July 15 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணிக்கூடம்

  1. அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)

தாயார்     :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)

தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி

ஊர்       :     திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

மாவட்டம்  :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். இதில் கோபம் கொண்ட தக்கன், சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என்று சாபமிட்டார்.

தக்கனின் சாபம் காரணமாக, முழு சந்திரன் தேயத் தொடங்கினார், சாபம் விமோசனம் பெறுவதற்காக ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு சென்றுவிட்டு, நிறைவாக திருமணிக்கூடத்துக்கு வந்தார் சந்திரன். திருமணிக்கூடத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சந்திரன் வழிபடும்போது, திருமணிக்கூட நாயகன், சந்திரனுக்கு வரதராஜராகக் காட்சி அளித்தார். சந்திரன் சாப விமோசனம் கிடைத்து, அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் கோயில், 37-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது

 

  • மணிக்கூடம் போன்ற அமைப்பில் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • கோயிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கருடாழ்வார் சந்நிதி, மகாமண்டபம், அர்த்த மண்டபங்களைக் காணலாம்.

 

  • கனக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி உள்ளார்.

 

  • வலது புறத்தில் சதுர வடிவில் அமைந்துள்ள பத்ம பீடத்தின் மீது நின்றபடி வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கரத்தை தொங்கவிட்ட படியும் ஸ்ரீதேவி அருள்பாலிக்கிறார். இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்கவிட்டபடியும் அருள்பாலிக்கிறார். அருகில் உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

 

  • அர்த்த மண்டபத்தின் வடக்கு திசையில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

 

  • சந்திரன் சாப விமோசனம் பெறுவதற்கு இங்கு வந்து வழிபாடு செய்தபோது, அவருக்கு பெருமாள் தரிசனம் அளித்தது போன்று தனக்கும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று பெரிய திருவடி கருடாழ்வார், திருமாலை வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று திருமணிக்கூட பெருமாள் கூறியதோடு மட்டும் இருக்காமல், கருடாழ்வாருக்கும் காட்சி கொடுத்து வாழ்த்தினார்.

 

  • தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும்

 

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாத கருட சேவை நாட்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில்,

திருமணிக்கூடம்- 609 106,

திருநாங்கூர்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91 96554 65756

 

அமைவிடம்:

சீர்காழியிலிருந்து(6 கி.மீ) நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் இத்தலம் செல்லலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

1 × four =