October 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாந்துறை

  1. அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆம்ரவனேஸ்வரர்

அம்மன்         :     பாலாம்பிகை

தல விருட்சம்   :     மாமரம்

தீர்த்தம்         :     காவேரி, காயத்ரி நதி

புராண பெயர்    :     ஆம்ரவனம், திருமாந்துறை

ஊர்            :     மாந்துறை

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் “மாந்துறை” என வழங்கப்படுகிறது.

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், என்பது நம்பிக்கை.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்றழைக்கப்படுகிறது.

 

  • கும்பகோணம் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.

 

  • இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.

 

  • சுவாமி சன்னதிக்கு அருகில் தனி சன்னதியில் இறைவி பாலாம்பிகை அம்மன் எழுந்தருளியுள்ளார். தமிழில் இவருக்கு அழகம்மை என்ற பெயர் வழங்கப்படுகிறது. அம்மனின் மேற்கரங்கள் தாமரை மலர்களை எழிலூட்டுகின்றன. கீழுள்ள கரங்கள் வரத, அபய முத்திரைகளையும் வழங்குகின்றன..

 

  • சூரியனின் வெப்பக்கீற்றைப் பொறுத்து தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை வேண்டி, சமுக்ஞை தேவி வழிபட்ட திருக்கோயில்.

 

  • சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர வந்து வழிபட்டது, திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய்கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்டது, மிருகண்டு முனிவர் தவமிருந்து மார்க்கண்டேயனைப் பெற்றது இக்கோயிலில்தான்.

 

  • தாயை இழந்த மான்குட்டிக்காக சிவனும், சக்தியும் மானுருவம் எடுத்துக் காப்பாற்றியது, ககோளர் மகன் மருந்தாந்தகன் என்னும் மன்னனின் மாத்ருகணதோஷம் நீங்கப் பெற்றும், மருந்தாந்தகன் சாபவிமோசனம் பெற்றது, கௌதமர் வடிவில் அகலிகையை இந்திரன் தீண்டியதால் கௌதமர் விட்ட சாபதோஷம் நீங்கியது, ஆதிசங்கரர் வழிபட்டது, மூலம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலம்,  குழந்தைகளுக்கான பாலதோஷம் நீக்கும் பரிகாரத் தலம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்திருக்கோயில்.

 

  • காவிரியின் வடகரையில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 58-ஆவது தலமாக விளங்குவது திருமாந்துறை கோயில். இது மூர்த்தி, தலம், கீர்த்தி எனும் மூன்றிலும் சிறப்புடையது. மாமரங்கள் நிறைந்த இப்பகுதியில் எழுந்தருளிய ஈசனுக்கு மாந்துறை நாதர் எனப்படும் ஆம்ரவனேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

 

  • இத்திருக்கோயிலைப் பற்றி சேக்கிழார் பெரியபுராணத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும், வடலூர் ராமலிங்க அடிகளார் திருவருட்பாவிலும் பாடியுள்ளனர்.

 

  • ஈசனின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்த பிரம்மன், ஈசனால் ஒடுக்கப்பட்டான். பரிகாரமாக இங்கு அசுவமேதயாகம் செய்ய விரும்பினான். இத்திருக்கோயிலுக்கு அருகே அசுவமேதயாகம் நடத்த பிரம்மதேவன் ஏற்பாடு செய்தான். யாகம் தொடங்குவதற்கு முன்னர் அபிவருத ஸ்நானம் செய்வதற்காக நான்முகன் காயத்ரி தேவி உதவியை நாடினான்.  காயத்ரிதேவி  இத்திருக்கோயிலின் கிளை ஆறாக லிங்கத்துக்கு தென்புறம் ஓடிக் காவிரியில் சங்கமமானாள். இதுவே காயத்ரிநதி என்ற பெயருடன் கோயிலுக்குரிய புண்ணியநதியாக விளங்குகிறது. கோயிலுக்கு நேர் எதிரில் பிரம்மதீர்த்த குளமும் அமைந்துள்ளது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “நீலம் கொள் தேத்துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் மாந்துறை வாழ் மாணிக்க மலையே” என்று போற்றி உள்ளார்.

 

  • மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

 

திருவிழா: 

ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், வைகாசியில் ஆதிசங்கரர் ஜெயந்தி.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்,

லால்குடி தாலுகா,

மாந்துறை- 621 703.

திருச்சி மாவட்டம்.

 

போன்:

+91-99427 40062, 94866 40260

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மி. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

three × 5 =