அருள்மிகு தசாவதார திருக்கோயில் வரலாறு
மூலவர் : பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன.(தசாவதாரம்)
உற்சவர் : லட்சுமி நாராயணர்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் மதிற்சுவர் கட்டுமானப் பணிகளை செவ்வனே செய்து வந்தார், திருமங்கை ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நான்காவது மதில் சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று என்பது பெயர். இந்த மதில் சுவரைக் கட்டியர் சுவாமி திருமங்கை ஆழ்வார். இதற்காக அவர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார். திருமால் மீது அதீத பக்தி கொண்ட திருமங்கை ஆழ்வாருக்கு, ஓர் ஆசை. திருமாலின் 9 அவதாரங்களையும் ஒரே சமயத்தில் தரிசிக்க விரும்பினார். கொஞ்சம் பேராசை தான். தன்னுடைய ஆசையை நிறைவேற்றும்படி திருமாலிடம் வேண்டினார். மனம் உருக பிரார்த்தனை செய்தார். தன் பக்தனின் வேண்டுதலால், திருமாலின் மனம் இரங்கியது. திருமங்கை ஆழ்வாருக்கு, அவர் விரும்பியபடியே 9 அவதாரங்களிலும் தரி சனம் தந்தார். அது மட்டுமல்ல 10-வது அவதாரமான கல்கி அவதாரம் எப்படி இருக்கும் என்பதையும் அவருக்கு காட்டி அருளினார். தசாவதார காட்சியை கண்ட திருமங்கை ஆழ்வார், கன்னீர் மல்க இறைவனை துதித்தார். பக்தி பரவசத்தில் ‘பிறவி எடுத்த பயன் கிடைத்துவிட்டது’ என மகிழ்ந்தார்.
கோயில் சிறப்புகள்:
- திருமால் தன்னுடைய தசாவதார காட்சியை திருமங்கை ஆழ்வாருக்கு காட்டியருளிய இடமே ஸ்ரீரங்கத்தில் உள்ள தசாவதார கோவில் ஆகும்.
- கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம், அதன் வலதுபுறம் அகோபில மட ஸ்தாபகரின் திருமேனி தனி சன்னிதியில் உள்ளது.
- தனி சன்னிதியில் திருமங்கை ஆழ்வாரின் திருமேனி இருக்கிறது. அவரது இருபுறம் நம்மாழ்வார் மற்றும் உடையவரும், அருகே திருமங்கை ஆழ்வாரின் உற்சவ விக்கிரகமும் காணப்படுகின்றன. தனி மண்டபத்தில் அரங்கநாதரின் வாதுகை பற்றி 1008 ஸ்லோகங்களை இயற்றிய வேதாந்த தேசிகரின் திருமேனி இருக்கிறது.
- கருவறையில், திருமாலின் தசாவதார திருமேனிகள் ஒரே வரிசையில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளன. திருமால் கடைசியாக எடுக்க உள்ள கல்கி அவதாரத்தையும் சேர்த்து 10 மூலவர்கள், ஒரே இடத்தில் சேவை சாதிப்பது எங்கும் காணக்கிடக்காத காட்சி ஆகும்.
- மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என நான்கு அவதாரங்களிலும் திருமால் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். வாமனரின் வலது கை தானம் வாங்குவது போலவும், இடது கையில் குடையுடனும் காட்சி தருகிறார். பரசுராமர் வலது கரத்தில் கோடாரியுடனும், ராமபிரான் வில் அம்புடனும், பலராமர் கலப்பையுடனும் காட்சி தருகின்றனர். ஒரு கையை நாட்டிய பாவத்தில் வைத்தபடியும், மற்றொரு கையில் வெண்ணெயுடனும் கிருஷ்ணர் வீற்றிருக்கிறார்.
- கல்கி பகவான் அவதாரம் கருவறையின் கடைசியில் அமைந்துள்ளது. கல்கி பகவான் வலது கரத்தில் கத்தியும், இடது கரத்தில் கேடயமும் தாங்கி, குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். கருவறையின் வடக்கில் சேனாதிபதி விஸ்வசேனர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
- கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது சிறப்பு.
- கருவறையில் 10 மூலவர்கள் இருந்தாலும் உற்சவர் ஒருவர் தான். லட்சுமி நாராயணன் மூலவராய் வீற்றிருக்க, அவர் முன் உற்சவ மூர்த்தமாகவும் சேவை சாதிக்கிறார். அவரது வலது கை வரத ஹஸ்த முத்திரையுடன் இருக்க, மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை இடக்கையால் அனைத்துக் கொண்டிருக்கிறார். உற்சவர் பீடத்தை சுற்றி எட்டு சிம்மங்கள் உள்ளன.
- அகோபில மடத்து ஜீயர்களால் தினசரி ஆராதனைகள் சிறப்பாக நடை பெறுகிறது.
திருவிழா:
கார்த்திகை மாதம் 5 நாட்கள் திருமங்கை ஆழ்வாரின் அவதார உற்சவம் கொண்டாடப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி மாதப் பிறப்புகள், தீபாவளி நாட்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. அன்று லட்சுமி நாராயணர் திருச்சுற்றில் மட்டும் உலா வருவார். தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் லட்சுமி நாராயணர் மற்றும் தாயார் சேவை சாதிக்க ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தசாவதாரக் கோயில்,
கொள்ளிடம் ஆற்றங்கரை,
ஸ்ரீரங்கம்-620 006,
திருச்சி மாவட்டம்.
போன்:
+91-431- 243 59 05
அமைவிடம்:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது இந்த ஆலயம். மேலூர் செல்லும் சாலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து 1½ கி.மீ. தூரத்தில் கோவில் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதியும், மினிபஸ் வசதியும் உண்டு. நெடுந்தெரு என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது.

