April 01 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தருமபுரம்

  1. அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர்

அம்மன்/தாயார்  :     தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை

தல விருட்சம்   :     வாழை

தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம்

புராண பெயர்    :     திருத்தருமபுரம்

ஊர்             :     தருமபுரம்

மாவட்டம்       :     புதுச்சேரி

மாநிலம்        :     புதுச்சேரி

 

ஸ்தல வரலாறு:

மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை சிவன் பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டார். பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவந்தால் இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமான் எமனுக்கு அருள் செய்தார். அதன்படி, எமன் பூவுலகில் பல சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தலம் வந்த எமதர்மன், இங்கு தீர்த்தம் உண்டாக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு வரும் மற்ற பக்தர்களுக்கும் பணி தந்து அருள வேண்டும் என எமன் கேட்டுக் கொண்டார். எமதர்மனின் வேண்டுகோளின்படி சிவன் இங்கே சுயம்பு மூர்த்தியாக இடம் கொண்டார். இங்கு தவம் செய்து சிவன் அருள் பெற்ற எமனுக்கு மீண்டும் அவரது பதவியைத் திருப்பிக் கொடுத்த தலம் திருபைஞ்சிலி ஆகும்.

 

திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்திற்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன் சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால் தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். திருஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞான சம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார்.

சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம்

 

  • இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார்.

 

  • திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம்.

 

  • மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர்.

 

  • யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் “யாழ்மூரிநாதர்’ என அழைக்கப்படுகிறார்.

 

  • கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார்.

 

  • சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, “தேனாமிர்தவல்லி’ என்கின்றனர். இவள் இடது கையை தொடையில் வைத்தபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவன், தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள்.

 

  • சிவன் யாழ் இசைத்தபோது, குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர், “”எழில் பொழில் குயில் பயில் தருமபுர பதியே!” என்று பாடியிருக்கிறார்.

 

  • வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சம்பந்தருக்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார்.

 

  • தர்மன் உண்டாக்கியதாக கருதப்படும் தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இனிப்புச்சுவையுடன் இருக்கும்

 

  • தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஒரு 5 நிலை இராஜகோபுரம் அடுத்துள்ள 3 நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. 2-ம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுர மின்னம்மை சந்நிதி உள்ளது.

 

  • வெளிப் பிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர்.

 

  • 2-ம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் யாழ்முரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார்.

 

  • கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர் இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார்.தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதெட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதே போல உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்மூரிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.

 

  • இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரமதீர்த்தம், தருமதீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அமைந்துள்ளன. தலமரமாக வாழை உள்ளது.

 

  • திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதுவே யாழிசையில் அடங்காமல் போன பதிகமாகும்.

 

  • இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

 

 

திருவிழா: 

வைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை,

மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு யாழ்மூரிநாதர் தேவஸ்தானம்,

தருமபுரம் – 609 602,

காரைக்கால் புதுச்சேரி.

 

போன்:

+91- 4368 – 226 616.

 

அமைவிடம்:

இத்தலம் காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்திலுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலம் திருநள்ளாறும் இங்கிருந்து அருகிலுள்ளது.

Share this:

Write a Reply or Comment

14 + 20 =