June 16 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் தில்லை காளி

  1. அருள்மிகு தில்லை காளி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி

ஊர்                  :     சிதம்பரம்

மாவட்டம்   :     கடலூர்

 

ஸ்தல வரலாறு :

சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. சக்தி நான் தான் சக்திமிக்கவள் என சிவனுடன் விவாதம் செய்தாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சினம் கொண்ட சிவன், “நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்” என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி, தன் தவறுக்கு மனம் வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். “கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.

ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. எனவே காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டினார்கள். காளிதேவி அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள். மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து தில்லையில் தவம் இருந்தாள்.

பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் சிவன் காட்சி தராததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கடும் கோபம் கொண்டாள். இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள். அத்துடன் சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள். ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி. “நான் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுகிறேன்” என்று கூறினாள். சிவபெருமானுக்கும் காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட அரம்பித்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி சமமாக ஆடினார்கள். சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார். ஈசன் செய்தது போல் பெண்ணான காளி தேவி பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளியால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள். தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள்.

தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை. “தந்திரமாக ஜெயித்ததை எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது” என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள். அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் “தில்லைக்காளி” என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை “எல்லைக்காளி” என்றும் சொல்வர். “நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன். என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். இதனால் இன்னும் நீ பெருமையடைவாய்” என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம் தணியவில்லை. சிவன் கூறியது போல் இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.

 

கோயில் சிறப்புகள் :

  • பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள்.

 

  • பிரகாரத்தில், நின்ற கோலத்தில் “வீணை வித்யாம்பிகை’ என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் “கடம்பவன தக்ஷண ரூபிணி’ என்ற பெயரிலும் அருளுகிறார்கள்

 

  • பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க “தில்லைக்காளியை வேதநாயகி” எனப் புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, “பிரம்ம சாமுண்டீஸ்வரி” என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்து தில்லையிலேயே அமர்ந்தாள் காளி.

 

  • பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு “தில்லையம்மன்’ என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

 

  • தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

 

  • பண்டைய அரசர்கள் பலரும் போருக்குச் செல்வதற்கு முன்னரும், வெற்றிவாகை சூடிவந்த பின்னரும், அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகளின் போதும் முதலில் காளியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்

 

  • மன்னன் கோப்பெருஞ்சோழன், காளிதேவியின் பெருமையை அறிந்து, இங்கே கோயில் கட்டி, தேவியை வழிபட்டு, போர்களில் வெற்றி வாகை சூடினான் என்கிறது ஸ்தல வரலாறு.

 

  • தில்லை காளியம்மனுக்கு தினமும் நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்பட்டு வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார்.

 

  • இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும் அரக்கியைக் கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர், காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு சொல்கிறது.

 

  • முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் உள்ளனர்.

 

  • ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் உக்ர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லைகாளியாகவும், மேற்கு நோக்கிய சன்னதியில் சாந்தமான நான்முக பிரம்மசாமுண்டேஸ்வரியாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களுக்கு அருள் தருகிறார்.

 

  • ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் நடக்கிறது.

 

திருவிழா: 

நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தில்லைக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் முக்கியமானதாக 9–வது திருநாளான தேரோட்ட திருவிழா நடைபெறும். இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப்  திருவிழா நிறைவடைகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தில்லை காளி திருக்கோயில்,

சிதம்பரம் – 608 001,

கடலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4144 – 230 251

அமைவிடம்:

சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

2 × 3 =