February 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்

  1. அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வேதபுரீஸ்வரர்

அம்மன்         :     சவுந்தராம்பிகை

தல விருட்சம்   :     வில்வம், சந்தனம்

தீர்த்தம்         :     வேத தீர்த்தம்

புராண பெயர்    :     திருவழுந்தூர்

ஊர்            :     தேரழுந்தூர்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் உருவெடுத்து, பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படி சாபம் இடுகிறார். சிவபெருமான் உமையவளைப் பசு ஆகும்படி சபித்தது தேரழுந்தூரில் தான் என்று அவ்வூர் புராண வரலாறு கூறுகிறது. துணைவியைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு, இத்தலத்தில் மரத்தின் கீழ் அமர்ந்து வேதம் ஓதி வந்தார். அதனால் அவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை “அழுந்தை” என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.

 

கோயில் சிறப்புகள்:

  • திருவழுந்தூர் வேதம் தழைத்த ஊர். வேத முழக்கம் எதிரொலித்த ஊர். ஒமப்புகை எங்கும் பரவிய ஊர். இங்குள்ள அந்தணர்கள் பெருமளவில் வாழ்ந்து வேதம் ஓதி, வேத தர்மத்தில் திளைத்து, வேதத்தை பறை சாற்றி இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்களாக விளங்கினர். இத்தலத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் அழுந்தூர் வாழ் மறையவர்களின் பெருமையைப் போற்றி ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அழுந்தை மறையோர் என்று ஒவ்வொரு பாட்டிலும் அவர்களுக்குத் தனி ஏற்றம் தருகிறார். திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

 

  • தேரழுந்தூர் என்று இன்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மேற்கே மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் ஆலயமும் இருக்கிறது.

 

  • கருவறையில் வேதபுரீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மற்றொரு சிறிய கோவிலில் ஸ்ரீமடேஸ்வரர் சந்நிதி உள்ளது

 

  • அம்பாள் திருநாமம் ஸ்ரீமடேஸ்வரி. இதுதான் ஆதி கோவில் என்றும், வேதபுரீஸ்வரர் சந்நிதி இதற்குப் பின்னரே தோன்றியதென்றும் கூறுகிறார்கள்.

 

  • அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றிருக்கின்றனர்.

 

  • கிழக்குப் பிரகாரத்தில் தல விருட்சமான சந்தன மரம் இருக்கிறது. இம்மரத்தினடியில் தான் சிவபெருமான் அந்தணர்களுக்கு வேதம் பயிற்றுவித்ததாக தலபுராணம் கூறுகிறது. அதன் அடையாளமாக பக்கத்தில் ஷேத்திர லிங்கத்தையும், நந்தியையும் காணலாம்.

 

  • தென் பிரகாரத்தில் கிழக்கே நோக்கியபடி உள்ள வலஞ்சுழி விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் தான் தென்மேற்குப் பகுதியில் ஸ்ரீமடேஸ்ரர் சந்நிதிக்கு எதிரில் இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி கிழக்கு நோக்கி சிவன் சந்நிதியை நோக்கி தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது.

 

  • வடமேற்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில். காவேரி அம்மன், அடுத்து சூரியன், காலபைரவர் முதலியவர்களும் இருக்கின்றனர்.

 

  • வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் வழிபட்டத் திருத்தலம். இத்தலம் “சந்தனவனம்” என்றும் விளங்கியுள்ளது.

 

  • கற்கசன் என்ற திருடனை அரசசேவகர்கள் அரசனிடம் கொண்டு செல்ல இழுத்து சென்றார்கள். அன்று சோம வாரமாக இருந்த காரணத்தால் வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆரத்தி நடந்து கொண்டு இருந்தபடியால் எங்கும் ஹர ஹர என்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஹர ஹர ஒலி கற்கசன் காதில் விழுந்த காரணத்தால் இந்த ஒலியிலேயே லயித்து சமாதி நிலையை அடைந்து இதை அறியாத சேவகர்கள் கற்கசனை மிகவம் துன்புறுத்தி விட்டார்கள். எம தூதர்கள் அவன் உயிரைக் கொண்டு செல்ல கால பாசத்தோடு வந்திருந்தனர். சிவன் தூதர்கள் உடன் தோன்றி அவன் மரிக்கும்போது வேதபுரீஸ்வரனைத் தியானித்து விட்டான். ஆகவே அவனைக் கயிலாயம் அழைத்துச் செல்ல வேண்டுமென அழைத்துச் சென்றனர். ஆகையால் இங்கு சோமவாரதினத்தில் வேதபுரீஸ்வரனைத் தொழுவது சாலச் சிறந்தது என கருதப்பட்டுவருகின்றது.

 

  • இங்கு அகத்தியருக்கும், காவிரிக்கும் சந்நிதி உள்ளது.

 

  • இது கம்பர் அவதரித்த ஊராகும். அவர் வாழ்ந்த இடம் “கம்பர் மேடு” என்று வழங்குகிறது.

 

  • இரும்பிடர்த் தலையார் என்னும் தமிழ்ச் சான்றோரும் வாழ்ந்த பதி.

 

  • மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாøல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில்.

 

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது தேவாரத்தலம் ஆகும்

 

  • ஞானசம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்தபோது இரண்டு திசையிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோயில் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இத்தலத்தில் இருந்த பிள்ளையார் “அதோ ஈஸ்வரன் கோயில்’ என சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிள்ளையார் “ஞானசம்பந்த விநாயகர்’ என அழைக்கப்படுகிறார்.

 

திருவிழா: 

சித்ரா பவுர்ணமிக்கு பத்து நாள் முன்னதாக கொடியேற்றி தேர் திருவிழாவுடன் முடிகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,

தேரழுந்தூர் 609808

மயிலாடுதுறை மாவட்டம்.

 

போன்:    

+91- 4364-237 650.

 

அமைவிடம்:

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது தேரழுந்தூர். அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

five × 2 =