January 09 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மண்ணச்சநல்லூர்

345.அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பூமிநாதர்

அம்மன்         :     அறம்வளர்த்த நாயகி

தல விருட்சம்   :     வில்வம், வன்னி மரம்.

ஊர்             :     மண்ணச்சநல்லூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் எழுந்தார். அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதனை தடுத்து, பூமியில் குப்புறத் தள்ளி, பூதத்தை அழுத்திப்பிடித்து எழ முடியாதபடி செய்தனர். கவிழ்ந்த தலையுடன் பூமியில் குப்புறப்படுத்த நிலையில் உள்ள பூதம், தேவர்களிடம் எனக்கு பசிக்கிறது! நீங்கள் அழுத்திப் பிடித்துள்ளதால் என்னால் உணவு தேடிபோக முடியாது. நீங்களே உணவளியுங்கள், என்றது. பூதமே! பூலோகமக்கள் வீடு, கட்டடம் கட்டும் முன், மனைப் பகுதியில் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும். பிரம்மன் முதலான 45 தேவர்களின் சக்தி உன்னை அழுத்திப் பிடித்திருக்கும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒன்றரை நாழிகை (36 நிமிடம்) நேரம் எழ அனுமதி தரப்படும். உனக்கு வாஸ்துபுருஷன் என்று பெயரிடுகிறோம். நீ எழும் நேரத்தில் மக்கள் மனை பூஜை செய்வர். அப்போது உனக்கு உணவும் அளிப்பர். அதற்கு நன்றிக்கடனாக, அவர்கள் எழுப்பும் வீடு, கட்டடங்களை நல்ல முறையில் எவ்வித குற்றம் குறையும் இல்லாமலும், தடையில்லாமலும் முடித்து தர வேண்டும், என்றனர். பூதமும் சம்மதித்தது. அச்சத்தைத் தரும் பூதத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், மண்ணைப் பாதுகாக்கும் தேவதையாக விளங்கியதால், இந்த பூதம் பிறந்த இடத்துக்கு மண்ணச்சநல்லூர் என்று பெயர் தோன்றியது. வாஸ்து பூதத்தை உருவாக்கிய சிவனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு பூமிநாதர் என்று பெயர் ஏற்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார்.

 

  • சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார்.

 

  • முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர்.

 

  • பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன.

 

  • கொள்ளிடம் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது இப்பகுதியிலிருந்து மண்ணைக் கொண்டு சென்று, அணைப்பு ஏற்படுத்தியதால் ஊரின் பெயர் மண் அணைத்தநல்லூர் என்றிருந்ததாகவும், காலப்போக்கில் அது மருவி மண்ணச்சநல்லூர் என்று ஆனதாகவும் கூறுவர்.

 

  • கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் லிங்கத் திருமேனியில் பூமிநாத சுவாமி கிழக்கு நோக்கி  எழுந்தருளியுள்ளார்.

 

  • கோயிலின் மகா மண்டப நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் தர்மசம்வர்த்தினி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.  இந்த அன்னையின் முன்பு மகாமேரு  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமர விநாயகரும், நந்தியெம்பெருமானும்  காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடிமர பலிபீடம் உள்ளது.

 

  • மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் மாறுபட்டிருப்பது தல விருட்சத்தில்தான். இக்கோயிலில்  வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.

 

  • நெருப்பு, நீர், காற்று, ஆகாயம், மண் என ஐந்து பூதங்களுக்கும் தலைவன் ஈசன். ஒவ்வொரு பூதத்துக்கும் தலைவனாக இவன் அருளும் பஞ்சபூத தலங்களும் தமிழகத்தில் அநேகம் உண்டு. இதில் மண்ணுக்குரிய தலமாக காஞ்சியும், திருவாரூரும் முக்கிய தலமாக இருக்கின்றன. திருச்சியில் இந்த மண்ணச்சநல்லூர் உள்ளது. ஈசனே இங்கு பூமிக்குரிய நாயகனாக இருக்கிறார்

 

திருவிழா: 

வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் மிகுந்த சிறப்புடன் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பர். இதில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விசேஷமானது.

மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மகா ருத்ரயாகம் நடைபெறும். உலக நன்மைக்காகவும், அனைத்து சௌந்தர்யங்களும் கிடைக்க வேண்டியும், இயற்கை செழிக்கவும், அனைத்து ஜீவராசிகளும் பசி, பட்டினியின்றி வாழவும், எல்லா நன்மைகள் பெறவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. 1008 மூலிகைகள், தானியங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் நடைபெறும் மகா ருத்ரயாகத்தில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்

மண்ணச்சநல்லூர்

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91 93447-69294

 

அமைவிடம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது.  திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் தாண்டி 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

1 × three =