January 03 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமூர்த்தீஸ்வரம்

  1. அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     உச்சிஷ்ட கணபதி

தல விருட்சம்   :     வன்னிமரம், பனைமரம்

தீர்த்தம்         :     ரிஷி தீர்த்தம், சூத்ரபாத தீர்த்தம்

ஊர்            :     மணிமூர்த்தீஸ்வரம்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் வித்யாகரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் படைக்கும் கடவுளான நான்முகனை வேண்டி கடுமையான தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இறங்கிய பிரம்ம தேவரும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து கேட்கும் வரத்தை அளிப்பதாக கூறி அருளுகிறார். அதற்கு வித்யாகரன் தனக்கு அழிவே இல்லாதபடி சாகா வரம் வேண்டும் என கேட்கிறான். அதற்கு பிரம்ம தேவரோ சாகா வரம் என்பதை யாருக்கும் வழங்க முடியாது எனக் கூறி வேறு வரம் கேட்கக் கூறுகிறார். தனக்கு எப்போதும் அழிவு நேர்ந்து விடக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்த வித்யாகரன், சமயோஜிதமாக யோசித்து ஒரு வரம் கேட்கிறான். அதாவது, ‘தனக்கு மனிதனாக பிறந்தவனாலோ, , மிருகங்களாலோ, அகோரமானவர்களாலோஅழிவு இருக்கக் கூடாது. தன்னை அழிப்பவன் தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடன் போர் புரிய வேண்டும் என்றும், அதே நேரம் அவன், ஒரு பெண்ணோடு இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்’ என கேட்கிறான். பிரம்ம தேவரும் அவ்வாறே ஆகட்டும் என வரமளித்து விடுகிறார். அவனுடைய எண்ணமானது அப்படி ஒரு நிலையில் தன்னை யாரும் எதிர்க்க வர மாட்டார்கள் என்பதே ஆகும்.

அடுத்து வரத்தை பெற்ற வித்யாகரன் சும்மா இருப்பானா?, தன்னை வெல்ல யாரும் இல்லை, தனக்கு அழிவே இல்லை என்ற தலைக் கணத்துடன் வானுலகத்து தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களை சித்ரவதை செய்து வந்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அனைவரும் ஒன்று கூடி மும்மூர்த்திகளாகிய சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் முறையிட்டனர். பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி தேவர்கள் அசுரர்களை அழிக்க, விநாயகப் பெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அவர்களின் யாகத்தை ஏற்ற விநாயகப் பெருமான் அந்த யாக குண்ட அக்னியிலிருந்து கோடி சூர்ய பிரகாசம் கொண்டவராய் தோன்றினார். அது போல பூவுலகத்தில் பிரம்மாவின் ஆலோசனைப்படி பதங்க முனிவர் தலைமையில் அனைத்து முனிவர்களும் ஒரு யாகத்தை நடத்திட, அந்த யாக குண்ட அக்னியிலிருந்து இருந்து நீலவேணி என்னும் சக்தி வெளிப்பட்டாள். பின்னர் அக்னியில் தோன்றிய விநாயகருக்கு, நீலவேணி தேவியை திருமணம் செய்து வைத்தனர்.

இப்போது மூம்மூர்த்திகளாகிய சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோர் தேவர்களின் தலைவனான இந்திரனை அழைத்து வித்யாகரனை போருக்கு அழைத்திடும்படி கூறுகின்றனர். அவ்வாறே தேவேந்திரனும், வித்யாகரனை போருக்கு அழைக்கின்றான். அதனைக் கண்ட வித்யாகரன் கடுங் கோபத்தோடு போர்க் களத்திற்கு வந்தான். அவன் போருக்கு வந்த போது விநாயகர், தனது மனைவியான நீலவேணியை தன் மடி மீது அமர்த்திய நிலையில், தன் இரு கைகளால் அணைத்து, துதிக்கையை தேவியின் மடியில் வைத்தபடி இருக்க, அந்த நேரத்தில் வித்யாகரன் அங்கு வந்து தொந்தரவு செய்திட, வெகுண்டெழுந்த விநாயகப் பெருமான், தன் தேவியோடு மகிழ்ந்திருந்த நிலையிலேயே கோடி சூர்ய பிரகாசத்தோடு அவனை உற்று நோக்க, அந்த ஒளிக் கதிரின் வீச்சு தாங்காமல் வித்யாகரன் பொசுங்கி விடுகிறான். விதுயாகரனின் அழிவை கண்ட தேவர்கள் வானிலிருந்து பூ மழை பொழிந்து விநாயகப் பெருமானை துதித்தார்கள். வித்யாகரன் வாங்கிய வரத்தின் படி அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே விநாயகப் பெருமான், தன் தேவியை மடியில் இருத்திய படியே யாருடைய உதவியும் இல்லாமல், தன் பார்வையினாலேயே அவனை வதம் செய்கிறார்.

இதனை தரிசித்த முனிவர்கள், விநாயகரிடம், நீலவேணி தேவியை மடியில் இருத்திய கோலத்துடன், என்றும் தாங்கள் யாகம் புரிந்த தாமிரபரணி நதிக்கரையின் ரிஷி தீர்த்தக் கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும் என விண்ணப்பிக்க, அதன்படியே விநாயகரும் அங்கே கோவில் கொண்டு அருள்பாலித்து வருவதாக வரலாறு அறியப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • உலகம் முழுவதும் சைவ வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும் அங்கு விநாயகப்பெருமானுக்கு ஒரு சந்நிதி நிச்சயம் இருக்கும். முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னே அந்தந்தக் கோயிலின் மூலவரை வழிபடுவது வழக்கம். அப்படிப்பட்ட விநாயகருக்கு என்று அமைந்திருக்கும் தனித்துவமான ஆலயங்கள் பல அப்படிப்பட்ட ஆலயங்களில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம்.

 

  • இந்த ஆலயம் 900 வருடங்கள் பழைமை வாய்ந்தது. ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில் நீளம் சுமார் 80 மீட்டர். அகலம் 40 மீட்டர். மூன்று பிராகாரங்கள்… எட்டு மண்டபங்கள்… என பிரமாண்டமாகப் பரந்துவிரிந்து காணப்படுகிறது இந்த ஆலயம்.

 

  • இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானுக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. தன் தேவியான வல்லபையைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கும் இறைவனின் திருவடிவம்

 

  • கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி’ அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

 

  • முன்பெல்லாம் நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இங்கும் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் ‘மணிமூர்த்தீஸ்வரம்’ என்று வழங்கலாயிற்று.

 

  • கிழக்கு நோக்கிய கருவறையில் விநாயகப் பெருமான், நான்கு கரங்களுடன், தன் தேவியான நீலவேணி அம்மையை மடியில் இருத்தி, அவரை அணைத்தபடியும், அவரது மடி மீது தனது துதிக்கையை வைத்த படி அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். இவருக்கு மூர்த்தி விநாயகர் என்ற பெயரும் இங்கு விளங்குகிறது.

 

  • இங்கு விநாயகப் பெருமான் 32 வடிவங்களில் காட்சியளிக்கிறார். அந்த 32 வடிவங்கள்., 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. திரியாட்சர கணபதி, 20. க்ஷிப்ர பிரசாத கணபதி, 21. ஹரித்திரா கணபதி, 22. ஏக தந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருண மோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29.சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்கா கணபதி, 32.சங்கடஹர கணபதி.

 

  • தாமிரபரணியின் ரிஷி தீர்த்தக் கட்டத்தின் மேற்கு கரையில், கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது உச்சிஷ்ட கணபதி திருக்கோவில். ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் சிறப்பாக விளங்கும் இக் கோவிலுக்குள் நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் நேராக கருவறை. கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனி சன்னதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள்.

 

  • திருக்கோவில் உள் சுற்று பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், காந்திமதி அம்மை சன்னதி மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியும் இருக்கின்றன. இதற்கு அடுத்த வெளிப் பிரகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர் சன்னதியும், வட மேற்கு மூலையில் சுப்பிரமணியர் சன்னதியும், வடஙகிரக்கு மூலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

 

  • முற்காலத்தில் மிக பிரம்மாண்டமாக இருந்த கோவில், காலப் போக்கில் சிதிலமடைந்து விட, தற்போது சில வருடங்களுக்கு முன்னர் ராஜ கோபுரம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இருந்தும் இன்னும் பிரகாரத்தின் கோட்டைச் சுவர்கள் மற்றும் முன் மண்டபங்கள் சிதிலமடைந்தே காணப்படுகிறது.

 

  • விநாயகப் பெருமானுக்கென ராஜ கோபுரம், கொடி மரம் ஆகியவற்றுடன் தனிப் பெருங் கோவிலாக அமையப் பெற்றுள்ளது இந்த கோவில்.

 

  • இங்கு மூன்று சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளனர்.

 

  • இங்கு சண்டிகேசுவரர் சன்னதியிலும் விநாயகரே சண்டிகேசுவரராக காட்சியளிக்கிறார்.

 

  • இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

  • கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது. (சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை.

 

  • உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப் பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார். நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன. ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில். ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே.

 

திருவிழா: 

விநாயகர் சதுர்த்தி.

இங்கு தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாள் கணபதி ஹோமத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை இத் தல மூலவர் உச்சிஷ்ட கணபதியின் மீது சூரியனின் ஒளிக் கதிர்கள் விழும். சூரிய பகவான் அன்று விநாயகரை பூஜை செய்வதாக ஜதீகம்.

இங்கு ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொடி ஏற்றமாகி பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

இது தவிர மாதாந்திர தமிழ் மாத பிறப்பு, சங்கடகர சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்,

மணிமூர்த்தீஸ்வரம்

திருநெல்வேலி 627 001.

 

போன்:    

+91 94433 68596, 94431 57065

 

அமைவிடம்:

நெல்லை மாநகர்., சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 3.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவில். மதுரையில் இருந்து செல்பவர்கள் திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் திரும்பி ஒரு கி.மீ., சென்றதும், மேகலிங்கபுரம் திருப்பம் வரும். அங்கே கோயிலுக்குச் செல்வதற்கான வழிகாட்டி பலகை இருக்கிறது. அவ்வழியே சென்றால், தாமிரபரணி நதிக்கரையில் கோயில் இருப்பதைக் காணலாம்.

Share this:

Write a Reply or Comment

eighteen − four =