January 05 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நஞ்சன்கூடு

  1. அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நஞ்சுண்டேஸ்வரர்

உற்சவர்        :     சந்திரசேகரர்

அம்மன்         :     பார்வதி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     முந்நதி சங்கமம்

ஊர்             :     நஞ்சன்கூடு

மாவட்டம்       :     மைசூரு

மாநிலம்        :     கர்நாடகா

 

ஸ்தல வரலாறு:

கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக தேவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைந்தனர். சிவனும் தேவர்களும் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார். தேவர்கள் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்ற பெயர்  கொண்ட மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும், அந்த யாகத்திற்கு அசுரனை அழைத்து யாக குண்டத்தில் வீழ்த்தி வதம் செய்ய ஒரு நாடகத்தை திட்டம் தீட்டினர். அதுபடியே யாகமும் நடந்தது. அசுரனும் அந்த யாகத்திற்கு வருகை தந்தான். அந்த அசுரனை தேவர்கள் வரவேற்பது போல நாடகம் ஒன்றினை அரங்கேற்றி, தக்க சமயத்தில் யாககுண்டத்தில் உள்ள நெருப்பில் அசுரனை தள்ளி விட்டனர். அப்போது சிவன் அக்னி வடிவில் மாறி, விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கி விட்டார். இதனால் தேவர்கள் அந்த இடத்திலேயே சிவபெருமானை மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் சிவபெருமான் அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தார். விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கியதால் இந்த ஈஸ்வரனுக்கு ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

சிறிது நாட்களுக்குப் பின்பு இயற்கை சீற்றத்தினால் இந்த லிங்கமானது மறைந்துவிட்டது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டி பரசுராமர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வந்தார். ஆனால் லிங்கம் அந்த இடத்தில் இல்லை. செய்வதறியாது தவித்த பரசுராமர் அந்த இடத்திலிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்ய தொடங்கினார். அந்த சமயம் ஓரு இடத்தில் செடியை வெட்டிய போது, அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்தது. பயந்துபோன பரசுராமர் செடிகளை விலக்கி பார்த்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்ததை அறிந்துகொண்டார். செய்த தவறுக்கு மன்னிப்பை சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார். அந்த சமயம் சிவபெருமான் பரசுராமருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் அளித்தார். அதன்பின்பு பரசுராமரால் இந்த லிங்கம் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரசுராமரின் கையால் வெட்டிய காயமானது இன்றுவரை சிவலிங்கத்தில் தெரிகிறது.

 

தாட்சாயினியின்(பார்வதி) தந்தைதான் தட்சன். தட்சன் ஒருமுறை தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தையிடம், ‘தன் கணவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்துவது தவறு என்று கூறி யாகத்தை நிறுத்தும்படி சொன்னாள் தாட்சாயிணி. இதனால் கோபமடைந்த தட்சன் தாட்சாயணியை அந்த இடத்திலேயே அவமானப்படுத்தி விட்டார். அவமானத்தை தாங்க முடியாத தாட்சாயணி யாககுண்டத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனை அறிந்து கொண்ட சிவபெருமான் தன் கோபத்தை ஒன்றாக்கி வீரபத்திரரை உருவாக்கினார். அந்த வீரபத்திரர் கோபத்தோடு யாகம் நடந்த இடத்திற்கு சென்று, தட்சனின் தலையை துண்டித்து, யாககுண்டத்திலிருந்து தாட்சாயணியை  தூக்கிக்கொண்டு கோரதாண்டவம் ஆடினார். இந்நிலையில் செய்வது என்னவென்று அறியாமல் இருந்த தட்சனின் மனைவி பிரசுத்தா தேவி, சிவனிடம் தஞ்சம் அடைந்தாள். தன் கணவரையும், மகளையும் உயிர்ப்பித்து தர வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தட்சனையும், தாட்சாயிணியையும், மீண்டும் உயிர்பெறச் செய்தார். தாய் தந்தையர் இருவரும் சேர்ந்து தாட்சாயணியுடன் காட்சி தந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வீரபத்திரர், தாட்சாயிணியுடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார் என்பதாக கூறுகிறது வரலாறு.

 

கோயில் சிறப்புகள்:

  • நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.

 

  • அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

  • பெருமாள் அலங்கார பிரியர் என்றால், சிவன் அபிஷேகப் பிரியர். சிவ பெருமானுக்கு பொதுவாக 11 பொருட்களால் அலங்காரம் செய்யப்படும். ஆனால் இந்த அபிஷேகங்களை விட ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் சிவனுக்கு அன்னத்தால் நடத்தப்படும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது சகல விதமான பாவங்களையும் போக்கக் கூடியது என்றும், அன்றைய தினம் ஒவ்வொரு சோற்றின் பருக்கையிலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக சொல்லப்படுவதால் அன்னாபிஷேக தரிசனம் கண்டால் ஒரே சமயத்தில் கோடான கோடி லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பார்கள்.

 

  • இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ‘சுகண்டித சர்க்கரை’ என்ற பெயரில் பிரசாதமாக அந்த சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மகரிஷி முனிவர் உச்சிக்கால பூஜையை செய்ய வருவதாக ஐதீகம் ஒன்று உண்டு. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை ‘ராஜ வைத்தியர்’ என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

 

  • அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இருவரது சன்னதிக்கு மத்தியில் நாராயணர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆவணி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இவரது திருமணத்தை சிவன், முன்னின்று நடத்தி வைப்பார். இதேபோல சிவ, பார்வதி திருமணத்தை இந்த பெருமாள் முன்னின்று நடத்தி வைக்கிறார்.

 

  • கோடை காலத்தில் சிவன், அம்பாள் இருவரும் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று, விமானத்தை சுற்றி வருகின்றனர். விமானத்தின் இருபுறமும், இரண்டு வில்வ மரங்கள் இருப்பது சிறப்பு.

 

  • இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்கவேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வீரபத்திரரின் வலது பக்கத்தில் தட்சன் இருக்கின்றார். அதாவது வீரபத்திரர், தாட்சாயணி, தட்சன் இவர்கள் மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றவாறு காட்சி தருகின்றனர்.

 

  • . நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவ பெருமான், ஆலகால விஷத்தை குடித்தது கதை அல்ல நிஜம் என்பது உணர்த்தும் சாட்சியாக இக்கோவில் அமைந்துள்ளது. பல சிறப்புக்களைக் கொண்ட இக்கோவில் பற்றி சிவ புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் அமைந்துள்ள புண்ணிய தலங்களில் ஓன்றாகும்.

 

  • தட்சிண காசி என காசிக்கு இணையான தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் தலமாக நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நோய் தீர்க்கும் தலமாகவும் அமைந்துள்ளதால் கர்நாடக மக்களிடம் இக்கோவில் மிகவும் பிரபலம்.

 

  • பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை போல் இந்த லிங்கமும் பலவிதமான நோய்களை தீர்க்கக் கூடியது என சொல்லப்படுகிறது. வியக்க வைக்கும் பல ஆச்சரியங்கள், புராண கதைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்த்துவதற்கு சான்றாக அமைந்துள்ள இந்த சிவன் கோவில் கர்நாடக மாநிலம் மைசூர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தான். இக்கோவில் தக்சிணகாசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் ஒவ்வொரு சிறப்பும் ஒரு தனிக்கதை சொல்வதாக அமைகிறது.

 

  • ஒன்பது அடுக்குகளைக் கொண்ட 120 அடி ராஜ கோபுரத்தைக் கொண்ட இக்கோவிலில் பரசுராமருக்கும் தனி சன்னதி உள்ளது. இக்கோவில் கபிலா என்ற நதியின் கரையில் அமைந்துள்ளது. இது காவிரியின் கிளை நதியாகும்.

 

  • இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது. இதுதவிர, கோயில் பிரகாரத்தில் அலங்கார நந்தி வெளியே பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறது. பிரதோஷத்தன்று இந்த நந்திக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

 

  • நஞ்சன்கூடு நகரம் பற்றிய சில தகவல்கள் இந்த நகரத்தின் முக்கிய தெய்வமாகிய நஞ்சுண்டேஸ்வரரின் பெயரிலேயே இது நஞ்சன்கூடு என்றழைக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள உயிர்களைக் காப்பதற்காக ஆலாகால விஷத்தை அருந்திய சிவபெருமான் இங்கு நஞ்சுண்டேஸ்வர அவதாரமாக குடிகொண்டுள்ளார். மேலும் இந்த நஞ்சன்கூடு ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு பிணிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம்.

 

  • ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம் மற்றும் பரசுராம க்ஷேத்திரம் என்ற இரண்டு ஆன்மிக ஸ்தலங்களும் நஞ்சன்கூடு நகரத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் பிரசித்தமான சிலையை இங்கு நஞ்சன்கூடு மடத்தில் காணலாம்.

 

திருவிழா: 

கார்த்திகை, பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் சிவன், ஆவணியில் பெருமாள் திருக்கல்யாண விழா.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்,

நஞ்சன்கூடு – 571 301,

மைசூரு,

கர்நாடக மாநிலம்.

 

போன்:

+91- 8221 – 226 245, 225 445, 227 239, 94487 50346, 99804 15727.

 

அமைவிடம்:

மைசூருவில் இருந்து கோவை செல்லும் வழியில் 23 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.

Share this:

Write a Reply or Comment

sixteen − six =