January 28 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சேறை

  1. அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சாரநாதன்

தாயார்     :     சாரநாயகி – பஞ்சலெட்சுமி

தீர்த்தம்    :     சார புஷ்கரிணி

ஊர்       :     திருச்சேறை

மாவட்டம்  :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவிழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், “தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்” என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார்.

நான்கு வேதங்களையும் நமக்கு அருளியவன் எம்பெருமான். வேதத்தின் மூலமாகத்தான் நாம் முன்ஜென்ம பாவத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிறோம். வேத கோஷம் மூலம் பகவானை நேரிடையாக தரிசிக்க இயலும் என்பார்கள். அத்தகைய கீர்த்திவாய்ந்த வேதங்களுக்குப் பிரளயத்தினால் மிகப்பெரிய ஆபத்து வந்தபோது அந்த வேதங்களைக் காப்பாற்ற மஹாவிஷ்ணு முடிவு செய்தார். பிரளய காலத்தில் இந்த உலகம் அழிய நேர்ந்தபோது அங்குள்ள வேதம், ஆகமம், சாஸ்திரம், கலை போன்றவற்றைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு பிரம்மாவை அழைத்து மண்ணினால் குடம் ஒன்று செய்து அதில் அந்த வேத, ஆகம, சாஸ்திர கலைகளை ஆவாஹனம் செய்து பிரம்மனிடம் கொடுத்தார். உயிர்களை சிருஷ்டி செய்ய பிரம்மன் முற்பட, குடம் உடைந்துபோனது. பல திவ்விய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அதுபோல் குடம் செய்து  வேதம் முதலானவற்றை அவற்றில் இட்டு, சிருஷ்டிக்க முயற்சித்தபோதும் குடம் மீண்டும் மீண்டும் உடைந்துதான் போனது. மனம் கலங்கிய பிரம்மன் பெருமானிடம் வந்து தனது இயலாமையைத் தெரிவித்தார். உடனே பகவான் காவிரிக்கரை வந்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே எப்பேர்ப்பட்ட இயற்கைச் சூழ்நிலைகளிலும் உடையாதவாறு மண்ணால் திரும்பவும் குடம் செய்து அதனுள் வேதம் முதலானவற்றை வைத்துக் காப்பாற்றித் தந்திருக்கிறார். இம்முறை எந்த விக்னமும் இல்லாமல் பிரம்மனின் சிருஷ்டித் தொழில் எந்தக் குறையுமின்றி நிறைவேறியது. அதோடு வேதங்கள், மற்றும் கலைகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டன.

அந்த மண் குடத்தின் வாய்தான் குடவாயில், அதாவது குடவாசல் எனப்பட்டது. குடத்தின் மூக்குப்பாகம் குடந்தை. அதாவது அது கும்பகோணம் எனப்பட்டது. அனைத்து சிருஷ்டி பீஜங்களும் ஒரே இடத்தில் சேர்ந்ததால் அந்த இடம், ‘திருச்சேறை’ என்றாயிற்று. குடம் செய்யப்பட்ட மண் நல்ல சக்தியுடன் கூடிய சாரமானதாக இருந்ததால் இதற்கு ‘சாரக்ஷேத்திரம்’ என்று பெயர் உண்டாயிற்று. இந்த சார க்ஷேத்திரத்தில் உறைபவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15-வது திவ்ய தேசம் ஆகும்.

 

  • இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட பூமி.

 

  • இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள். ஆலய விமானமும் ‘சார விமானம்’ என்றானது. இப்படி ‘சாரநாதப் பெருமாள்’, ‘சார நாயகித் தாயார்’, ‘திருச்சாரம் தலம்’, ‘சார புஷ்கரணி’, ‘சார விமானம்’ என முறையே மூர்த்தி, தாயார், தலம், தீர்த்தம், விமானம் என ஐந்து விதத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பதால், இத்தலம் ‘பஞ்சசார சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • சாரநாயகி தாயார் சந்நதியில், மூலவராகத் தாயார் காட்சியளிக்கிறார். உற்சவ மூர்த்தி சாரநாயகி, கஜலட்சுமியாக தரிசனம் தருகிறார்! இருவரும் கிழக்கு நோக்கிய திருமுகம் கொண்டுள்ளனர். இந்த சாரநாயகி தாயார் கொடிமரம் கடந்து ஆலயத்திற்கு வெளியே செல்ல மாட்டார். இதனால் இவருக்குப் ‘படிதாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு.

 

  • இக்கோவில் 500 முதல் 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது.

 

  • கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் 90 அடி உயரமானது. இத்தல விமானத்துக்கு சார விமானம் என்று பெயர்.

 

  • கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரித் தாய் ஆகியோருக்கு தனிசந்நிதிகள் உள்ளன.

 

  • கோயில் உள்சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்யபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி, பால சாரநாதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

 

  • மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். ஒரு சமயம் உப்பிலியப்பன் கோயிலில் மார்க்கண்டேயர் மகள் பூதேவியை பெருமாள் விரும்பினார். அப்போது மார்க்கண்டேயர் தனது மகளுக்கு சிறு வயது என்றும் அவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது என்றும் கூறுகிறார். மேலும் அவளை பெருமாளுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க முடியும் என்றும் கேட்கிறார். அதற்கு பெருமாள் அக்குழந்தை உப்பே போடாமல் சமைத்தாலும் அதை தான் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பூதேவியை ஏற்றுக் கொள்கிறார். அன்றைய தினத்தில் இருந்து பெருமாள் ‘உப்பிலியப்பன்’ என்ற பெயர் பெற்று, உப்பில்லாத நைவேத்யத்தை ஏற்றுக் கொள்கிறார். மார்க்கண்டேயர் திருச்சேறையில்தான் முக்தி அடைந்தார்.

 

  • அழகிய மணவாள நாயக்கர் மன்னர், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சந்நிதியின் திருப்பணிகள் செய்ய விரும்பினார். அதன்படி திருப்பணிகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிய வண்டிகள் திருச்சேறை வழியாக சென்றன. அப்போது நரசபூபாலன் என்பவன், மன்னனுக்குத் தெரியாமல் இக்கோயில் பணிகளுக்காக வண்டிக்கு ஒரு கல்வீதம் இறக்கி வைத்தான். இதுகுறித்து கேள்விப்பட்ட மன்னன், விசாரணை செய்வதற்காக இங்கு வந்தபோது பயந்துபோன நரசபூபாலன், பெருமாளை சரண்டைந்தான். பெருமாளும் மன்னனுக்காக மன்னார்குடி ராஜகோபாலனாக தோன்றி அருள்பாலித்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் பல செய்தான்.

 

  • தேவர்கள், பூவுலகினர் என அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வாதாரம் பொதிந்த வேதங்களையும், ஆகமங்களையும் அந்த சார சேத்திர மண்குடம் தாங்கிக் கொண்டிருப்பதால், அத்தலம் ‘திருச்சாரம்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே தற்போது மருவி ‘திருச்சேறை’ என்று வழங்கப்படுகிறது. ‘சாரம்’ என்றால் ‘சத்து’ எனப் பொருள்படும். பிரம்மன் குடம் செய்ய மண் கொடுத்த திருக்குளம் ‘சார புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் சேறு போன்ற மண் கிடைத்து அதில் குடம் செய்யப்பட்டதால், இத் திருத்தலம் ‘திருச்சேறை’ என்றானதாகவும் கூறுகிறார்கள்.

 

  • திரிவிக்கிரம அவதாரம் எடுத்த போது சத்தியலோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை நான் திருமஞ்சனம் செய்ய, அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கை ஆகியது.  எனவே நானே  புனிதமானவள் என்று கங்கை கூறினார்.  இதனை கேட்டு வருத்தமுற்ற காவேரி  சாராபுஷ்கரணியில் உள்ள அரசமரத்தடியில் திருமாலைக் குறித்து  கடுந்தவம்  மேற்கொண்டார். மகாவிஷ்ணு தை மாசப் பூசம் நட்சத்திர தினத்தன்று குழந்தையாய் தோன்றி தவழ்ந்து வர, கோடி சூர்யபிரகாசத்தை கண்ட காவேரி, குழந்தையன்று எம்பெருமானே என்று தொழுது  நின்றாள்.  திருமால் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து  தேவிகள் புடை சூழ சங்கு சக்கர தாரியாக காட்சியளித்தார்.  ”கங்கையிற் புனிதமாய் காவேரி” என  அருள் புரிந்தார். இத்தலத்தில் காவிரிக்கு தனி சன்னதி உள்ளது

 

  • மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

 

  • வைணத்திருத்தலங்களில் ‘தைப்பூசப் பெருவிழா’ நடைபெறும் ஒரே திருத்தலம் இதுதான்.

 

திருவிழா: 

தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்,

திருச்சேறை- 612605

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 0435-2468078, 435-2468001.9444104374,

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மிக அருகில் பாடல் பெற்ற சிவாலயமான சார பரமேஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

one × two =