May 23 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமூர்த்தி மலை

  1. அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)

உற்சவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு.

தல விருட்சம்   :     அரச மரம்

தீர்த்தம்         :     தோணி ஆறு

ஊர்            :     திருமூர்த்தி மலை

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை. கயிலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குருமுனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கயிலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் தென் கயிலாயம் என்ற சிறப்பும் திருமூர்த்தி மலை பெறுகிறது. மும்மூர்த்திகளும் தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். அவரது மனைவி அன்னை அனுசூயா தேவியின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒருமுறை அத்திரி மகரிஷி வெளியே சென்றபோது மும்மூர்த்திகளும் அனுசுயா அன்னையிடம் வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயா தேவியும் தனது கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மேல் தெளிக்க மூம்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறினர். பின்பு அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலமே இந்த திருமூர்த்திமலை. அனுசூயா தேவியால் குழந்தையாக மாறிய மும்மூர்த்திகளும் இத்தலத்தின் எட்டுகால் மண்டபத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அருகிலுள்ள சஞ்சமலையிலிருந்து கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது அங்கு பட்டாரசி தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகிவிட்டனர். இத்தலத்தில் சப்த கன்னியர்களுக்கும் தனி சன்னிதி உள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

 

  • மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது. இது அத்திரி மகரிஷி தனது மனைவி அனுசுயா தேவியோடு வழிபட்ட லிங்கங்கள் ஆகும். இன்றும் அவர்கள் தினமும் பஞ்சலிங்கத்தை வழிபடுவதாகவும், இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

 

  • இறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும்.

 

  • குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.

 

  • இந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.

 

  • இங்குள்ள சிவபெருமானுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், அமணலிங்கேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. இவருக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர் என்ற பெயர்களும் உள்ளன. அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனே, இத்தல இறைவனான அமணலிங்கேஸ்வரர். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்றும் பொருள்படும். வடக்கு நோக்கி லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள ஒரு பாறைதான், அமணலிங்கேஸ்வரர். இந்த பாறையில் மும்மூர்த்திகளின் வடிவங்கள் சுயம்புவாக காணப்படுகின்றன.

 

  • பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் உற்சவ மூர்த்திகளாக கருவறையில் வீற்றிருக்கின்றனர். நீரினால் சூழப்பட்ட அமணலிங்கத்தை சுற்றி வரும்போது, சப்த கன்னிகளை வணங்கலாம். இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில்தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக சொல்லப்படுகிறது.

 

  • இந்த ஆலயத்தில் தல விருட்சமாக அரச மரம் உள்ளது. தீர்த்தமாக தோணி ஆறு இருக்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர் ‘சுந்தர கணபதி’ என்றும், முருகன் ‘பாலசுப்பிரமணியன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலின் முன்பு 30 அடி உயரம் உள்ள தீப கம்பம் காணப்படுகிறது. இதன் அடிப்பாகத்தில் அஷ்டதிக்குகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்திரர், ராமர், நரசிம்மர், வேணுகோபாலர் ஆகியோரது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

 

  • இங்கே, முருகப்பெருமானுக்கும் விநாயகருக்கும் தனித்தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இரண்டு பேரின் சந்நிதிக்கு நடுவில் உள்ள ‘வருடிக் கல்’ என்பது மிகப் பிரசித்தம். இந்தக் கல்லில் தேங்காய் வைத்து வழிபட்டால், விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

  • மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய குணங்களையும் நீக்கி அருள்பவர் என்று சிவனாரைப் போற்றுகின்றனர். இவரை வழிபட்டால், பஞ்ச பூதங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

  • குறுமிளகையும், உப்பையும் திருமூர்த்திகள் மீது இட்டு வேண்டிக்கொண்டால் தங்களது குறைகள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் தோணி ஆறு. தலமரம் அரசமரம்.

 

 

திருவிழா: 

மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சிறப்பு பெற்றது.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,

தளி – திருமூர்த்தி மலை,

உடுமலைப்பேட்டை- 642 112.

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4252 – 265 440

 

அமைவிடம்:

இத்திருக்கோயில் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்ச லிங்கம் அமைந்துள்ளது. இங்கு செல்ல உடுமலைப்பேட்டையிலிருந்தும் தாராபுரத்திலிருந்தும் தளி வழியாக நிறைய பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

one + thirteen =