April 25 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… உறையூர்

  1. அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அழகிய மணவாளர்

தாயார்          :     கமலவல்லி

தீர்த்தம்         :     கமலபுஷ்கரிணி

புராண பெயர்    :     திருக்கோழி

ஊர்             :     உறையூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு :

முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் பெரும்பேறாகக் கருதி வந்தான். ஆன்னலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பெரும் கவலையோடிருந்தான். வைகுந்தத்தில் குடிகொண்டுள்ள எம்பெருமான் அவன் அன்பைக் கருதி அவனுக்கு திருவருள் செய்ய எண்ணம் கொண்டார். தம் பிராட்டியையே அவனுக்கு மகளாகப் பிறக்க அருளினார். பிராட்டியும் மனம் மகிழ்ந்து உறையூரில் தாமரை ஓடையில் தாமரை மலரில் சிறு குழந்தையாக அவதரித்தார். வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அக்குழந்தையைக் கண்டெடுத்தான். அதற்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தையும் நன்கு வளர்ந்து மணப்பருவம் எய்தியது. ஒருநாள் கமலவல்லி தம் தோழிகளுடன் வனத்திற்கு உலாவச் சென்றாள். அப்போது அரங்கநாதன் அங்கு தம் குதிரை மீது ஏறி வேட்டைக்கு வந்தார். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும் கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள். தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான். மனம் வருந்தினான். எம்பெருமானிடம் முறையிட்டான். அவன் கனவில் தோன்றிய பெருமாள் யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். நீ உன் மகளை எம் சன்னதிக்கு அழைத்து வா யாம் அவளை ஏற்றுக் கொள்கிறோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார். மன்னன் மனம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார். மன்னனும் அவனுடன் வந்திருந்த மற்றவரும் காணக் கிடைக்காத அக்காட்சியைக் காணும் பேறு பெற்றனர். அதன் பிறகு நந்தசோழன் திருவரங்கக் கோவிலுக்குக் கணக்கற்றத் திருப்பணிகள் பல செய்தான். பின்னர் உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக ஒரு பெரிய கோவில் அமைத்தான். திருவரங்கத்தின் அரங்கநாதனே அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு அழகிய மணவாளன் எனும் திருநாமம் கொண்டார். இந்நிகழ்ச்சி துவார யுகத்தின் இறுதியில் நடந்தது என்று புராண வரலாறு சொல்கிறது.

துவார யுகம் முடிந்ததும் கலியுகம் தோன்றிய காலத்தில் உறையூரில் மண் மழை பெய்தது. அதனால் இந்த உறையூரே மூழ்கிப் போனது. அதன் பிறகு ஒரு சோழமன்னன் இத்திருக்கோயிலைக் கட்டி இங்கு திருமணக் கோலத்தில் அழகிய மணவாளனையையும் கமலவல்லியையும் அமைத்தான் என்று கூறப்படுகிறது. அம்மன்னன் பெயர் அறிய முடியவில்லை. ஒரு முறை உறையூரை ஆண்ட ஆதித்தசோழன் பட்டத்து யானை மீது உலா வந்தான். அப்போது அவனுக்கு இவ்வூரின் பெருமையை உணர்த்த இறைவன் எண்ணினார். அவர் வில்வ மரத்தின் நிழலின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை ஏவினார். அது மிக வேகத்துடன் பறந்து சென்று அந்தப் பட்டத்து யானையை எதிர்த்துப் போர் புரிந்துத் தன் அலகினாலும் கால்களினாலும் யானையின் கண்களைக் குத்திக் குருடாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதை எம்பெருமானின் அருள் என்று உணர்ந்த ஆதித்தசோழன் அக்கோழியின் பெயரால் இவ்வூருக்குத் திருக்கோழி எனப்பெயரிட்டான்.

 

கோயில் சிறப்புகள் :

  • திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளே உள்ளது. இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயார் திருமணக் கோலத்துடன் கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி எனும் திருநாமங்களுடன் அருள் பாலிக்கிறார்.

 

  • கமலவல்லி நாச்சியார் அவதரித்த தலம் என்பதால் இங்கு அவளே பிரதானம். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் எம்பெருமானுடன் கலக்கும் பேறு பெற்றவராகவும் விளங்கிய திருப்பாணாழ்வார் அவதரித்தத் திருத்தலம் இது. இத்திருக்கோயிலில் திருப்பாணாழ்வாருக்குத் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நம்மாழ்வார் ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன.

 

  • நாயன்மார்களில் புகழ்ச்சோழர் மற்றும் கோச்செங்கன் சோழர் பிறந்ததும் இங்குதான்.

 

  • கோயில் கோபுரம் 5 நிலை உடையது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும் கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை.

 

  • பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர்.

 

  • வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து வைணவத் தலங்களிலும் சொர்க்கவாசலைக் கடந்து பெருமாள் வரும் வைபவம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் மட்டும் இதிலிருந்து மாறுபட்டு தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அனைத்து பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின் போது சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது.

 

  • ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம் காவிரி குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்கு சென்று சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்.

 

  • திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவரும் கோழி என்று இவ்வூரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே இவர் உறையூரையும் தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் இவரை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லையே இவர் பல்லாண்டு வாழ்க கடல் வண்னம் கொண்டவராகவே இவர் தோன்றுகிறார். ஒரு திருக்கையில் சக்கரத்தையும் மற்றொரு கையில் சங்கினையையும் தரித்துக் கொண்டிருக்கிறாரே இவரது அழகை நான் என்னென்று சொல்வேன்? என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார்.

 

  • கரிகால் சோழன் நலங்கிள்ளி குலோத்துங்க சோழன் கிள்ளிவளவன் முதலானோர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். குலசேகரப்பெருமாள் சேர சோழ பாண்டிய நாடுகளை ஆண்ட போது இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார் எனபது அவர் பாசுரத்தால் அறிய முடிகிறது.

 

திருவிழா :

புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில்,

உறையூர்-620 003

திருச்சி மாவட்டம்

 

போன்:    

+91-431 – 2762 446, 94431 88716.

அமைவிடம் :

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

three × 1 =