December 02 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பசுபதிகோயில்

  1. அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்

உற்சவர்        :     சவுந்திரநாயகி

அம்மன்        :     அல்லியங்கோதை, சௌந்தரநாயகி

தல விருட்சம்  :     ஆலமரம்

தீர்த்தம்         :     காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள், திருக்குளம்

புராண பெயர்   :     திருப்புள்ளமங்கை

ஊர்             :     பசுபதிகோயில்

மாவட்டம்      :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும்பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள். அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது.

ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது. இறுதியில் சகஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது. இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே சுற்றச் செய்திருக்கிறார். சகல ஜீவர்களுக்கு இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலகிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் என்பதை தமக்குள்தாமாக அனுபூதியில் உணர்ந்து கொண்டாள்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். பாற்கடல் தந்த, கேட்ட வரமருளும் காமதேனு பசு நாள்தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம். இதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்கத் திருமேனி மீது பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது.

கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்தி பூச்சியாக இருந்து சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது.  சிவலிங்கத்தின் மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க  சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரமும் பீதியும் அடைந்து துதிக்கையை தரையில் அடித்து புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன. அச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.

மாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தை திருப்புள்ளமங்கை மற்றும் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைப்பர். அதாவது தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்த நாதர் என்று அழைக்கிறார்கள். பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று இதை குறிப்பிடுகிறார்கள்.

 

  • பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

 

  • அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள்.

 

  • குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் ‘ஆலந்துறை’ என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.

 

  • இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும், மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன.

 

  • இத்திருக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயிலாகும். கலை உலகத்தின் உச்சியான பல சிற்பவேலைப்பாடுகளை இத்தலத்தில் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன.

 

  • சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்ந்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள். அஷ்டநாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சார்த்தி பூஜித்தாள்.

 

  • அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண்ணாக கனிமுது என்று சொல்லப்படும் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். இந்த ஏழு தலங்களையும் தரிசித்து ஆத்மானுபூதி அடைந்த தம்பதி மயிலாடுதுறை மயூரநாதரை தரிசித்து உடலைத் துறந்தனர் என்றும் ஒரு புராண வரலாறு உண்டு.

 

  • அம்பிகை சக்கரவாக பறவையாக வந்து வழிபட்ட தலமாதலால் ‘புள்ளமங்கை’ என்று அழைக்கப்படுகிறது. புள்-கழுகு, அதனால் கோபுரத்தில் கழுகுகள் உள்ளன.

 

  • மூலவர் ‘ஆலந்தரித்த நாதர்’ என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘அல்லியங்கோதை’ மற்றும் ‘சௌந்தர்ய நாயகி’ என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

 

  • திருவையாறு ‘சப்த ஸ்தானத் தலங்கள்’ இருப்பது போல், இத்தலத்திற்கு அருகில் உள்ள ‘சக்கரப்பள்ளி’ என்னும் ஊரை மையமாக வைத்து ‘சப்த மங்கை தலங்கள்’ உள்ளன. இந்த ஏழு ஊர்களும் சப்த மாதர்கள் சிவபெருமானை வழிபட்ட தலங்களாகும். அதில் திருப்புள்ள மங்கை தலமும் ஒன்று. தாழைமங்கை, பசுபதிமங்கை, நந்திமங்கை, சூலமங்கை, அரிமங்கை ஆகியவை மற்ற தலங்களாகும். இவை பாடல் பெற்ற தலங்கள் அல்ல.

 

  • திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம் மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

 

  • அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.

 

  • மாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.

 

  • திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “நன்கு உடைய உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் புள்ளமங்கை வாழ் பரம போகமே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா:

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

 

திறக்கும் நேரம்:     

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,

பசுபதிகோயில் அஞ்சல் – 614 206.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:   

+91 9791482102, 8056853485

 

அமைவிடம்:

தஞ்சை – குடந்தை நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். பசுபதி கோயில் நிறுத்தத்திலிருந்து தென்புறம் செல்லும் பிரிவு சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் ஊரும் கோயிலும் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

one × 1 =