May 06 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவெண்ணெய்நல்லூர்

  1. அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

        

மூலவர்        :     கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)

அம்மன்         :     மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)

தல விருட்சம்   :     மூங்கில் மரம்

புராண பெயர்    :     திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்

ஊர்             :     திருவெண்ணெய்நல்லூர்

மாவட்டம்       :     விழுப்புரம்

 

ஸ்தல வரலாறு :

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் ‘ஆலால சுந்தரர்’ என்றானது. சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே ‘திருவெண்ணெய் நல்லூர்’ என்றானது.

ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க, கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே பார்வதியின் தோழியர்களான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.

உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, “தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார். இதையடுத்து திருநாவலூரில் சடையனார் – இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர்.

சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.

அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, “இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை” என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார். அதைக் கேட்ட சுந்தரர், “உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?” என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த அடிமை ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார். முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.

சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.

பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர். இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், “ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?” என வினவினார்.

உடனே அந்த முதியவர், “அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது” என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.

சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா? நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே” என்றார் சுந்தரர்.

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக் குறடுகளைக் கழற்றி விட்டுவிட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.

சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கிவிட்டு மறைந்தார்.

இதையடுத்து சிவபெருமானின் மீது, ‘பித்தா பிறை சூடி..” தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.

 

  • திருவெண்ணைநல்லூர். புராணபெயர் திருவருள்துறை. மூலவர் கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், அருட்கொண்டநாதர் வேணுபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

  • இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற பெயருடையது.

 

  • கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற மேனியாக காட்சி தருகிறாள்.

 

  • அம்பாள் வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை. மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க அம்பாள் இங்குள்ள நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி, ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இருக்கின்றாள்

 

  • சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.

 

  • இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார்.

 

  • தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்.

 

  • கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த சிவபெருமான் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.

 

  • இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றது.

 

  • அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிந்ததைக் கண் குளிரக்கண்டு திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார்.

 

  • இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர்.

 

  • தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது. மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது.

 

  • பாண்டவரில் அர்ச்சுணன் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.

 

  • புத்தூர் சடங்கவியாருடைய மகள் சுந்தரர் திருமண நாளன்று இறைவன் முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது.

 

  • தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருள் துறை என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார்.

 

  • வேதங்கள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் வேதங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

 

  • சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார், ‘சிவஞான போதம்’ அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.

 

திருவிழா: 

ஆடி சுவாதி சுந்தரருக்கு 2 நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பங்குனி உத்திரம் கொடி தேரோட்டம் 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில்,

திருவெண்ணெய்நல்லூர்-607 203.

விழுப்புரம் மாவட்டம்.

 

போன்:    

+91-93456 60711

 

அமைவிடம்

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. கடலூர் – திருக்கோயிலூர் மார்க்கத்தில் பிரிந்து 7 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய் நல்லூர் உள்ளது. திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு பேருந்து வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

5 × 1 =