October 29 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவல்லப சேத்திரம்

  1. அருள்மிகு திருவல்லவாழ் திருவாழ்மார்பன் கோயில் வரலாறு

 

மூலவர்        :     திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)

தாயார்          :     செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)

தீர்த்தம்         :     கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்

புராண பெயர்    :     ஸ்ரீவல்லப சேத்திரம்

ஊர்             :     திருவல்லவாழ்

மாவட்டம்       :     பந்தனம் திட்டா

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

கேரள மாநிலம் சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்களத்தம்மாள் என்பவர் வசித்து வந்தார். ஏகாதசி தினத்தில் விரதமிருந்து, திருவல்லவாழ் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார். மறுநாள் துவாதசி தினத்தில், இக்கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். ஒருசமயம் இவர், காட்டின் வழியே வரும்போது, தோலாகாசுரன் என்ற அசுரன், இவரை கோயிலுக்கு செல்லவிடாமல் இன்னல்கள் விளைவித்தான். இதுதொடர்பாக அம்மையார், திருமாலிடம் முறையிட்டார். மற்றொரு நாள் இதுபோல் காட்டுவழியே அம்மையார் வரும்போது, ஓர் இளைஞன், அசுர சக்திகளுடன் போர் புரிவதைக் காண்கிறார். சற்று நேரத்தில் போர் சப்தம் அடங்கியது. அந்த இளைஞரையும் காணவில்லை. கோயிலுக்கு வந்த அம்மையார், அங்கு பெருமாள் அமரும் இடத்தில், காட்டில் போர் புரிந்த இளைஞர் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். தனக்காக பெருமாள் இளைஞர் அசுர சக்தியுடன் போரிட்டதை அம்மையார் உணர்ந்து கொண்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லவாழ் திருவாழ்மார்பன் கோயில் 80-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • திருவல்லா என்றும், ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தைப் பற்றி கருட புராணம், மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளன.

 

  • இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.

 

  • நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • அன்றைய காலத்தில், கேரளாவில் பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. அதேபோல் இத்தல பெருமாளும் அங்கவஸ்திரம் அணியாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார்.

 

  • பெருமாளின் மார்பில் திருமகள் நிரந்தரமாகக் குடியிருப்பதால், இத்தல பெருமாள் ’திருவாழ்மார்பன்’ என்று அழைக்கப்படுகிறார். மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனத்துக்கு தனிச்சிறப்பு என்றால், இத்தல பெருமாளின் மார்பு தரிசனத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

 

  • சதுரங்க கோல விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் திருவாழ்மார்பன் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • இத்தலத்தில் உள்ள கருடாழ்வார் 50 அடி உயரத்தில் உள்ள தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடாழ்வாருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வேண்டுவோர், வேண்டியவுடன் அவரை அழைத்துச் செல்ல தயார் நிலையில், கருடாழ்வார் இருப்பதாக கூறப்படுகிறது.

 

  • சங்கரமங்களத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு உணவளிக்கும்போது, பெருமாளும் அந்த வரிசையில் அமர்ந்து உணவைப் பெற்று உண்டார். அப்போது, அம்மையார் தான் விரதம் முடித்தவுடன் உண்பதற்கு வைத்திருந்த உப்பு மாங்காயை தனக்கு அளிக்கும்படி கேட்டார் பெருமாள். அதை பாக்கு மர இலையில் வைத்து பெருமாளிடம் அளித்தார் அம்மையார். அன்றைய தினம் முதல் சுவாமிக்கு நைவேத்தியமாக பாக்கு இலையில் அன்னமும், உப்பு மாங்காயும் வைக்கப்படுகிறது.

 

  • லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.

 

  • இக்கோவிலில் குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் கேரளாவின் புகழ்பெற்ற கதகளி நடன நிகழ்ச்சியை நேர்ச்சையாக நடத்துகின்றனர். தினசரி நடைபெறும் இந்த நேர்ச்சைக்காகக் கோவிலில் கதகளி நடனக் கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நடனக்குழுவினைக் ‘கலாசேத்திரா’ என்று அழைக்கின்றனர்.

 

  • இத்தலத்தில் தனுர் (மார்கழி) திருவாதிரை நாளன்று நடைபெறும் விழாவைக் காணச் சிவபெருமான் இங்கு வந்து சென்றாராம். அன்றிலிருந்து இக்கோவிலில் திருநீறு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே இக்கோவிலில் கேரளாவுக்கே உரிய சந்தனத்துடன் விபூதியும் சேர்த்துத் தரப்படுகிறது.

 

  • இக்கோவிலுக்குக் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் என்று இரு தீர்த்தங்கள் இருக்கின்றன.

 

திருவிழா: 

மாசி மாதம் பூச நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் 10 நாள் ஆராட்டு விழா தொடங்கும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனை மட்டுமே நடைபெறும். அன்று இதர பூஜைகள் நடைபெறாது.

திறக்கும் நேரம்:

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்,

திருவல்லவாழ் (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) – 689 101

பந்தனம் திட்டா மாவட்டம்,

கேரளா மாநிலம்.

 

போன்:

+91- 469 – 270 0191

 

அமைவிடம்:

கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா நகரிலிருந்து அம்பலப்புழா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குத் திருவல்லா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Share this:

Write a Reply or Comment

fifteen − 1 =