February 19 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

  1. அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சக்கரபாணி

தாயார்     :     விஜயவல்லி தாயார்

தீர்த்தம்    :     மகாமக குளம்

ஊர்       :     கும்பகோணம்

மாவட்டம்  :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார். சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.

 

  • சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

 

  • இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

 

  • முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

 

  • கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.

 

  • ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

 

  • ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.

 

  • காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

 

  • கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாமகம்’ திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம்.

 

  • மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

 

  • சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தளம் இது.

 

  • சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.

 

 

திருவிழா: 

மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும் அட்சய திரு தியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும் வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்

கும்பகோணம்  612 001

தஞ்சாவூர்.

 

போன்:    

+91 435-2403284

 

அமைவிடம்:

சுவாமிமலை ரோட்டில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. கும்பகோணம் நகரத்திலிருந்து பல பேருந்துகள், வாடகை வண்டிகள் இக்கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.

Share this:

Write a Reply or Comment

5 + four =