October 07 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புலியகுளம்

  1. அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     முந்தி விநாயகர்

தல விருட்சம்   :     அரசமரம்

ஊர்             :     புலியகுளம்

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை செய்ய பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது எளிதான காரியம் அன்று. பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எனும் ஊரில் 20 அடி ஆழத்தில் இருந்து எந்த பின்னமும் இல்லாத பாறையைத் தேர்வு செய்து வெட்டி எடுத்தனர். பின் அங்கேயே வைத்து தோராயமாக விநாயகப் பெருமான் உருவில் செதுக்கி எடுத்தனர். முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும் 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190டன் எடை (1,90,000 கிலோ) – எடை கொண்டவராகத் திகழ்கிறார்.   இதற்கென தயார் செய்யப்பட்ட தனி ஊர்தியில் ஏற்றி கோவிலின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். பிரத்தியேகமாக ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்கு கொண்டுவர மட்டும் 18 நாட்கள் பிடித்தன. படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர். எந்த ஒரு இயந்திரத்தின் துணையும் இல்லாமல் இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியால் முழுதும் மனித சக்தியாலேயே இச்சிலையை நிலைக்குக் கொண்டு வந்து ஸ்தாபித்தனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.விநாயகர் ,துதிக்கையில் அமிர்த கலசம், இடது காலில் மகாபத்மம்.

 

  • விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார்.

 

  • நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார்.

 

  • துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் விநாயகக் கடவுள். அவரின் கிடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டு இருக்கிறார்

 

  • பிடியதன் உருவுமை கொளமிகு கரியது என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு விநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் இவர் முன் நின்று தரிசிக்கும் போது ஓர் ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது.

 

  • கரஸ்த்த கதலிசூத பனஸேக்ஷக மோதகம் பால சூர்ய பீரபாகாரம் வந்தே பால கணாதிபம் என்கிறது சிவாகம சாஸ்திரம் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாக்ஷம் அதிகம். இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரத்தைக் கொண்டுள்ளதால் நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

 

  • கோயிலில் வரசித்தி விநாயகரே மூலவராகவும், உற்சவராகவும் காட்சி தருகிறார்.

 

  • இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகள், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், நடைபெறுகிறது.

 

  • விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. விநாயகர் என்பது ‘மேலான தலைவர் என அர்த்தம் கொள்ளப்படும். வி என்றால் மேலான என்றும் நாயகர் என்றால் தலைவர் என்றும், அதாவது தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். விக்னேஸ்வரர் என்றால் இடையூறுகளை நீக்குபவர் என்றும், ஐங்கரன் என்றால் தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்களை உடையவர் என்றும் அர்த்தம் கொள்ளப்படும். கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே அடங்கியுள்ளது.

 

திருவிழா: 

சங்கடஹர சதுர்த்தி,விநாயகர் சதுர்த்தி. சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. சித்திரைக்கனியன்று (தமிழ்ப் புத்தாண்டு 5டன் அளவு எடை உள்ள காய், கனிகளால் (பழங்கள்) செய்யப்படுகின்ற அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியதாகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்,

புலியகுளம், 641045.

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

அமைவிடம்:

காந்திபுரத்திலிருந்து 6 கி.மீ. துõரத்தில் புலிய குளம் உள்ளது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், சிங்காநல்லுார் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி ரோடு ராமநாதபுரம் வழியாக புலியகுளம் செல்லும் அனைத்து பேரூந்துகள் செல்லும்.

Share this:

Write a Reply or Comment

1 × 3 =