October 30 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெறும்பூர்

  1. அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம்

புராண பெயர்    :     திருவெறும்பியூர், திருவெறும்பூர்

ஊர்             :     திருவெறும்பூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

இந்திரலோகம் அல்லோலகல்லோலப் பட்டது. தாரகாசுரன் படையெடுத்து வருகிறானாம். செய்தி கேட்ட இந்திரனும் தேவர்களும் பெரும் கலவரம் அடைந்தனர். பிரம்மாவிடம் வரங்கள் பல பெற்றவன், தெய்வங்களின் அருள் பெற்ற அவனை எதிர்த்து வெற்றி பெறுவது எப்படி? யோசித்து யோசித்து காலம்தான் கடந்ததே தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை. அதற்குள் தாரகாசுரன் இந்திரலோகத்தை கபளீகரம் செய்துவிட்டான். தேவர்கள் சிதறி ஓடினர். தங்களைக் காக்கும்படி பிரம்மனிடமே போய் நின்றனர். பிரம்மாவோ, தன்னால் இப்போது ஆவது ஒன்றுமில்லை என்று கூறி, சிவபெருமனைச் சரணடையச் சொன்னார். அதற்கு ஓர் உபாயமும் கூறினார்.

பூலோகத்தில் புனிதம் நிறைந்த குன்றில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு மலர் கொண்டு பூசித்து, உங்கள் வாழ்வை யாசித்துக் கொள்ளுங்கள்’ என்றார். தேவர்களும் பூலோகம் வந்தனர். அசுரனும் துரத்தி வந்தான். எனவே அவன் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துகொள்ள மிகச் சிறிய உயிரான எறும்பின் வடிவம்கொண்டு இந்தக் குன்றுக்கு வந்தனர்.

அங்கே சுயம்புலிங்க சுவாமியைக் கண்டு ஆனந்தம் கொண்டனர். செடிகளில் இருந்த மலர்களைப் பறித்து லிங்கத்தின் உச்சியில் சமர்ப்பிக்க முயன்றனர். ஆனால், லிங்கம் வழுவழுப்பாகவும் செங்குத்தாகவும் இருந்தது. பூக்களைச் சுமந்து மேலேற இயலாது சிரமப்பட்டனர். அவர்களின் சிரமத்தை உணர்ந்த சிவபெருமான், லிங்கத் திருமேனியை சற்றே சாய்த்துக் கொண்டார். மேனியையும் சற்றே சொரசொரப்பாகவும் எறும்புப் புற்றின் மீதாகவுமாக மாற்றிக் கொண்டார். அதன்பின் தேவர்களாகிய எறும்புகளுக்குத் தெம்பு வந்தது. லிங்கப் பெருமான் மீது மலர்களைச் சொரிந்து, வழிபட்டனர். அவர்களின் பூசனையால் மகிழ்ந்த பெருமான், தாரகாசுரனை அழித்து, தேவர்களைக் காத்தார். எறும்புகள் வழிபட்ட பெருமானுக்கு எறும்பீஸ்வரர் என்றும், தலத்துக்கு திருஎறும்பூர் என்றும் பெயர் ஏற்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருச்சி மாநகருக்கு உரிய சிறப்பு, இரண்டு சிவாலயங்கள். ஒன்று- ஜீவராசிகளில் மிகப் பெரிதான யானை வழிபட்ட திருவானைக்கோவில். இரண்டாவது- ஜீவராசிகளில் மிகச் சிறிய எறும்புகள் வழிபட்ட இந்தத் திருவெறும்பூர்.

 

  • சிவபெருமான் கருவறைக்கு முன் இடது வலது புறங்களில் இரண்டு துவாரபாலகர்கள். அவர்களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மற்றொருவர் சாந்தமான முகத்துடனும் உள்ளனர். கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவர் பெருமானை வணங்கிய பின் சாந்தமான மனதுக்கு மாறிவிடுகிறாராம்.

 

  • சிவபெருமான் சந்நிதி கோஷ்ட தெய்வமாக சங்கரநாராயணர் உள்ளார்.

 

  • ருத்ராட்சப் பந்தலின் கீழ், நடராஜர் காலில் சலங்கைக் கொலுசு அணிந்திருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • இங்கே பெருமான் சுயம்பு மூர்த்தி. லிங்கத்தின் இடப்புறம் சற்றே சாய்ந்திருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. இது இரண்டு லிங்கங்கள் இணைந்தாற்போன்ற தோற்றத்தை அளிக்கும். வலப்புறப் பகுதி சிவபெருமானின் அம்சம் என்றும், இடப்புறப் பகுதி அம்பாளின் அம்சம் என்றும் கூறப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு சிவசக்தி லிங்கம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

 

  • இங்குள்ள ஓர் அதிசயம், தினமும் சுவாமிக்கு பூஜை நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாகச் சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக் கொள்வதுதான்

 

  • இங்கே கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக புற்றுமண் லிங்கம் போல் இருப்பதால், லிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய்க் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.

 

  • எறும்புகள் ஊர, பெருமானுக்குச் செய்யப்படும் பூஜையைக் காண்பது சிறப்பு என்கிறார்கள். மேலும், இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் உகந்ததாம்.

 

  • மன்மதனின் மனைவி ரதிதேவி, தான் அழகாக இருப்பதால், அழகின் பேரில் தனக்கு ஆணவம் வந்து அவதிப்படக் கூடாது என்று இங்கே இறைவனைத் தொழுதாளாம்.

 

  • ஆலயப் பிராகாரத்தில் சொர்ண காலபைரவர் சந்நிதி உள்ளது. உக்கிரமாக இருக்கும் இவரின் சந்நிதிக்கு நேரே கஜலட்சுமி சந்நிதி கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் வேண்டிக் கொண்டால் பயம் நீங்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

 

  • இங்கே அம்பாள் நறுங்குழல்நாயகி, தனி சந்நிதியில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். நறுமணம் வீசும் கூந்தலுடன் இவர் திகழ்வதாகக் கூறுவார்கள். இங்கே அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதமான அலங்காரங்களைச் செய்கின்றனர். அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாளுக்கு முன்புறத்தில் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் விக்ரஹம் ஒன்றும் உள்ளது.

 

  • பிரம்ம தீர்த்தம், பத்ம தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள்.

 

  • கருவறைக்குப் பின்னுள்ள காசி விஸ்வநாதர் சந்நிதிகள் இரண்டுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இவரது பீடத்துக்குக் கீழே அறுகோணச் சக்கர வடிவம் உள்ளது.

 

  • தல விநாயகரின் திருப்பெயர் செல்வ விநாயகர் என்பது.

 

  • பிரார்த்தனை: எறும்புகளை சுறுசுறுப்புடன் வழிபடச் செய்து அவர்களுக்கு அருள் வழங்கினார் ஈசன் என்பதால், இந்தத் தலம் சுறுசுறுப்புக்குப் பேர் பெற்றது. சுவாமிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேன்மையடையும், துயரங்கள் நீங்கும். இது வழிவழி நம்பிக்கை.

 

  • இந்தக் கோயில் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற தலம் என்பது இன்னுமொரு சிறப்பு. காவிரி தென்கரைத் தலங்களில் 7வது தலமாகத் திகழ்கிறது. திருநாவுக்கரசர் இங்கே இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவை 5, 6-ம் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

 

  • முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் இக்கோவில் திருப்பணிகளை செய்துள்ளனர்.

 

  • பழைய காலத்திய கோவில் என்பதால், இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கோயிலின் பராமரிப்பை ஏற்றுள்ளது. எனவே கோயில் மிகவும் தூய்மையாக, பழைமைச் சிறப்பு வெளித் தெரியக் காட்சி தருகிறது. கற்சுவர்களும் மண்டபங்களும், மலைக் கோவிலின் அழகை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குன்றின் மீது ஏறி வர சுமார் 150 படிகளை நாம் கடந்து வரவேண்டும்.

 

திருவிழா: 

வைகாசியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்,

திருவெறும்பூர்- 620 013.

திருச்சி மாவட்டம்.

 

போன்:

+91-431 – 6574 738, 2510241, 98429 57568 ,9965045666

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. திருச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

five × five =