May 09 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சைதாப்பேட்டை

  1. அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரசன்ன வேங்கட நரசிம்மர்

தாயார்          :     அலர்மேல்மங்கை

தல விருட்சம்   :     செண்பக மரம்

தீர்த்தம்         :     தாமரை புஷ்கரிணி

ஊர்             :     சைதாப்பேட்டை

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் சிவசுப்ரமணியரும், திருநாரையூரில் சௌந்தரீஸ்வரரும்,  அருட்பாலிக்க, ரகுநாதபுரத்தில் கோதண்டராமர் அருளாட்சி புரிந்தார். இந்த ரகுநாதபுரம் கோதண்டராமர் கோயில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பகுதியில் வளையல் வியாபாரம் செய்யும் பலிஜாநாயுடு மக்கள், வீடுகள் கட்டி குடியேறினார்கள். தங்கள் மனம் கவர்ந்த ராமன் இங்கு கோயில்  கொண்டிருப்பது கண்டு குதூகலித்தார்கள். சக்ரவர்த்தி திருமகனும் தன் பாதம் பணிந்த மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க, குடி உயர்ந்தது.  குடி உயர நன்றியோடு கோயில் வளர்க்க விரும்பினார்கள் அம்மக்கள். அப்படி ராமர் கோயிலை விரிவுபடுத்தி புதுப்பிக்கும் பணி நடந்த போதுதான் ஓர்  அதிசயம் நிகழ்ந்தது.

ஆலயத் திருப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சுவாமி விக்ரகங்கள் அழகு காட்டி சிரித்தன. எங்களுக்கும் இங்கேயே ஆலயமெழுப்புங்கள் என  குறிப்பால் உணர்த்தின. ராமனின் ஆலயப் பணியில் பிரசன்னமான இவருக்கு பிரசன்ன வேங்கடவன் என பெயரிட்டு, அழகிய ஆலயமெழுப்பி  அமர்த்தினார்கள். அந்த வைபவத்தை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் எழுந்தருளி நடத்தி வைத்ததால், இவர்  பிரசன்ன வேங்கட நரசிம்மராய் அருள்புரிகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. ஆதியில் இந்தக் கோயிலில் சீதாதேவி-லட்சுமணர் சகிதமாக ராமர் அருள்பாலித்து வந்தார்.

 

  • இங்கு பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் பெயருடன் சிம்மமுகம் இல்லாத நரசிம்மரை தரிசிக்கலாம். 900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி, இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார் எனச்சொல்லப்படுகிறது.

 

  • சக்கரத்தாழ்வாரின் திருமேனி முன்னே இருக்க… பின்னே அதே விக்கிரகத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார்

 

  • தனக்கான பணிகளை தாமே யார் மூலமாவது அழகாய் நிறைவேற்றிக் கொள்ளும் இந்த நரசிம்மனின் லீலை ராஜகோபுரப் பணி நடந்து கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில், சுமார் ஒரு லட்ச ரூபாய் தேவைப்பட்டதாம். என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றபோது ஒரு வயதான பெரியவர் அங்கு வந்தாராம் கோபுர வேலை நடக்குதா? வெரிகுட். எவ்ளோ எஸ்டிமேட்? என்று கேட்டாராம்.  பணமில்லாத வருத்தத்தில் இருந்த திருப்பணி குழுவினர், அவரது ஏழ்மையான தோற்றத்தைக் கண்டு அலட்சியமாக  இருபத்தி அஞ்சு லட்சம் என  பதில் சொல்ல, தன் பாக்கெட்டில் இருந்து ஒரு செக் எடுத்து கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு நடையைக் கட்டினாராம் பெரியவர்.செக்கைப்  பார்த்தவர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. அதில் எழுதியிருந்த தொகை ஒரு லட்ச ரூபாய். அப்பொழுதும் சந்தேகத்தோடு வங்கியை அணுக,  மூன்றாவது நாள் பணம் கிடைத்துவிட்டது இப்படி ஒவ்வொரு வேலையையும் அவரே நடத்திக்கிறார்

 

  • வெளிப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார் தனிச்சந்நதியில் அருள்கிறார். இவருக்கு அருகே அலர்மேலுமங்கைத் தாயார் சந்நதி. பேரழகோடு வீற்றிருக்கும் அன்னை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் ஆலயத் திருப்பணியின் போது பூமியில் இருந்து கிடைத்தவர்.

 

  • இங்கு வேங்கடேசரை பிரதிஷ்டை செய்தபோது கூடவே அழகிய சிங்கர் விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே இக்கோயில் பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

 

  • மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

 

  • மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர் சிம்ம முகம் இல்லாமல் சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் அழகிய சிங்கர் என்று அழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு இவருக்கு பூஜை செய்யப்படுகிறது.

 

  • இங்குள்ள ராமர் சன்னதியில் ஒரே நேரத்தில் ராமபிரானை திருமண கோலத்திலும் பட்டாபிஷேக கோலத்திலும் தரிசிப்பது சிறப்பாகும்.

 

  • இங்கு ஆண்டாள், கோதண்டராமர், அனுமன், சேனைமுதலி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

 

திருவிழா: 

சித்திரை பிரமோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, ராம நவமி

 

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில்

மேற்கு சைதாப்பேட்டை  600 015

சென்னை

 

போன்:

93811 63501

 

அமைவிடம்:

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. சைதாபேட்டைக்கு சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

fifteen − one =