May 07 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

  1. அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அகஸ்தீஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     ஸ்வர்ணாம்பிகை

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     அங்காரக தீர்த்தம்

புராண பெயர்    :     வில்வாரண்யம்

ஊர்            :     வில்லிவாக்கம்

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. இதையடுத்து உலகை சமப்படுத்துவதற்காக அகத்திய முனிவரை தென்திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் உத்தரவிட்டார். இது உங்களுக்கு தெரிந்த கதைதான். தென்திசை வந்த அகத்தியர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஒரு தலம்தான் வில்லிவாக்கத்தில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயமாகும். அகத்தீஸ்வரர் வழிபட்ட லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

 

அந்த கால கட்டத்தில் தற்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வ லனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் மகரிஷிகள் கூடினர். அங்காரகன் என்ற கிரகத்தால் உலகுக்கே பல தீமைகள் வருவதை அறிந்து அதை நிவர்த்திக்கப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தனர். விசுவாமித்திரர் கலந்து கொண்ட இந்த யாகத்தில் தோன்றிய பூதம் அங்காரகன் (அங்கம் +அழகன்) மீது சென்றது. அப்போது அங்காரகன் “தன் பெயரில் தீர்த்தம் ஒன்று அமைத் தால் தனது கொடிய அதிகாரங்களைச் செலுத் தாமல் இருக்கிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்திரன் முதலானோர் சேர்ந்து இத்தலத்தில் “அங்காரகதீர்த்தம்” அமைத்து நீராடி வழிபட்டனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், “ஸ்வர்ணாம்பிகை’ எனப்படுகிறாள். இவளது சன்னதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சன்னதியும் உள்ளது.

 

  • அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இங்குள்ள சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் பெயரில் மூலவராக இருக்கிறார்.

 

  • அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.

 

  • பஞ்சமாபாதகன் என்றாலும் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பரம பவித்ரனாகி விடுவான். மார்க் கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • ஸ்ரீ சொர்ணாம் பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், முக்தர்களும்,யோகிகளும், ஞானிகளும் செவ்வாய்க்கிழமை தோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

 

  • ஸ்ரீஅகத்திய மாமுனிவருக்கு அருள் பாலித்து வில்வன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலமாகும். இத்திருக் கோவிலின் தல விருட்சம் வில்வ மரம் ஆகும்.

 

திருவிழா: 

வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,

வில்லிவாக்கம்,

சென்னை – 600 049.

 

போன்:    

+91- 44 – 2617 2326, 93832 01591, 99520 38155

 

அமைவிடம்:

சென்னை எழும்பூரில் இருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள வில்லிவாக்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

19 − seventeen =