ஆடும் தியாகப் பெருமான் ஆகிய கடவுளர்களை வழிபடும் அடியார்களுக்கு நல்வாழ்வு கிட்டும்.

 

  • வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் “ஞான தீபமாக’ இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

 

  • ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, “இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க” என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு “எழுத்தறியும் பெருமான்” என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

  • சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், “நான் உன்னைப் பிரியேன்” என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையத் தலம்.

 

  • சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

 

  • இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும்.

 

திருவிழா:

சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில்,

திருவொற்றியூர்- 600 019.

திருவள்ளூர் மாவட்டம்.

 

போன்:

+91-44 – 2573 3703.

 

Share this:

Write a Reply or Comment

five × 5 =