October 13 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊட்டி

  1. அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      மகா மாரியம்மன் , மகா காளியம்மன்

தீர்த்தம்    :      அமிர்தபுஷ்கரணி

ஊர்        :      உதகை

மாவட்டம் :      நீலகிரி

 

ஸ்தல வரலாறு:

பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவருமே ஒளிவீசும் கண்களுடன், தெய்வீக மனம் கமழ, சாந்த சொரூபிகளாகக் காட்சி தந்தனர்.

அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த மக்களிடம், ‘நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா?’ என்று வினவினர். அவர்களைக் கண்டதும் அனைவரின் உள்ளத்திலும் இனம்புரியாத பரவசம் ஏற்பட்டது. வந்திருப்பவர்கள் சாதாரணப் பெண்களல்ல, தெய்வப்பிறவி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியது. உடனே அவர்கள், அருகில் இருந்த மரத்தைக் காட்டி, அதனடியில் தங்கிக்கொள்ள அனுமதித்தனர். அங்கு சென்ற இரு பெண்களும் ஒரு மின்னல் கீற்றாகத் தோன்றி, மரத்தின் அடியில் மறைந்தனர். அந்த இடத்தை மையமாகக் கொண்டு மாரியம்மன், காளியம்மன் திருவுருவங்களுடன் திருக்கோவிலை எழுப்பி வழிபடத் தொடங்கினர். இதன்பின், காலங்காலமாக செவ்வாய்க்கிழமைகளில் சந்தைகள் நடைபெறுகிறது. வந்து செல்லும் மக்களும் அம்மன்களை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • திருக்கோவிலின் நடுநாயகமாக விளங்குவது மாரியம்மன், காளியம்மன் எனும் சகோதரிகள். ஒரே கருவறையில் இரண்டு அம்மன்கள் குடிகொண்டுள்ளது, அரிதான நிகழ்வாகும்.

 

  • எதிரில் நந்தியம்பெருமான் அம்மன்களைத் தரிசித்தவாறு அமர்ந்துள்ளார். கருவறை முன்புறம் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.

 

  • கருவறையில் வீற்றிக்கும், மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களின் உருவங்களும், ஒரே வடிவிலான உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பிற்காலத்தில் இங்கு குடியேறியவர்கள் ஆகியோருக்கு இந்த இரண்டு அம்மன்களுமே காவல்தெய்வங்களாக விளங்குகின்றனர்.

 

  • இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவங்களாக மாரியம்மன், காளியம்மன், காட்டேரி ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • ஆலயத்தின் மூன்றாவது சக்தியாக, காட்டேரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆலயத்தின் வலதுபுறம் மூலையில் காட்டேரி சன்னிதி தனியே அமைந்துள்ளது. இந்த அன்னை தீவினைகளை அகற்றும் அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள்கிறார். அன்னையின் பெயர் ‘காட்டேரி’ என்றாலும், அழகு ததும்பும் எழிலான கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும்.

 

  • இந்த ஆலம் நீண்டு உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ளது.

 

  • அன்னையர்கள் இந்தப் பகுதியில் அடைக்கலமானதைக் குறிக்கும் விதமாக, சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையின் ேதரோட்டம் நடைபெறுகிறது. அப்போது அன்னை வெள்ளை நிறப் புடவை அணிந்து, அலங்காரம் செய்யப்பட்டு உலா வருகிறார். வீதியில் உலா வரும்போது, தேரின் மீது பக்தர்கள் உப்பை வீசி வழிபாடு செய்கின்றனர். உப்பைப் போல தங்களின் குறைகளும், துன்பங்களும் கரைந்து போக வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள்.

 

  • அம்மன் திருவீதி உலா கூட சற்று வித்தியாசமாக நடத்த படுகிறது .இந்த ஊட்டியில் மட்டும் தேர் உபய நாட்களில் தேர் தெற்கு நோக்கி புறப்பட்டு .மேற்கு திசையில் சென்று நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை திரும்பும் ..அதே சமயம் திருத்தேர் அன்று மட்டும் வடக்கு நோக்கி புறப்பட்டு கிழக்கில் நகர்ந்து பின் நிலைக்கு திரும்பும் . மதியம் 1 .55 மனைக்கு வடம் பிடித்து நகரும் தேர் நகரின் முக்கிய வீதிகளில் நகர்ந்து வந்து அடுத்த நாள் காலை 7 45 மனைக்கு தான் நிலைக்கு திரும்புகிறது. அதுவும் ஒரு மூன்று கிலோமீட்டர் தான் இதன் பயணம் இருக்கும் .

 

  • நீலகிரியின் பழைய பெயர் ஒற்றைக்கல் மந்து என்பதாகும். மந்து என்பது மலையைக் குறிக்கும் சொல்லாகும். ஒற்றைக் கல்லில் உருவானது உதகமண்டலமாகும். தமிழ்நாட்டின் அங்கமாகத் திகழும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகள் பழங்காலத்தில் சீத வளநாடு என வழங்கப்பட்டது. குளிர் பிரதேசம் என்பது இதன் பொருளாகும். இந்த சீத வளநாட்டிற்கு இரண்டு மலைகள் பிரதானமாக அமைந்துள்ளன. ஒன்று கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி எனும் சிவன் மலை, மற்றொன்று நீலகிரி எனும் சக்தி மலை ஆகும். கந்தபுராணத்திலும் இக்குறிப்பு காணப்படுகிறது.

 

திருவிழா: 

நேர்த்திருவிழா (பிப்ரவரி மாதம்) 28 நாட்கள் இந்த திருவிழா நாட்களில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்,

உதகை – 643 001,

நீலகிரி மாவட்டம்.

 

போன்:    

+91-423-244 2754

 

அமைவிடம் :

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான, ஊட்டி எனப்படும் உதகமண்டலத்தின் மையப் பகுதியான லோயர் பஜார், அப்பர் பஜார் பகுதியில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சந்தைக் கடைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால், ‘சந்தைக்கடை மாரியம்மன் கோவில்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

12 − eleven =