May 02 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்

  1. அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பேசும் பெருமாள்

ஊர்       :     கூழம்பந்தல்

மாவட்டம்  :     திருவண்ணாமலை

 

ஸ்தல வரலாறு:

இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • கூழம் என்னும் பண்டைச் சொல்லுக்கு எள், திலம், திலகம், கூழகம் என்ற பொருள் உண்டு. பந்தல் – ஓடும் சாலை, பந்தர், விதானம் என்று பொருள். பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து பிற்காலச் சோழர்களின் தலைநகராகிய கும்பகோணம் அருகில் உள்ள பழையாறை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற நகரங்களுக்கு இவ்வூர் வழியாக நெடுஞ்சாலை உள்ளது. இங்கு எள் போன்ற பயிர்கள் நிரம்ப விளைந்ததால் “கூழம் பந்தல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் கூழமந்தல் என்றாகியிருக்கலாம்.

 

  • இவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு, இவ்வூரை “கூழன் பந்தல்” என்கிறது. கூழன் என்பது ஒருவகை பலா மரத்தின் பெயர். அவ்வகைப் பலா மரங்கள் நிறைந்திருந்து, அவ்வழியாகச் சாலை சென்றதால், “கூழன் பந்தல்” எனப் பெயர் வந்திருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

 

  • பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பெருமாள் “பேசும் பெருமாள்” என்று பக்தர்களின் அழைப்புக்கிணங்க கூழமந்தல் எனும் ஊரில் கோயில் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • கங்கை கொண்ட சோழீச்சுரம் சிவன் கோயில் கட்டப் பெற்ற காலத்திலேயே (கி.பி.1012 – 1044) பேசும் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையாகவே பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன், பேசுவது போல அமையப்பெற்றுள்ளது.

 

  • பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். மிகவும் கம்பீரமான தோற்றம். இரு கைகளிலும் சங்கு சக்கரங்கள், மற்றொரு வலக்கை நமக்கு அருள்பாலிக்கும் வரதஸ்தம், இடக்கை தொடையில் பதிந்துள்ளது. ஏராளமான அணிகலன்கள், கிரீடம், அதில் பல வண்ண வேலைப்பாடுகள்.

 

  • ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்கள், தலைக்கிரீடங்களும் மெய்மறக்கச் செய்கின்றன. பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன் பேசுவதுபோல விளங்குவதால் “பேசும் பெருமாள்” என்று பெயர்பெற்றார்.

 

  • கண் இமைக்காமல் நாளெல்லாம் பார்த்து வணங்கத்தக்க இத்திருமேனிகளின் அழகும், நிற்கும் பாங்கும் கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு உயரமும், எழிலும் வாய்ந்த திருவுருவங்களை வேறு எங்கும் காண இயலாது. இத்திருமேனிகளின் காதுகளில் மிக மிகச் சிறிய ஊசி நுழைவதற்குரிய கண்ணுக்குத் தெரியாத துவாரங்களை அமைத்து சிற்பிகள் தங்கள் கலைத் திறனையும், கை வண்ணத்தையும் காட்டியுள்ளனர்.

 

  • இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது. இது மிகமிக அரிதானக் காட்சி. மற்ற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும் இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார். இங்கு இதிலும் புதுமை. இவ்வளவு கம்பீரமான தோற்றமாக இருந்தாலும் சாந்த மூர்த்தியாக திகழ்கிறார் பேசும் பெருமாள்.

 

  • இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது.

 

  • மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும்.

 

 

திருவிழா:

பேசும் பெருமாள் திருக்கோயிலில் முக்கிய திருவிழா நாட்களான தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம் கருடசேவை, திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி 5 சனிக்கிழமைகள், தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கூடாறவள்ளி, தை பொங்கல், தை பூசம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் ஆகியன விசேஷ நாட்களாகும்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்

கூழம்பந்தல், 631701

திருவண்ணாமலை மாவட்டம்.

 

போன்:    

+91 97879- 06582, 04182- 245 304, 293 256.

 

அமைவிடம்:

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் கூழம்பந்தல் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் கோயில் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

eleven − five =