April 17 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

  1. அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     இராமசுவாமி

தாயார்     :     சீதா தேவி

உற்சவர்   :     ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன், அனுமார்.

ஊர்       :     கும்பகோணம்

மாவட்டம்  :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதி அவரது பிறந்த நாளாகும். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா அந்த தெய்வ மகனைப் பெற்ற புண்ணியவதி. இதையடுத்து விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள் பூசம் நட்சத்திரத்தில், இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில்அவதரித்தது.விஷ்ணு பூமிக்கு வந்த போது அவருடன் ஆதிசேஷனும் வருவேன் என அடம் பிடித்தது. தன்னை தினமும் தாங்கி தூங்க வைக்கும் சேவை புரிந்த சேஷனின் சேவையைப் பாராட்டி, விஷ்ணு அதை தன் தம்பியாக ஏற்றார். மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு ராமன் பிறந்த மூன்றாம் நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் அக்குழந்தை பிறந்தது. அதே நாளில் சுமித்திரையின் வயிற்றில் சத்ருக்கனன், விஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் அவதாரமாக அவதரித்தார். இவர்களில் லட்சுமணன் ராமனை மிகவும் நேசித்தார். குழந்தையாக இருந்த போது இவர் நான்காம் தொட்டிலில் கிடந்தார். ராமன் முதல் தொட்டிலில் படுத்திருந்தார். லட்சுமணக் குழந்தை அழுதது. எவ்வளவோ ஆறுதல்படுத்தியும் முடியவில்லை. அதன் கண்கள் ராமனின் தொட்டிலை நோக்கி திரும்பியிருந்ததைக் கண்ட வசிஷ்டர், ஒரே தொட்டிலில் இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தார்.

 

ராமனை தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்ட அக்குழந்தை அழுகையை நிறுத்தியது. அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர் ராம சகோதரர்கள். ராமன் காட்டுக்கு போன வேளையில், அதற்கு காரணமான தன் தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும், அண்ணனுக்கு பதிலாக தற்காலிக ஆட்சி நடத்திய போது, அவரது பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து வந்தார். சத்ருக்கனன் தன் அண்ணன் ராமன் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு இணை சொல்லமுடியாது.அண்ணன் காட்டில் இருந்த போது, அங்கிருந்து தன்னால் நகர முடியாது என அந்த குட்டித்தம்பி அடம் பிடித்தார். ராமனின் ஆறுதலின் பேரிலேயே ஊர் திரும்பினான். ஒருமித்த சகோதரர்களுக்கு, ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத சத்ருக்கனருக்கு ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புத்திரிகளான மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவி யாயினர்.பல கஷ்டங் களை அனுபவித்தாலும், ஆசை வார்த்தைகள் காட்டினாலும் இந்த அன்புச் சகோதரர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை. பட்டாபிஷேக நாளன்று தன் தம்பிகளுடனும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்கு சேவை செய்த அனுமானுடனும், காட்டில் தன்னோடு கஷ்டப்பட்ட மனைவி சீதையுடனும் கொலு வீற்றிருந்தார். அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னக மக்களும் காண வேண்டும் என தெற்கிலிருந்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற மன்னர்கள், தீர்த்த நகரும், புனித இடமும் ஆன கும்பகோணத்தில் இக் காட்சியை வடிவமைத்தனர்.

 

கும்பகோணத்தில் இருக்கிறது ராமசாமி கோயில். பழைமையான இந்தக் கோயிலைக் கட்டியவர் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் என்பார். இவருக்கு ராம சரிதத்தைக் கேட்பதிலும் படிப்பதிலும் பேரார்வம் இருந்தது. தினமும் தன் அவையில் ராமாயணத்தைப் படிக்கச் சொல்வாராம். பண்டிதர்கள் அந்தப் புண்ணியக் கதையைக் கேட்கும்போது மெய் சிலிர்ந்துக் கேட்பாராம். ராமாயணத்தைப் படிக்கும் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வானாம். அதனால் இந்த மன்னனுக்கு, ‘அனுவிரத ராமகதாம்ருத சேவகன்’ என்னும் திருப்பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். அத்தைகய ராம பக்தர் எடுப்பித்த கோயில்தான் குடந்தை ராமசாமி கோயில்.

 

கோயில் சிறப்புகள்:

  • கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

 

  • கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த  கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

 

  • சுவாமியின் கருவறை பழைய முறைப்படி அமைந்துள்ளது. ஸ்ரீ இராமபிரானும்  அன்னை  சீதாதேவியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.

 

  • கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர்

 

  • ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும்.

 

  • அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.

 

  • அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது. காரணம் கோயில் மட்டுமல்ல  ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும்.  இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி  புரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது.  முன் மண்டபம் 62  தூண்களுடன் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது.  பெருமாளின் பல்வேறு அவதாரங்களும்  அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மகா மண்டபம் என்று பெயர்.  கோயிலின் உள்  பிரகாரத்தில் இராமயணம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன.  சுமார் 200க்கு மேற்பட்ட  சித்திரங்கள் வரயப்பட்டு சித்திரகூடம் சிறக்கிறது.

 

  • இக்கோயிலின் உற்சவமூர்த்திகள் மிகப் பழங்காலத்தவை.  அவை தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும் கி.பி.16 ம் நூற்றாண்டில்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்பெருமாள் தோன்றி  அச்சிலைகளை எடுத்து பிரதிஷ்டை செய்து தனக்கு  கோயில் அமைக்குமாறு கூறியதாக வரலாறு  கூறுகிறது.

 

  • வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். இராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நாம் உள்ளே செல்லும்போது முதலில் தென்படுவது அலங்கார மண்டபம். அனைத்து தூண்களிலும் சிற்பங்கள். தாராசுரத்தில் ராஜகம்பீரன் மண்டபத்தை சற்றே நினைவுபடுத்துமளவு உள்ளது இக்கோயிலுள்ள மகாமண்டபத்தில் காணப்படுகின்ற சிற்பங்கள். தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவில் நுட்பமாக சிற்பங்கள் அமைந்துள்ளன. மாறாக இங்கோ ஆளுயர சிற்பங்கள் காணப்படுகின்றன. 62 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன.

 

  • அனுமானைக் கதாயுதத்துடன் தான் எங்கும் காண முடியும். இங்கோ அனுமான் தனது போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ராமனின் காது குளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார்.

 

  • கல்வியில் வல்லவரான அனுமான், இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்காட்சி உள்ளது. மற்றொரு கையில் ராமாயண காவியத்தை வைத்துள்ளார். ராமாயணத்தை வீணை மீட்டி பாடுவதாக ஐதீகம். ஜெகம் புகழும் புண்ணியக் கதையான ராமாயணத்தை ஆஞ்சநேயர் இங்கே பாடி மகிழும் காட்சியை கண் குளிரக் காணலாம்.

 

  • இந்த ஆலயத்தை பக்தர்கள் ‘தென்னிந்தியாவின் அயோத்தி’ என்றே அழைக்கிறார்கள்.

 

  • பொதுவாக ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று அல்லது ஒன்பது என்னும் கணக்கில் வலம் வருவோம். அவ்வாறு ஓர் ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் கர்ப்பகிரகத்தைச் சுற்றிவருகின்ற திருச்சுற்றில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தால் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம்.

 

திருவிழா: 

ராமநவமியன்று இங்கு விசேஷ பூஜைகள் உண்டு. மாசிமகத்தன்று ராமனும், சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ராமசாமி திருக்கோயில்,

கும்பகோணம்- 612001,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 435 2401788

 

அமைவிடம்:

கும்பகோணம் பெரிய கடைவீதியில் தென்கோடியில் கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

eleven − 4 =