நானும், அவளும்: –

ஸ்ரீ

Sangeetha, Dharmapuri

வாள் மறக்கலாம்….

மரம் மறக்காது…

–    என்கின்ற உலகப் புகழ் பெற்ற வாக்கியம் என் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாகி போனது…

தன் வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைக்கின்றாள். வாஸ்துவிற்காக முதல் முறை அவளை பார்த்து விட்டு கிளம்பும்போது சொன்னாள்.

மூன்று நாள் தாமதமாக நான் போயிருந்தாலும் அவள் எடுத்த தற்கொலை முடிவை அவள் நிறைவேற்றி இருந்திருப்பாள் என்று.

எனக்கும், அவளுக்கும் 10 – 12 வருட வயது வித்தியாசம் இருக்கும். பார்த்த முதல் நொடியே அவளின் அழகான முகமும், கிராமத்து சிரிப்பும், கள்ளம் கபடம் இல்லாத மனதும் எனக்கு மிகவும் பிடித்து போனது. கிட்டதட்ட இவளே குழந்தை போல் தான் என் கண்ணிற்கு தெரிந்தாள். ஆனால் அவளுக்கு அவள் உயரத்தைவிட உயரமான பெண் ஒன்று, ஆண் ஒன்று என இரண்டு குழந்தைகள். பாரம்பரியமான குடும்பம். 10 பேருக்கு சம்பளம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு பணத்தால் பிரச்சினைகள் அதிகம் வந்த நேரத்தில் தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன்.

நான் கடன்காரனாக வாழ்ந்து கஷ்டப்பட்டது தான் உலகத்தில் பெரிய கஷ்டம் என நினைத்திருந்தேன் இவளை சந்திக்கும் வரை. இவள் தான் என்னிடம் “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன்” என்கின்ற வார்த்தை பிரயோகத்தை முதல் முதலில் சொன்னவள். சொல்லிவிட்டு அவள் சொன்னது தான் இன்றும் அதை நினைக்கும் போது தாள முடியாத வேதனையை எனக்கு கொடுக்க கூடியது. அவள் சொன்னது…

அண்ணே! கடன் கொடுக்கும்போது மரியாதையாக பேசி கொடுத்தவர்கள் கடனுக்கு வட்டி கட்ட முடியலனு தெரிஞ்ச போது குளிக்கும் போதும், சாப்பிடும் போதும், வீட்டின் நடுப்பகுதிக்கும், ஒருமுறை படுக்கையறையின் கதவு வரைக்கும் வந்து நின்று பணம் எங்கே? என்று கேட்டபோதும், கடைசியாக பிள்ளைகள் முன்னே பணத்தை திருப்பி கட்ட சொல்லி அசிங்கப்படுத்திய போதும் இந்த கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது நினைத்து கொள்வேன்     ஒரு கட்டத்தில் நாமெல்லாம் இனி  உயிர் வாழ வேண்டுமா? என்று தற்கொலைக்கு முடிவெடுத்து விட்டேன். எந்தவிதமான தற்கொலையை தேர்ந்து எடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் வெகு ஏதேச்சையாக உங்களது TV Programme – ஐ பார்த்தேன். எனக்கு தீர்வு உங்களிடம் கிடைக்கும் என நம்பினேன். என் கணவரிடமும் பேசி உங்களை இன்று வரவழைத்து வாஸ்து பார்த்தேன்.

அவளை பார்த்து சில விஷயங்கள் சொல்லிவிட்டு ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு நான் கிளம்பியபோது கார் வரை வந்து வழியனுப்பினாள்.

ஆண்டாள் ராமானுஜரை என் கோவில் அண்ணா என்று வரவேற்ற அதே உற்சாகம் என்னை சந்தித்த பின் என்னை பத்திரமாக வழி அனுப்பியபோது நான் அவள் முகத்தில் அதை கண்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் சில மணி துளிகள் உரையாடுவாள். ஒரு நாள் அப்படி பேசும் போது “அண்ணே! இந்த வருடம் மில் ரொம்ப நன்றாக வருமானத்தை கொடுத்திருக்கின்றது. எங்கள் கடனில் பாதியை அடைத்து விட்டோம். நான் ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றேன். நான் ஆண்டாளுக்கு ரூ.1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகின்றேன். நீங்கள் ஆண்டாள் கோவிலுக்கு போகும் போது நான் உங்களுடன் சேர்ந்து வந்து கொடுக்கின்றேன் என்று சொல்லியவள் சொன்னது போல் ஆண்டாள் கோவிலுக்கு வந்தாள். என் கூடவே இருந்தாள். சொன்னபடி கொடுத்து பின் சென்றுவிட்டாள்.

சிறிது காலம் சென்ற பின், மறுபடியும் அவளிடமிருந்து Phone அண்ணா! எங்கள் மில்லுக்கு வாஸ்து பார்க்கணும் அப்படியே எங்க வீட்டுக்காரரின் 2 மாமா வீட்டிற்கும் வாஸ்து பார்க்கணும் என்று சொன்னாள்.    சரிம்மா என்றேன். அவளே என் PA – விற்கு Phone பண்ணி       அண்ணா!! இப்போ எவ்வளோ Fees வாங்குகிறார்கள்? என கேள்வி கேட்கின்றாள். ரூ.8000/- என சொல்லப்படுகின்றது. இல்லை என் அண்ணனுக்கு இது ரொம்ப குறைவு. நான் ரூ.15000/- என்று சொல்லி விடுகின்றேன். 2 வீட்டிற்கு ரூ.30000/- ம் எனக்கு முதல் தடவை பார்த்ததற்கு அண்ணன் பணமே வாங்கவில்லை. அதுக்கு ரூ.10000/- கொடுத்துடறேன். அண்ணனின் நேரத்தை மட்டும் வாங்கி கொடுங்க என்று சொல்லி என்னை வரவழைத்து சொன்னபடியே நடந்து கொள்கின்றாள். அவர்களின் மில்லை பார்த்த பின் சொன்னேன் அம்மா! தயவுசெய்து உங்கள் கணவர் Share Business / Commodity Trading Business – ல் ஈடுபட கூடாது. ஈடுபட்டால் மிகப் பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்று அவளிடம் கூறிவிட்டு வண்டியில் ஏறுகின்றேன். சொன்ன உடனே அவள் முகம் மாறியது. அதை பார்த்த உடன் நானும் சற்று குழப்பத்துடன் வண்டி ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

சரியாக 15 நாள் கழித்து எனக்கு Phone செய்தாள். அண்ணே! ஒரு தவறு நடந்து போய் விட்டது. நீங்கள் சொன்னபடியே என் வீட்டுக்காரர் Commodity Trading Business – ல் நாங்கள் இந்த season-ல் சம்பாதித்த மொத்த வியாபார பணத்தையும், கையிருப்பு பணத்தையும் மற்றும் கடன் வாங்கிய பணத்தையும், வாங்கிய கடனை அடைப்பதற்காக வைத்திருந்த பணத்தையும்  போட்டு இப்போது மொத்தமும் நஷ்டமாகி விட்டது. நீங்கள் வருவதற்கு முதல் நாள் தான் ஜாடைமாடையாக இதை என் வீட்டுக்காரர் சொன்னார். நீங்கள் வந்து சென்ற பிறகு அவரை சற்று உலுக்கி கேட்டபோது தான் அவர் ஏமாந்த விஷயத்தை சொன்னார் அண்ணா. எது எப்படி இருந்தாலும் ஏமாற்றியவனை கண்டுபிடித்து பணத்தை வாங்கி விடுவேன் அண்ணா. சென்னை வரும் போது உங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

சில நாட்கள் கழித்து நடுவில் அவளின் கணவர் என்னை அலுவலகத்தில் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டு சென்றார். அவள் எனக்கு மறுபடியும் சில வாரம் கழித்து போன் செய்தாள். மனம் விட்டு பேசினாள். அப்போது நான் அவளிடம் சொன்னேன்.

அம்மா! தைரியமாக இருங்கள். எந்த தவறான முடிவும் நீங்கள் எடுக்க கூடாது என்று கூறி சென்னை வரும் போது என்னை வந்து பார்க்கும் படி சொன்னேன். அப்போது அவள் சொன்னாள் “அண்ணே! கவலைபடாதீங்க ஏமாற்றியவனிடம் இருந்து பணம் வாங்காம விட மாட்டேன். நான் வெற்றி பெற்று உங்களை பார்ப்பேன் என்று”.

சரியாக மூன்று வாரம் கழித்து நண்பர் வீரமணி @ சக்திவேல் தருமபுரியிலிருந்து போன் செய்தார்.

“அவள் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி. அதில் அவளும், அவள் இரண்டு குழந்தைகளும் மரணம். அவளின் கணவர் மற்றும் அவள்  கணவரின் தாயாரும் உயிர் பிழைத்து விட்டார்கள் என்று”

நான் கேட்டேன் என்பதற்காக ஆண்டாளுக்கு 1 லட்சம் கொடுத்தவள்

நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்கு அதிக பணம் வாங்கி கொடுத்தவள்

நான் சொன்னேன் என்பதற்காக ஆண்டாளையும், காமாக்ஷியையும் தூக்கி வைத்து கொண்டாடியவள்

நான் சொன்னேன் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தவள்

நான் சொன்னேன் என்பதற்காக உழைத்து பொருளீட்டியவள்

நான் சொல்லாததையும்  செய்வாள் என கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் நினைக்காததை அவள் நினைத்துவிட்டாள். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் எனக்கு போன் செய்து அண்ணே! எங்கள் ஊர் கோவிலுக்கு அன்னதானம் போட சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எங்கள் மில் இந்த Season – ல் நன்கு ஓடி நாங்கள நிறைய பணம் சம்பாதித்தோம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒட்டுமொத்த பணத்தையும் பறி கொடுத்தது அவர்களுக்கு தெரியாது. இப்போ என்ன செய்றது?

நான் சொன்னேன் “லாபமோ, நஷ்டமோ தயவு செய்து அன்னதானத்திற்கு பணம் கொடுங்கள் என்று”.

நான் சொன்னேன் என்பதற்காக கிட்டத்தட்ட ரூ. இரண்டு  லட்சத்தை அன்னதானத்திற்கு கொடுத்தாள். மொத்த ஊரே தின்று திளைத்தது.

இவ்விடத்தில் ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.

திடீர், தீடிரென்று அவளுக்கு நேரம் கிடைக்கும் போது என்னிடம் பேசுவாள்; அப்படி ஒரு முறை பேசும் போது “அண்ணே! எனக்கு ஒரு ஆசை; நீங்கள் 4 – 5 நாள் தன்னம்பிக்கை, வாஸ்து குறித்து CLASS எடுக்கணும். அதில் நான் வந்து பங்கேற்க வேண்டும்” சரியான்ணே என்றவளிடம் நான் class எடுக்கும் போது கண்டிப்பாக சொல்றேன் என்றேன். நீங்கள் எப்போது எடுத்தாலும் நான் வந்துடுவேன்னே. மறந்துறாதீங்க அண்ணே Please என்று கோரிக்கையாக வைத்தாள்

வைத்த கோரிக்கை இன்றும் இருக்கின்றது.

கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்னவனும் இருக்கின்றேன்.

கோரிக்கை வைத்தவள் தான் இல்லை.

வாள் மறக்கலாம்

அவள் நினைவுளால் அறுக்கப்பட்ட மரமாக இருக்கும் நான் அவளை மறக்க முடியுமா?!

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine + one =