April 16 2019 0Comment

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்: 

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்:
இத்தலம் தேவார வைப்புத்தலமாக கூறப்படுகிறது.
 கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேஷம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷம். அப்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக,பூஜை செய்யப்படுகிறது.
 சிவபக்தரான #பீஜாவாபா மகரிஷி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சன்னதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். இதன் அடிப்படையில் தற்போதும் இங்கு பரணி தீப வழிபாடு விசேஷமாக இருக்கிறது.
இந்த மகரிஷியின் #சிற்பம் கோயில் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது.
 சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். #தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இவரது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தீபம் #அசையாமல் எரிவதால் சுவாமி, #அசலதீபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அசலம் என்றால் அசையாதது என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை என்கிறார்கள்.
 தாயார் #மதுகரவேணி கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சிலை திருவாட்சியுடன் சேர்த்து ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம்.
முருகனை கைலாயத்திற்கு அழைப்பதற்காக அவரை பின்தொடர்ந்தபோது, முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் மதுகரவேணி என்று அழைக்கப்படுகிறாள்.
பௌர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
ஆரம்பத்தில் இத்தலத்தில் சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இத்தல சிவனின் பக்தையான குமராயி என்ற பெண், தயிர் விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். குழந்தை பாக்கியம் இல்லாத அவள், இங்கு சிவனுக்கு சேவை செய்து வந்தாள். தினமும் தயிர் விற்றது போக, பாத்திரத்தில் மீதமிருப்பதை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவாள்.
ஒருசமயம் இவள் கருத்தரித்து, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஊரார் அவளை தவறாக பேசினர். தான் பத்தினி என்பதற்கு சிவன் ஒருவரே சாட்சி என்ற அவள், இங்குள்ள காவிரி நதியில் இறங்கி நதிக்குள் ஐக்கியமானாள்.
அவ்விடத்தில் இருந்து அம்பிகை எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தாள். தானே தயிர் விற்கும் பெண்ணாக வந்ததை உணர்த்தினாள். அதன்பின், இத்தலத்தில் அம்பாளுக்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.
அம்பிகை குமராயி என்னும் பெயரில் இங்கு வாழ்ந்ததால். இத்தலத்து அம்பிகைக்கு #குமராயி என்றும், சிவனுக்கு #குமரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.
இத்தலத்தில் சிவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். மூலவருக்கு அருகில் சிறிய பாணலிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த லிங்கம், தயிர் விற்கும் பெண்ணாக வந்த அம்பிகையால் வழிபடப்பட்டது என்கிறார்கள்.
மூலவருக்கும், பாணலிங்கத்திற்கும் ஒரே நேரத்திலேயே பூஜை நடக்கிறது. இத்தலத்திற்கு அருகில் காவிரி நதி, காசி போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காவிரியை பார்த்தபடி சுவாமி காட்சி தருகிறார்.
ஆடிப்பெருக்கின்போது சுவாமி, அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவே முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
அம்பாள் சன்னதி முன்மண்டபத்திலுள்ள ஒரு கல்லில், சிவதுர்க்கை புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையம்மன், காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் மட்டும்தான், சிவன் சன்னதி கோஷ்டத்தில்தான் காட்சி தருவாள்.
ஆனால் இவள் எட்டு கரங்களுடன், பின்புறத்தில் ஆடு வாகனத்துடன் காட்சி தருகிறாள். துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அபூர்வம்.
#சிறப்பம்சங்கள் :
சிவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
நாமக்கல்லில் இருந்து 20கி.மீ தொலைவில் மோகனூர் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ சென்றால் கோயிலை அடையலாம். இக்கோயிலுக்கு ஆட்டோ வசதி உள்ளது.
Share this:

Write a Reply or Comment

seventeen + 14 =