December 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாற்கடல்

  1. அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ரங்கநாதர்

தாயார்          :     கடல்மகள் நாச்சியார்

தீர்த்தம்         :     சரஸ்வதி தீர்த்தம்

ஊர்             :     திருப்பாற்கடல்

மாவட்டம்       :     வேலூர்

 

ஸ்தல வரலாறு:

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர்; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் பிரம்மாவுக்கு ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவமே திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது. கர்வம் என்பது நமக்கெல்லாம் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலக உயிர்களுக்கான பாடம் அரங்கேறும் விளையாட்டு நிகழும். ஒரு கட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் நிறுத்தி, யாகம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தார். மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதானே மரபு! எனவே, சரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைக்க… கர்வத்துடன் திரிவது கணவனேயானாலும் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லி, வர மறுத்தாள்.

உடனே, சாவித்திரியையும் காயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார் பிரம்மா. இதில் ஆவேசமானாள் சரஸ்வதி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்து, யாகம் நடைபெறும் இடத்தையே தண்ணீரில் மூழ்கச் செய்வது எனத் திட்டமிட்டாள். பூமிக்கு வந்தவள், நதியானாள். கடும் உக்கிரத்துடன் மிக வேகமாகப் பாய்ந்து வந்தாள். இதனால், அந்த நதிக்கு, வேகவதி எனப் பெயர் அமைந்தது. மனிதர்கள்தான் இனமும் குணமும் பார்ப்பார்கள். எந்தப் பாகுபாடுகளும் இன்றி, ஆட்கொள்பவன் ஆண்டவன் மட்டுமே! ஆகவே பிரம்மாவின் யாகத்தையும், அதனைக் கலைக்க சரஸ்வதிதேவி, நதியாக உருவெடுத்து வந்திருப்பதையும் அறிந்த திருமால், தன் பக்தனுக்கு வந்த சோதனையை முறியடிக்கத் திருவுளம் கொண்டார். யாகம் நடைபெறும் இடத்தை நோக்கி, சீறிப் பாய்ந்தபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த வேகவதி நதிக்கு முன்னே.. தன் ஆதிசேஷனின் பிரமாண்டமான திருவுருவத்தை அப்படியே அணையாக்கிக் கொண்டு, அந்த ஆதிஷேசன் மீது மிக ஒய்யாரமாகச் சயனித்திருந்தார் திருமால். திருப்பாற்கடலில் சயனித்துள்ளதைப் போலவே எதிரில் வீற்றிருக்கும் பிரமாண்ட ஆதிசேஷனையும் பரம்பொருள் திருமாலையும் கடந்து வேகவதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தன் தவற்றை உணர்ந்தாள். கணவரிடமும் கடவுளிடமும் மானசீகமாக மன்னிப்பு வேண்டினாள். திருமாலும் பிரம்மனுக்குத் திருக்காட்சி தந்தார். அவரிடம், எனக்கு அருளியது போல், பூவுலகத்து மனிதர்கள் யாவருக்கும் இந்த ÷க்ஷத்திரத்தில் இருந்து அருள்பாலியுங்கள் சுவாமி என்று வேண்டினார் பிரம்மன். அதை ஏற்று, இன்றும் அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார் பரந்தாமன்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்குள்ள இறைவனின் மூர்த்தம் அத்தி மரத்தால் செய்யப்பட்டிருப்பது தலத்தின் சிறப்பு.

 

  • ஆதிசேஷனின் மேல் சயனித்த திருக்கோலத்தில், சுமார் 9 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார்

 

  • ஸ்ரீரங்கநாதர். அத்தி மரத்தாலான மூர்த்தமாக சேவை சாதிக்கிறார். அத்தி ரங்க தரிசனம், பாவ வினைகளை எல்லாம் போக்கும் என்பர். சித்ரகுப்தன், அத்தி மர சமித்துகளைக் கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருக்கிறார். எனவே, திருப்பாற்கடல் தலத்துக்கு வந்து, ஸ்ரீரங்கநாதரை பிரார்த்திக்க, சித்ரகுப்தன் எழுதி வைத்துள்ள மொத்தப் பாவக் கணக்குகளும் நீங்கும்; வைகுண்டப் பதவியை அடையலாம் என்று நிகமாந்த மகாதேசிகர் தனது மெய்விரத மான்யத்தில் அருளிச் சென்றுள்ளார். நாராயண சதுர்வேதிமங்கலம் என ஆதியில் அழைக்கப்பட்டு, தற்போது திருப்பாற்கடல் என அழைக்கப்படுகிறது.

 

  • வேகநதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்து கொண்டு இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ரங்கநாதர்’ என்ற பெயர் வந்தது.

 

  • ரங்கநாயகி தாயார் அற்புதமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். பன்னிரு கரங்கள் கொண்டு விளங்கும் இந்த அன்னையின் முன் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரையும், மற்ற கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கியும் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகி தாயாருக்கு ‘பெரிய பிராட்டி’ என்ற பெயர் உண்டு. அதாவது ‘எல்லாத் தாயார்களுக்கும் பெரியவர் அல்லது மூத்தவர்’ என்று பொருள். திருப்பாற்கடல் ரங்கநாயகி தாயாரும், ஸ்ரீரங்கம் தாயார் போல ‘பெரிய பிராட்டி’யாகவே காட்சி தருகிறார்.

 

  • பொதுவாக தாய்மார்களுக்கு பெற்ற மகன்களை விட, மகள்கள் இடத்தில்தான் பாசம் போகும் என்பார்கள். அதேபோல தான் இந்த தாயாருக்கு பெண்கள் இடத்தில் அதிக பாசம் உண்டு.

 

  • மூலவர் ஆனந்த சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க, பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும்.

 

  • சப்தக விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார் திருமால்.

 

  • சப்த ரிஷிகளும் இங்கு வாசம் செய்து, பரம்பொருளை வழிபடுவதாக ஐதீகம்.

 

திருவிழா: 

ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி மாதப் பிறப்புகள்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 8 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்,

திருப்பாற்கடல்,

வேலூர் மாவட்டம்.

 

அமைவிடம்:

சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாற்கடல் எனும் திருத்தலம். காவேரிப்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

3 × three =