December 13 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்    திருநல்லூர்

  1. அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

உற்சவர்        :     கல்யாணசுந்தரேஸ்வரர்

அம்மன்         :     கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     சப்தசாகரம்

புராண பெயர்    :     திருநல்லூர்

ஊர்             :     நல்லூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து ஜீவகோடிகளும் திரண்டு சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், “நீ வேண்டும் போது நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்”‘என்றார் சிவன். அதன்படி அகத்தியர் சிவனின் திருமணக்கோலம் கண்ட பல தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்றாகும். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

 

திருநல்லுர் ஸ்ரீ கிரிசுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புக் கொண்டது. திருவானைக்கா சம்புலிங்கப் பெருமானை முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டு, அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தான் என்கிறது தல வரலாறு. இவர் சிவபிரானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோயில்களை அமைத்தான். அந்த வரிசையில் பெரிய அளவில் அமைந்த கோயிலே திருநல்லூர் பெருங்கோயிலாகும்.

இத்தலத்துப் பெருமானைத் திருநல்லூர் உடைய நாயனார் என்றும், தல விநாயகரை அகம்படி விநாயகர் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவகை நிறத்துடன் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என இங்குள்ள சிவனுக்குத் திருநாமம். அமர் நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம். அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கலியாண சுந்தரர் என்பதும் இவரது திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இது ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான் (மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டு அமைந்துள்ளது.

 

  • மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் கிரி சுந்தரி.

 

  • இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் ‘மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார்.

 

  • இரண்டு திருச்சுற்றுகளையுடைய இக்கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.

 

  • கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.

 

  • திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.

 

  • தமக்கு திருவடி தீட்சை அளிக்க வேண்டும் என்று பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள திருச்சத்திமுற்றம் தலத்தில் அப்பர் வேண்ட, ‘நல்லூருக்கு வா’ என்று இறைவன் அசரீரியாகக் கூறினார். அதன்படி இத்தலத்திற்கு வந்த அப்பருக்கு சுவாமி திருவடி தீட்சை அளித்த தலம்.

 

  • பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம்

 

  • காலையில் சூரியன் உதிப்பதற்கும், மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை சுவாமி வண்ணம் மாறுகின்றார். நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்னும் மாணிக்கவாசகரின் வாக்கிற்கிணங்க இறைவன் ஐந்து முறை நிறம் மாறுகின்றார். அதனால் இறைவன் ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.

 

  • காலை 6 மணி முதல் 8.15 வரை தாமிர வண்ணத்திலும், 8.15 முதல் 11.30 வரை இளஞ்சிவப்பு வண்ணத்திலும், 11.30 முதல் மதியம் 2.30 வரை உருக்கிய தங்க வண்ணத்திலும், 2.30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை வர்ணத்திலும் 5 மணி முதல் 6 மணி வரை செம்மை வண்ணத்திலும் காட்சி தருவதாக தலபுராணம் கூறுகின்றது.

 

  • அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டு, அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகனுக்கு சிவபெருமான் முக்தி கொடுத்தத் தலம். பிருங்கி முனிவர் வழிபட்ட தலம். இக்கோயிலின் தீர்த்தமான சப்தசாகர தீர்த்தம் ஏழு கிணறுகளைக் கொண்டுள்ளது. இது ஏழு கடல்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதில் நீராடினால் ஏழு கடல்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை, மாசி மகம் போன்ற நாட்களில் நீராடுவது சிறப்பானது.

 

  • சிவாலயங்களில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். ஆனால் இறைவனோ தானே மனமுவந்து இங்கேயே திருக்கல்யாணக் காட்சியைக் காணச் செய்ததால், இந்தத் திருத்தலத்து ஈச்னை இருந்த இடத்தில் இருந்தே பக்தர்கள் வேண்டிக்கொண்டால், அவரவர் இல்லத்தில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.

 

  • மாடக் கோயில் வகையைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில், கோச்செங்கட் சோழன் கட்டியது. யானை உள்ளே புக முடியாதவாறு கோயில் அமைந்திருக்கிறது. முதன்மையான வாயிலும், அடுத்தடுத்த வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்காமல், சில படிக்கட்டுகளைக் கடந்தே ஏறிச் சென்று மூலவர் சந்நிதியை அடைய இயலும்.

 

  • பன்னிரு திருமுறையில் கிட்டத்தட்ட அனைத்திலும் பாடல் பெற்ற தலமாக இந்நல்லூர் விளங்குகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், சேக்கிழார் ஆகியோர் இத்திருத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.

 

  • மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்ற வழக்கு உண்டு. கும்பகோண மகாமகக் குளத்தில் நீராடுவதால் என்ன புண்ணியம் கிட்டுமோ அதே புண்ணியம் நல்லூரிலுள்ள திருக்குளத்தில் மகத்தன்று நீராடினாலும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

 

  • பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யசூர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.

 

  • கொடிய அரக்கனாகிய இரணியனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்து, இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று பணித்தார். அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

 

  • பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில் (சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை என்றாலும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

 

  • இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

 

  • முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது, இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார் என்ற பெருமையை உடையது

 

  • இக்கோவில். இரண்டு பிரகாரங்களை உடைய இக்கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள அஷ்டபுஜ காளி சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத் தக்கது. கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

 

  • பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும், கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள். ஒரேநாளில் ஏழு கடலில் நீராடினால் மனநிம்மதி கிடைப்பதுடன் செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது, ஏழுகடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலந்த “சப்தசாகர தீர்த்தம்” தென்னகத்தில் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் இருப்பதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவபூஜை செய்து இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி மனநிம்மதி அடைந்தாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றது ஒரு மாசிமக நாளாகும். எனவே இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடுவதால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.

 

  • சிவபெருமானுக்கு முருகன் பிரணவத்தை உபதேசித்ததும் ஒரு மாசி மகத்தன்று தான். திருச்செந்தூரில் செந்திலாண்டவருக்கு மாசித் திருவிழா சிறப்பாக நடைபெறும். அவ்வமயம், உருகு சட்ட சேவை, பச்சை, சிவப்பு, வெள்ளை சார்த்துதல் முதலிய விழாக்கள் நடைபெறும்.

 

  • இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டார்.

 

  • இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது.

 

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்-614208. வலங்கைமான்

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 94 885 88 450

 

அமைவிடம்:

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் கும்பகோணம் ரோட்டில் பாபநாசத்திற்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் வாழைப்பழக்கடை என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

2 + 11 =