November 25 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவேதிகுடி

  1. அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்

அம்மன்         :     மங்கையர்க்கரசி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     வைத தீர்த்தம், வேததீர்த்தம்

புராண பெயர்    :     திருவேதிகுடி

ஊர்             :     திருவேதிகுடி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். இந்த தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு “வேதி’ என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.

நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப நாளில் திருமழபாடியில் திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர். அதற்காகச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச் சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள் கொடுத்த ஊர் திருப்பழனம். விருந்துக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத்துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர். மலர்களும் மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி. ஹோமங்களுக்குத் தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்துதான் சென்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறம் வளர்த்த நாயகியுடன் அய்யாரப்பர் சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தியெம்பெருமான் – சுயசாம்பிகை தலத்துக்கு அழைத்துவந்து நன்றி தெரிவிக்கிறார். இது ஏழூர் வலம் என்ற சப்தஸ்தானத் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • சோழ நாட்டுத் தேவாரத் தலங்களின் வரிசையில் காவிரித் தென்கரைத் தலங்களில் 14-ஆம் தலமாகத் திகழ்கிறது திருவேதிக்குடி.

 

  • இறைவனின் திருநாமம் அருள்மிகு வேதபுரீசுவரர். வாழைமடுநாதர் என்றும், ஆராவமுதுநாதர் எனவும் அவருக்குப் பெயர் உண்டு. இறைவியின் திருநாமம் மங்கையர்க்கரசி. தல விருட்சம் வில்வம்.

 

  • இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயர வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.

 

  • கோயில் எதிரிலுள்ள திருக்குளமே தலத்தீர்த்தமாக விளங்கும் வேத தீர்த்தம்.

 

  • ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ள இந்தக் கோயிலில் மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.

 

  • அம்மன் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. இந்தக் கோயிலில் நுழைந்ததும் இடதுபுறமுள்ள மகா மண்டபத்தில் வேத விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு வேதம் கேட்ட விநாயகர் என்பது உள்பட பல பெயர்கள் உண்டு. சிரசை ஒரு புறமாகச் சாய்த்துக் காதைச் சற்று உயர்த்தி வேதம் கேட்கும் பாவனையில் கணபதி அமர்ந்துள்ளார். மிக நேர்த்தியான பல்லவர் காலத்துத் திருமேனி இது. வேதங்கள் வழிபட்ட தலம்.

 

  • பொதுவாக அர்த்தநாரீசுவரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பர். ஆனால், இந்தக் கோயில் அர்த்த மண்டபத்திலுள்ள அர்த்தநாரீசுவரர் கோலம் சற்று வித்தியாசமானது. இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடதுபுறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம்.

 

  • கருவறையில் திகழும் லிங்கத் திருமேனியின் பாணமானது சாளக்கிராமத்தை ஒத்த நீள்வட்ட வடிவமுடையது.

 

  • வேத நாயகரான பிரம்மன் வழிபட்ட தலமானதால் வேதிக்குடி எனப் பெயர் பெற்றது.

 

  • வேதி, பிரம்மன், சூரியன், இந்திரன், மகாவிஷ்ணு உள்ளிட்டோர் வழிபட்ட தலம்.

 

  • வியாசர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த இடம் இது.

 

  • எப்போதும் வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த இடம். வேதபுரீசுவரர் ஆக வேதத்தின் பொருளாக சிவபெருமான் விளங்குகிறார் என்றால் வேதத்தின் சொல்லாகவும், அதன் இனிமையாகவும் மங்கையர்க்கரசி அம்மன் உள்ளார்.

 

  • இந்தத் திருக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 108 சிவ லிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. எனவே, இந்தத் தலத்தை ஒரு முறை வலம் வந்து தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களைத் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

 

  • சூரியன் வழிபட்ட தலம். இப்போதும், ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 13, 15 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீசுவரரை அர்ச்சிப்பதைக் காணலாம்.

 

  • நந்தியெம்பெருமானுக்கே திருமணம் நடத்திவைக்கக் காரணமாக இருந்த தலம் என்பதால் இது திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது.

 

  • ஜாதக ரீதியாகத் திருமணத் தடைக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வரன் அமையவில்லையே என மனதிற்குள் மருகாமல் நம்பிக்கையுடன் திருவேதிக்குடி வந்து வேதபுரீசுவரரையும், மங்கையர்க்கரசியையும் வழிபட்டு நலம் பெறலாம்.

 

  • இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகத்தில் உள்ள “உன்னி இருபோதும்” எனத் தொடங்கும் பாடலை 48 நாள்களுக்குத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும். இது, நூற்றுக்கணக்கானவர்கள் அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.

 

  • தனது மகளுக்குத் திருமணம் தடைப்பட்டு வந்ததால் சோழ மன்னன் ஒருவன் தன் மனைவியுடன் வந்து அம்பாள் மங்கையர்க்கரசியை வழிபட்டிருக்கிறான். அவள் அருளால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெற, மன்னனும் அரசியும் திருக்கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்ததுடன், தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்ற நாமத்தைச் சூட்டி மகிழ்ந்தான்.

 

  • திருமணம் ஆனவர்கள் தங்களது குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி விரிசல் இருந்தாலும், ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இங்கு வந்து வழிபட தம்பதிகளுக்கு இடையே மனக் கசப்பு நீங்கி ஒற்றுமையும் அரவணைப்பும் உண்டாகும். இதை திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் பற்றிப் பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்.

 

  • இத்தலத்தில் வாழும் உயிரினங்கள் யாவும் இணை பிரியாமல் வாழ்கின்றன எனத் தனது பதிகத்தில் பாடுகிறார் சுந்தர பெருமான்.

 

  • நல்ல திருமணத்தை விரும்புகிறவர் இங்கு வந்து நிறைவாழ்வு வாழலாம் என சம்பந்தப் பெருமான் கூறுகிறார். எனவே, திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் தடங்கல்கள் நீங்கித் திருமணம் நடந்து நன்மக்கட் பேறு அமையும் என்பது உறுதி.

 

  • பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், “”உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே என்று பாடியுள்ளார்.

 

  • அருணகிரிநாதர் தமது திருப்புகழில் ‘ஏழு திருப்பதி’ என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய வண்ணப்பக் கலிவெண்பாவில், “ஆற்றல் இலாத் தீது இக்குடி என்று செப்பப்படார் மருவும் வேதிக்குடி இன்ப வெள்ளமே” என்று போற்றி உள்ளார்.

 

  • முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி “வேதிகுடி மகாதேவர் ” என்றும், “பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் ” என்றும் குறிக்கப்படுகிறார்.

 

திருவிழா: 

திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி

 

திறக்கும் நேரம்:

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,

திருவேதிகுடி-613 202.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302

 

அமைவிடம்:

இக்கோயிலுக்கு திருவையாற்றிலிருந்து நகரப் பேருந்தில் செல்லலாம். கண்டியூரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் வருபவர்கள் நெடார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் 2 கி.மீ. தொலைவில் கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

four × three =