May 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சாக்கோட்டை

  1. அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்

உற்சவர்        :     அமிர்தகலசநாதர்

அம்மன்         :     அமிர்தவல்லி

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     நால்வேத தீர்த்தம்

புராண பெயர்    :     திருக்கலயநல்லூர்

ஊர்            :     சாக்கோட்டை

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றார் என்பதை சுந்தரரின் பதிகம் 10-வது பாடல் மூலம் அறியலாம்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் பதிகத்தின் 10-வது பாடலின் படி இத்தலம் சுந்தரர் காலத்தில், அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது என்பதும், குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புறத்திலும் சூழப்பெற்று அமைந்திருந்தது என்பதும் புலனாகிறது. மேலும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் இயறகை வளத்தையும் தனது ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் காரணமாக ஓசை எழுந்தத்தால், கரிய எருமைகள் மிரண்டு அரிசலாற்றின் நீரில் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும், பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, மல்லிகைக் கொடி, சண்பகமரம் என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம் மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூர் என்றும், நீரில் அலைகள் மேல் எழுந்து சென்று, ஏலம், இலவங்கம் என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில், பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி, பொன்னை மலர்ந்து, பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூர் என்றும், வெண்மையான கவரி மயிரும், நீலமான மயில் இறகும், வேங்கை மரம், கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில், கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனின் வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூர் என்றும், பலவாறு கலயநல்லூர் தலத்தின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

  • சாக்கியர்கள் வாழ்ந்த பகுதியாதலால் பிற்காலத்தில் இப்பகுதி ‘சாக்கோட்டை’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.

 

  • இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றார் என்பதை சுந்தரரின் பதிகம் 10-வது பாடல் மூலம் அறியலாம்.

 

  • மூலவர் ‘அமிர்தகலசநாதர்’ என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘அமிர்தவல்லி’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

 

  • கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

 

  • கும்பகோணத்தில் மகாமகத்தன்று நடைபெறும் தீர்த்தவாரிக்கு இத்தலத்திலிருந்தும் உற்சவமூர்த்தி மகாமக குளத்திற்கு எழுந்தருளுவார்.

 

  • இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.

 

  • இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது.

 

  • இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

 

  • மக்கள் இக்கோயிலை “கோட்டைச் சிவன்கோயில்” என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டை நாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 

  • லிங்கோற்பவர் – பச்சைக்கல்லால் ஆனது. இதன் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும், பிரமனும் (சுமார் 2 அடி உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர்.

 

திருவிழா: 

மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை

 

திறக்கும் நேரம்:

காலை 10 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில்

சாக்கோட்டை – 612401

தஞ்சாவூர் மாவட்டம்

 

போன்:    

+91- 435-2414 453, 98653 06840,9788202923

 

அமைவிடம்:

கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்

Share this:

Write a Reply or Comment

1 × five =