March 30 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

  1. அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோடியம்மன்

உற்சவர்        :     பச்சைக்காளி, பவளக்காளி

புராண பெயர்    :     தஞ்சபுரி, அழகாபுரி

ஊர்             :     தஞ்சாவூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் அசுர படையினர், யாகத்தை அழித்தார்கள். இதனால் கோபம் அடைந்த முனிவர்களின் ஒருவரான பராசரர், அன்னை சக்திதேவியை வேண்டி தவம் இருந்தார். முனிவரின் தவத்தை ஏற்ற அன்னை ஆதிபராசக்தி, “கவலை வேண்டாம். அந்த அசுரனை வீழ்த்துவோம்.” என்று கூறி, அசுரனை போர்களத்தில் சந்தித்தார் ஆதிபராசக்தி. அன்னை மகாசக்தி, சாந்த சொரூபியாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருந்தார். போர் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்தது. அசுரனான தஞ்சனை அழித்தாலும் இறந்த பிறகும் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வந்தான். இப்படியே அந்த அசுரன் கோடி தடவை உயிர் பெற்றான். அம்மனும் அந்த அசுரனை அழிக்க கோடி அவதாரங்கள் எடுத்தாள்.

பொறுமையிழந்த ஆதிபராசக்தி, கடும் கோபம் அடைந்தாள். இதனால் அம்மனின் பச்சை மேனி நிறம் சிகப்பாக மாறியது.  இனி அவன் பிறவி எடுக்காதபடி வீழ்த்தினாள். தன் அழிவை உணர்ந்துக்கொண்ட தஞ்சன், இறக்கும் போது கோடியம்மனிடம், தாயே, என்னை மன்னித்து விடுங்கள். கோடி அவதாரங்கள் எடுத்து என்னிடம் தாங்களே போர் செய்த இந்த இடத்திற்கு, தஞ்சன் என்கிற என் பெயராவது நிலைக்க அருள் புரியுங்கள். என்று கேட்டுக்கொண்டான். அம்மனும் அசுரனின் விருப்பபடி, தஞ்சன் ஊர் என்று அழைக்கும் படி முனிவர்களிடம் உத்தரவிட்டார். தஞ்சன் ஊர் என்ற பெயர்தான் இப்போது தஞ்சாவூர் என்று மாறியது.

 

இந்த கோடியம்மன், சோழ மன்னருக்காகவும் கோடி அவதாரங்கள் எடுத்தார் என்ற தகவலும் இருக்கிறது.

சோழ நாட்டில் போதிய மழை இல்லாததால் விவசாயம் இல்லை. இதனால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. வறுமையும் தலைவிரித்தாடியது. அந்த நேரத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னருக்கும் உதங்கன் என்கிற ஒருவருக்கும் மோதல் இருந்தது. அதனால் உதங்கனை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் அரசர். இதனால் ஆத்திரம் அடைந்த உதங்கன், சோழ அரசனின் எதிரியான எதிர்நாட்டு அரசன் சத்துருகோபனிடம் சேர்ந்துக்கொண்டான். தற்போது சோழ நாட்டில் மழை இல்லை. அதனால் வளம் இன்றி நாடு வறுமையில் இருக்கிறது. இதுதான் சமயம், சோழநாட்டின் மீது படையெடுங்கள். வெற்றி உங்களுக்குதான். என்று எதிர்நாட்டு அரசன் சத்துருகோபனிடம் சொல்லி, சோழ மன்னருடன் தனக்கு இருந்த முன்விரோதத்தால் பழி தீர்க்க திட்டமிட்டான் உதங்கன்.

உதங்கன் சொல்வதும் சரிதான் என்று சத்துருகோபனும் சோழநாட்டை கைப்பற்ற வந்துக்கொண்டிருந்தான். இதை கேள்விபட்ட சோழ மன்னர், நாடே வறுமையில் இருக்கும் இந்த நேரத்தில், போர் செய்ய வருகிறானே சத்தருகோபன்.? இது முறையா? என்று கலக்கம் அடைந்தார். கோடியம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்தார் சோழ மன்னர். இதன் பயனாக அன்னை காளிதேவி சோழ மன்னரின் முன் தோன்றி, “கலங்க வேண்டாம். என் அருள் உனக்கு உண்டு.” என்று கூறி, போர்களத்தில் கோடி அவதாரங்கள் எடுத்து, எதிரிநாட்டு படை வீரர்களை ஒட ஒட விரட்டினாள் அன்னை. தன் நாட்டை காப்பாற்றி தந்த கோடியம்மனுக்கு ஆலயம் எழுப்பினார் சோழ மன்னர். தன் நாட்டுக்கு காவலாக இருந்து வெற்றியை தந்த கோடியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டார் மன்னர்.

 

கோயில் சிறப்புகள்:

  • தஞ்சாவூர் நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன. ராஜராஜன் நகரை விட்டு வெளியே செல்லும் போது, இந்த அம்மன்களை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

 

  • மகாகாளி, அசுரனை அழிக்கும் முன்னர், பச்சை வண்ண நிறத்தில் தோன்றியதால் பவளக்காளி என்ற பெயரும் அன்னைக்கு உண்டு. அத்துடன், கோடி அவதாரங்கள் எடுத்து அசுரனை அழித்ததால் கோடியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.

 

  • துவார சக்திகள் இருபுறமும் நிற்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், பச்சைக்காளியும், பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர். அபிஷேகம் என்றால் இவர்களுக்குத் தான். உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு, முழுவதும் சுதையினால் ஆன அன்னை, சிவப்புத் திருமுகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள்.

 

  • பெருமாளின் மார்பில் ஸ்ரீமகாலஷ்மி வீற்றிருப்பது போல், கோடியம்மனின் தலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

 

  • சிவபெருமான் தலையில் கங்கையை சூடியிருப்பது தெரிந்த விஷயம். ஆனால், இங்கே அம்பாள் தனது தலையில் சிவபெருமானையே சூடியிருக்கிறாள். எனவே இந்த கோயிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • அம்பாளிடம் சிக்கிய அசுரன் இறக்கும்போது ஊரின் பெயர் அழகாபுரி என இருந்தது. அவனது வேண்டுகோளுக்கு இணங்க, அவனது பெயராலேயே தஞ்சபுரி என்றாகி, தஞ்சாவூர் என காலப்போக்கில் பெயர் மாறியது.

 

  • இங்கே மதுரைவீரன், பூரண பொற்கொடி சமேத அய்யனார் சிலைகளும் உள்ளன. சிவபெருமானே இங்கு தீர்த்த வடிவமாக உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

 

  • ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது.

 

  • இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், விநாயகரும், பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலும், அய்யனார் பூரணம், பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர். பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது. இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது. மகா மண்டபத்தின் உட்புறம், அரக்கர்களை அழிக்க அம்பாள் எடுத்த அவதாரமும், போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன.

 

  • இயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக்கும் பராசக்தி, அரக்கனை அழிக்கப் புறப்பட்டபோது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற பவளக் காளியாக மாறினாள். எனவே இந்த ஆலயத்தில் நடைபெறும் பச்சைக்காளி – பவளக்காளி விழா இத்தலத்தின் தனிச்சிறப்பு.

 

  • தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக, கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’ என்றும், செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’ என்றும், அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’ என்றும் சொல்லப்படுகிறது.

 

 

திருவிழா: 

மாசி கடைசிவாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்ட திருவிழா என்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையில் அம்பாளுக்கு அரசரின் பிரதிநிதி பூஜை நடத்துவார். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரையும்,

மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில்,

தஞ்சாவூர்- 613001,

தஞ்சாவூர் மாவட்டம்

 

போன்:    

+91-93671 82045

 

அமைவிடம்:

தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில் தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வடக்காக, கும்பகோணம்- திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில்.

Share this:

Write a Reply or Comment

thirteen + twelve =