March 04 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செம்பொனார்கோவில்

  1. அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுவர்ணபுரீஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை

தல விருட்சம்   :     வன்னி, வில்வம்

தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம், காவேரி

புராண பெயர்    :     இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி

ஊர்            :     செம்பொனார்கோவில்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோச்செங்கட்சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் காணப்படுகிறது.

 

  • கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார்.

 

  • சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் சிறப்பு.

 

  • சுயம்பு மூர்த்தியாக, மகோத்தம லிங்கமாக அருள்கிறார் சிவன். வட்ட வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும், சதுர வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி பிரம்மாவாலும் பூஜிக்கப்பட்டதாக தலவரலாறு சொல்கிறது.

 

  • கருவறையில் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.

 

  • அம்பாள் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் காட்சி தருகிறாள்.

 

  • அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழில் ’மருவார் குழலியம்மை’ என்றும் அம்பாளைச் அழைக்கிறார்கள்.

 

  • அம்பிகை ஆலயத்துக்கு தென் மேற்கில் சப்த கன்னிகைகள் ஆலயம் உள்ளது.

 

  • தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

 

  • த்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

 

  • பிரகாசப் பிள்ளையார் இந்திர கணபதி என்று 2 விநாயகர்கள் இருக்கிறார்கள். வனதுர்கை, விஸ்வநாதர், பாலசுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, ஜேஷ்டாதேவி, பிட்சாடனர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் இங்கு உள்ளன. கோயிலின் தென்புறத்தில் இந்திரன் அகழ்ந்ததாகக் கூறப்படும் கிணறு உள்ளது.

 

  • குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றைப் பெற்றதால் இத்தலம் ‘செம்பொன் பள்ளி’ என்று அழைக்கப்படுகிறது. மூலவரும் ‘சொர்ணபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

 

  • கோயில் பிரகாரத்தில் உள்ள முருகப் பெருமான் தனது கையில் வஜ்ராயுதம், அட்சய மாலை ஆகியவற்றுடன், வள்ளி, தேவசேனை இல்லாமல் காட்சி தருகின்றார்.

 

  • கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று.

 

  • திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், நெறி கொண்டே அன்பு அள்ளி ஓங்கும் அறிவு உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளிவாழ் ஞான போதமே” என்று போற்றி உள்ளார்.

 

  • லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

 

திருவிழா: 

சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும், 9 நாள் பெருந்தேர் விழாவும் “சவுரமகோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

செம்பொனார்கோவில் – 609309

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91-99437 97974

 

அமைவிடம்:

மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

Share this:

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Write a Reply or Comment

2 × two =