March 04 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில் வரலாறு

 

மூலவர்   :     லட்சுமி நரசிம்மர்

தாயார்     :     நாமகிரித் தாயார்

ஊர்       :     நாமக்கல்

மாவட்டம்  :     நாமக்கல்

 

ஸ்தல வரலாறு :

ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் வந்த திருமகள், ஆரைக்கல் திருத்தலத்தில் தவம் மேற்கொண்டாள்.

காலங்கள் உருண்டோடின. இலங்கையில் ஸ்ரீ ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் தர்ம யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் அங்கமாக ஸ்ரீ ராமரின் தம்பி இலக்குவனனும் ராவணனின் மூத்த மகன் மேகநாதனும் போர் புரிந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. இருப்பினும், வெற்றியை மட்டுமே இலக்காய் கொண்ட மேகநாதன், சக்தி பாணத்தை இலக்குவனன் மீது எய்தான். தாக்குதலுக்குள்ளான இலக்குவனன் போர் களத்தில் மூர்ச்சித்து விழுந்தான். ஆஞ்சநேயர் இலக்குவனனை ஸ்ரீ ராமரிடம் கொண்டுவந்து சேர்த்தார். அனைவரின் மனமும் பதைபதைத்தது. இலக்குவனனை காக்கும் மார்க்கம் தெரியாமல் வருந்திய போது, ராவணனின் தம்பி வீடணன் அவ்விடம் வந்தார். வீடணன் தர்மவான். ஆகவே, அதர்மம் புரிந்த ராவணனை நீங்கி, ஸ்ரீ ராமரிடம் தஞ்சம் புகுந்திருந்தார். இலக்குவனனின் நிலையைக் கண்ட வீடணன், அவனைக் காக்கும் மார்க்கம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, முக மலர்ச்சியுடன் ஸ்ரீ ராமரை நோக்கி, “இலக்குவனனை காக்க ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே உள்ளது. வைத்தியத்தில் நிபுணரான சுசேனரிடம் இலக்குவனனின் நாடியை பரிசோதித்து பார்ப்பதே அது. இருப்பினும், சுசேனர் ராவணனின் ராஜ வைத்தியர். அவரை இவ்விடம் அழைத்து வருவது என்பது இயலாத காரியம்” என்று கூறினார். மார்க்கம் அறிந்ததால் ஆனந்தம் அடைந்த ஆஞ்சநேயர், சுசேனரை அழைத்து வரும் பொறுப்பு தன்னுடையது என்று கூறி, துரித  வேகத்தில் சென்று, வைத்தியர் சுசேனரை உடன் அழைத்து வந்தார். இலக்குவனனை பரிசோதித்த சுசேனர், இமயமலை சாரலில் இருக்கும் சஞ்சீவி மலையிலுள்ள குறிப்பிட்ட மூலிகைகளை யாராவது கொண்டு வந்தால், தம்மால் இலக்குவனனைக் காப்பாற்ற இயலும் என்று கூறினார். அவர் அறிவுரையின் படி வாயு வேகத்தில் புறப்பட்டு சென்றார் ஆஞ்சநேயர். வைத்தியர் குறிப்பிட்ட மூலிகைகளை கண்டறிய முடியாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இலக்குவனனின் உயிரைக் காத்தார். அனைத்தும் இனிதே நிறைவேறிய பிறகு, மீண்டும் இமயம் சென்று சஞ்சீவி மலையை சேர்பித்த ஆஞ்சநேயர், அதன் அருகில் இருந்த சாளக்கிராமத்தால் ஈர்க்கப்பட்டார்.

 

சாளக்கிராமத்தை பிரிய மனம் இல்லாமல், அதனை எடுத்துக்கொண்டு ஆகாய மார்கமாக இலங்கை நோக்கி வந்த ஆஞ்சநேயருக்கு தாகம் எடுத்தது. நீர் அருந்த நிலம் இறங்கிய ஆஞ்சநேயர், தவக்கோலத்தில் இருந்த திருமகளை தரிசனம் செய்தார். தான் நீர் அருந்தி வரும் வரை, சாளக்கிராமத்தை வைத்துக்கொள்ள இயலுமா என பணிவுடன் வேண்டினார். திருமகளும் ஒப்புக்கொள்ள, அவளது திருக்கரங்களில் சாளக்கிராமத்தை ஒப்படைத்து விட்டு நீர் நிலையைத் தேடி சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு, பாரம் காரணமாக திருமகள் சாளக்கிராமத்தை நிலத்தில் வைத்து விட்டு, ஆஞ்சநேயரின் வருகைக்காக காத்திருந்தாள். தாகம் தணிந்து திரும்பி வந்த ஆஞ்சநேயர் நிலத்தில் இருந்த சாளக்கிராமத்தை எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரால் அசைக்கக்கூட முடியவில்லை. மாறாக, சாளக்கிராமம் விஸ்வரூபம் கொண்டு மலையாக மாறியது. வியப்பில் ஆழ்ந்த திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் திருக்காட்சி அளித்தார் நரசிம்மர். பேரானந்தம் கொண்டாள் திருமகள். தன்னையும் திருமாலையும் இணைத்த ஆஞ்சநேயரை வாழ்த்தி, அவரை அவ்விடம் நித்திய வாசம் செய்யும்படி பணித்தாள். அவ்வண்ணமே, மலையை நோக்கிய வண்ணம் இன்றும் வாசம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர்.

கோயில் சிறப்புகள் :

  • இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது சிறப்பு.

 

  • நாமக்கல்லை திருமாலின் கோட்டை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேல் பகுதியில் நரசிம்மராகவும் திருமால் அருட்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பு.

 

  • நரசிம்மர் கோயில் காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷமாகத் திகழ்கிறது. மலைப்பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில் இது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு என்று தனி ராஜ கோபுரம் கிடையாது. பக்தர்களைப் பொறுத்தவரை நரசிம்மர் கோயிலையே ஆஞ்சநேயரின் பிரதான  கோயிலாகக் கருதுகின்றனர்.

 

  • இங்கு நரசிம்மரின் சிலை, மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையைக் குடையாமல் தனியாக கட்டப்பட்டுள்ளது. பாறையில் பிரம்மாண்டமாக சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் நரசிம்மர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக  அருட்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.  த்ரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருட்பாலிக்கின்றனர்.

 

  • நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

 

  • நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரிலுள்ள ஒரு சாளரத்தின் வழியே ஆஞ்சநேயரை காணமுடியும். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களை பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரத்தைத் தொடுகிறது.

 

  • நாமகிரி மலையின் கிழக்கு புறத்தில் அருள்மிகு அரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஐந்து தலையுடைய பாம்பரசன் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில், திருவரங்க  கோலத்தில் திருமால் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதுவும் ஒரு குடைவரை கோயில் என்பதும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

  • நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இக்கோயில், பிற்காலத்தில் சிற்பக் கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ மன்னர்களால் அழகுற புதுப்பிக்கப்பட்டது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

 

  • கணித மேதை ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர். அவருக்கு கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்கு கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது ராமானுஜத்தின் வழக்கம்.

 

  • வைணவர்களால் புனிதமாக போற்றப்படும் சாளக்கிராமமே நாமகிரியாக மலையாக அமைந்துள்ளது. திருமலையே திருமால். திருமாலே திருமலை. சாளக்கிராமமான நாமகிரி இருமுகங்களைக் கொண்டது. ஒருமுக ருத்திராட்சம் போல இருமுக சாளக்கிராமம் காண்பதற்கு அரிதிலும் அரிது.

 

  • புராண காலத்தில் தேவசிற்பி மயனால் வடிவமைக்கப்பட்ட ஆதி திருக்கோயில். மலையைக் குடைந்து வடிவமைக்கப்பட்ட, 25 அடி நீளம் கொண்ட குடவரைக் கோயில். பிற்காலத்தில் மகேந்திரவர்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவனுக்குப் பிறகு, தொண்டை மண்டலத்தை ஆண்ட அதியமான் வழிவந்த குணசீலன் என்ற மன்னனால் பெருமளவு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செய்தி திருக்கோயிலின் கல்வெட்டில் காணப்படுகிறது.

 

  • மலையின் அடிவாரத்தில், ஒருபுறம் நரசிம்மரும், மறுபுறம் அரங்கநாதரும் உள்ளனர். பொதுவாக ஆதிசேஷன் மீதுதான் அரங்கநாதர் பள்ளிகொண்டிருப்பார். மாறாக, இத்தலத்தில் கார்கோடகனின் தவத்திற்கு இணங்கி, மிகவும் உக்கிரமான கார்கோடகன் மீது பள்ளிகொண்டு காட்சி தருகிறார். தெற்கில் சிரம் வைத்து, வடக்கில் திருப்பாதம் நீட்டி சயன நிலையில் காட்சி தருகிறார்.

 

  • சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

திருவிழா: 

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,

நாமக்கல் – 637 403,

நாமக்கல் மாவட்டம்.

 

அமைவிடம் :

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி.

 

Share this:

Write a Reply or Comment

seventeen + seven =