May 23 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் இருக்கன்குடி

  1. அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     மாரியம்மன்

தீர்த்தம்    :     அர்ச்சுனா, வைப்பாறு

ஊர்       :     இருக்கன்குடி

மாவட்டம்  :     விருதுநகர்

 

ஸ்தல வரலாறு :

அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது. இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர். ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.

 

ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர்.

அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது). தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

 

  • வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக “இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் “இருக்கன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

 

  • அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம்.

 

  • கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

 

  • குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர்.

 

  • சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞானசித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள்.

 

  • இத்தலத்தில் சேவல் கூவுவதில்லை. சேவல் கூவும் காலைப்பொழுது நேரத்துக்கும் முன்னரே மக்கள் எழுந்து அம்மன் வழிபாட்டுக்காக கோயிலுக்குப் போகும் வழக்கம் இருந்ததால் சேவலே கூவ வெட்கப்பட்டதாம்.

 

  • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.

 

  • பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

 

திருவிழா: 

ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகள்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30-மதியம் 1 மணிவரை

மாலை 4- இரவு 8 மணிவரை

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை.

 

முகவரி:  

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்

இருக்கன்குடி,

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம்.

 

போன்:    

+91-4562 259 614, 259 864, 94424 24084

 

அமைவிடம் :

மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சாத்தூர் என்ற பகுதி. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடியை அடைந்துவிடலாம். சாத்தூரில் இருந்து பஸ், ஆட்டோ உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

two × three =