March 23 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லம்

  1. அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாதவப் பெருமாள்

தாயார்          :     கமலவள்ளி

புராண பெயர்    :     வல்லபபுரி

ஊர்             :     வல்லம்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து இருந்தது. அதில் நீரெடுக்க வந்த சிலர் கிணறை மாசுபடுத்தவே, அவர்களை கடிந்துகொண்டார் கவுதமர். அதனால் அவர் மீது பொறாமை கொண்ட அவர்கள், ஆசிரமத்தைவிட்டு அவரை விரட்ட வழி தேடினர். அதற்காக விசேஷ பூஜைகள் செய்து விநாயகரை வேண்டினர். வயதான இரு பசுக்களின் வடிவில் அங்கே தோன்றினார் கணபதி. ஆசிரமத்தின் அருகே கவுதமர் பயிரிட்டு இருந்த வயலில் புகுந்து மேய்ந்தன பசுக்கள். அதைக் கவுதமர், ஒரு தருப்பையை எடுத்து ஏவினார். உடனடியாக பசுக்களின் உடலில் இருந்து விநாயகர் வெளியேறி மறைய, இரு பசுக்களும் இறந்தவைபோல் விழுந்தன. அதைக் கண்ட பொறாமைக்காரர்கள், கவுதமர் பசுவதை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர். விரட்டினர். பாவம் தொலைவதற்காக சிவனை நோக்கி தவமிருந்தார், கவுதமர் காட்சி தந்த ஈசன், அவர் பிழைஏதும் செய்யவில்லை என்று சொல்லி, ஆசி தந்து அருளினார்.

அதோடு, விரைவில் அவரது ஆசிரமத்திற்கு நரசிம்மப் பெருமாள் எழுந்தருள்வார் என்றும் கூறி மறைந்தார். மனநிறைவோடு ஆசிரமம் திரும்பிய கவுதமர், தமது ஆசிரமத்தில் இருந்த மாதவப் பெருமாளை மனமுருகி வழிபட்டார். இந்த மாதவப் பெருமாள் கவுதமருக்கு இந்திரனால் அளிக்கப்பட்டவர். ஒரு சமயம் தேவராஜனான இந்திரன், வலன் எனும் அசுரனை முசுகுந்தச் சக்ரவர்த்தியின் உதவியுடன் வென்றான். துணை இருந்த முசுகுந்தருக்கு அன்பளிப்பாக தியாகேசர் வடிவைத் தருவதாகச் சொன்னவன், அதனை தர மனமின்றி ஏமாற்ற நினைத்தான். அதனால் அவனைப் பாவம் சூழ்ந்தது. பாவம் நீங்கிட சிவனைத் துதித்தான். அவரோ திருமாலை வழிபடச் சொன்னார். அதன்படி பூஜிக்க உகந்த தலத்தைத் தேடியவன், கவுதமர் இருந்த வனத்தில் ஓரிடத்தில் எழுந்தருளி இருந்த எம்பெருமானைக் கண்டு ஆராதித்தான். பாவ விமோசனம் பெற்றபின்னர், தான் ஆராதித்த விக்ரகத்தினை கவுதமரிடம் அளித்துச் சென்றான்.

தேவர்கோன் வழிபட்டதால், தேவாதிராஜன் என்றே அழைக்கப்பட்டார் பெருமாள். மாதவம் புரிந்தோர்க்கும் கிட்டாத பாக்யம் தனக்குக் கிட்டியதால் மகிழ்ந்த கவுதமர், தமது ஆசிரமத்தில் அப்பெருமாளை வைத்து மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் விசேஷமாக வழிபட்டு வந்தார். சிவபெருமான், நரசிம்மர் வருவார் என்று சொன்ன வார்த்தைகள் பலிக்கும் காலமும் வந்தது. நரசிம்ம அவதாரம் செய்த திருமால், இரண்யனை அழித்த பின்னர், அசுரர்களின் பிடியில் இருந்து அகிலத்தைக் காத்திட வலம் வந்தார். அப்போது வல்லாசுரன் என்னும் அரக்கன், மக்களைத் துன்புறுத்துவதை அறிந்து, அவன் தங்கியிருந்த கோட்டையை அழித்து, அவனையும்  மாய்த்து விட்டு அங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடினார். பின்னர் அங்கே இருந்த கவுதமரின் ஆசிரமத்திற்கு வந்து யோகத்தில் அமர்ந்தார். பெருமாளையும் நரசிம்மரையும் தரிசித்த தேவர்கள், முனிவர்கள் என யாவரும் அத்தலத்திலேயே தங்கி அருள வேண்ட, அப்படியே வரமளித்தனர். நரசிம்மரால் சம்ஹரிக்கப்பட்டபோது, வல்லாசுரன் கேட்டவரத்தின்படி அவன் பெயரால் வல்லம் என வழங்கப்பட்ட தலம், இன்றும் அதே பெயருடன் விளங்குகிறது. இது புராணம் கூறும் செய்தி.

 

கோயில் சிறப்புகள்:

  • மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

 

  • அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மர் உள்ளார்.

 

  • திருச்சுற்றில் ஆழ்வார் சன்னதிகளும், ஆண்டாள் சன்னதியும் உள்ளன.

 

  • கோயிலுக்குக் கிழக்கே கௌதம தீர்த்தம் உள்ளது

 

  • விக்கிரம சோழ மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டதால் விக்கிரம சோழ விண்ணகரம் என்ற பெயர் பெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. நரசிம்மர் சன்னதியின் சிறப்பின் காரணமாக இக்கோயில் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது.

 

  • கவுதம முனிவரின் பயிர்களை அழிக்க, விநாயகர் இரண்டு பசுக்களின் வடிவில் வந்ததால் இக்கோயிலில் இரண்டு விநாயகர்கள் இருக்கின்றனர்.

 

  • காலப்போக்கில் கோட்டை அழிந்து விட்டாலும் இன்றும் கோட்டை பெருமாள் கோயில், நரசிம்மர் கோயில் என்றே அழைக்கப்படும் இத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் மாதவப் பெருமாள் சேவைசாதிக்க தெற்கேபார்த்த திருவடிவுடன் தரிசனம் தருகிறார் யோக நரசிம்மர்.

 

  • கிழக்கு பார்த்து அமர்ந்து அருளும் மாதவப் பெருமாள் சன்னதிக்கு முன்பாக கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. மடைப்பள்ளி அருகே ராமபிரானின் திருவடிகள் உள்ளன.

 

  • கருவறை சுவரில் மாதவப் பெருமாளை வணங்கும் வகையில் தேவேந்திரனும், கவுதம முனிவரும் உள்ளன

 

  • வல்லத்தில் நரசிம்மர் கோயிலும் , நரசிம்மர் கோயிலுக்குள் தேவராசப் பெருமாள் கோயிலும் உள்ளன. நரசிம்மர் கோயிலுக்குத் தெற்கில் வச்சிரேஸ்வரர் கோயில்  உள்ளது . வல்லம் நகரின் நடுவில் சோழீஸ்வரர் கோயில் உள்ளது . வல்லத்துக்கு வடக்கில் ஆலக்குடி செல்லும் பாதையில் புகழ்பெற்ற ஏகௌரியம்மன் கோயில் உள்ளது . மேற்படி கோயில்களே அன்றித் தலபுராணத்தில் சுட்டப்படும் செல்வ விநாயகர் , சப்தகன்னியர் , நாக கன்னியர் கோயில்களுடன் வேறுசில விநாயகர் கோயில்களும் சுப்பிரமணியர் கோயிலும் முத்துக்கண் மாரியம்மன் கோயிலும் , மலைமேல் அய்யனார் கோயிலும் , பள்ளத்தூர் அய்யனார் கோயிலும் , அங்காளம்மன் கோயிலும் , இராமர் கோயிலும் வல்லத்தில் உள்ளன .

 

  • ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம் என்று கல்வெட்டுகளில் கூறியிருப்பதற்கேற்ப வல்லத்தில்  நீர்நிலைகள் உள்ளன . நரசிம்மப் பெருமாள் கோயிலை ஒட்டி  உள்ள குளத்தை வெள்ளைக்குளம் என மக்கள் அழைக்கின்றனர் . வல்லம் தலபுராணத்தில் இக்குளம் கௌதம தீர்த்தம் எனக் குறிக்கப்படுகிறது . வச்சிரேஸ்வரர் கோயிலையொட்டிக் கடினமான பாறையைக் குடைந்து வெட்டப்பட்ட வச்சிர தீர்த்தமாகும் . வச்சிரம் என்பது இந்திரனுடைய ஆயுதமாகும் . அவனால் தோற்றுவிக்கப்பட்டதாகத் தலபுராணம் குறிப்பிடுகிறது

 

திருவிழா: 

சித்திரை வருடப் பிறப்பு, நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், புரட்டாசி 4-ம் சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், கனுநாள், ஸ்ரீராமநவமி நாட்களில் விசேஷ ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 9 மணி வரை,

மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை.

 

முகவரி:  

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில்,

வல்லம்,

தஞ்சாவூர்.

 

போன்:    

+91 9943732491, 9790069745, 9976436133

 

அமைவிடம்:

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மருத்துவகல்லுõரி வழியாக வல்லம் செல்லும் நகர பஸ்சில் செல்லாம்

Share this:

Write a Reply or Comment

five × five =