July 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சமலை

  1. அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      பாலமுருகன்

ஊர்        :      கஞ்சமலை

மாவட்டம் :      சேலம்

 

ஸ்தல வரலாறு:

திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப விமோசனம் அளித்தார். முருகனுக்கும், மயிலுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இப்பகுதியிலுள்ள பக்தர்கள், கஞ்சமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குழந்தை ரூபத்திலான முருகனுக்கு கோயில் எழுப்பினர். கோயில் அமைந்துள்ள குன்று கஞ்சமலைத் தொடரை சேர்ந்தது.

 

மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், ருத்திரன், காளாங்கி, கஞ்சமலையானோடு எழுவரும் என் வழியாமே, என்று திருமந்திரத்தில் பாடல் பெற்ற தலம் இது. மலையின் உயரத்தை அடிவாரத்தில் இருந்து பார்த்தால், இதில் ஏறிவிட முடியுமா என மலைப்பாகத் தோன்றும். ஆனால், 250 அடி உயரமே உள்ள இந்த மலையில், 101 படிக்கட்டுகளை கடந்தால் கோயிலை அடைந்து விடலாம். அதுமட்டுமல்ல! மலைக்கோயிலுக்கு நேரடியாக கார்களிலும் சென்று விடலாம்.  தங்கம் அருளும் தங்கம்: கஞ்சம் என்ற சொல்லுக்கு தங்கம், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உள்ளன. இம்மூன்று பொருள்களும் இம்மலைக்கு பொருந்தும்.  கஞ்சம் என்பதற்கு முதல் பொருள் பொன் என்பதாகும். பராந்தக சோழன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடும் நடராஜப் பொருமானுக்குத் தங்க நிழல் தந்தது கஞ்சமலையில் உள்ள தங்கத்தைக் கொண்டே என்று சொல்கிறார்கள். கஞ்சமலையிலும், சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாதும் மிகுந்துள்ளது. இம்மலைப் பாறைகளில் கருத்த இடங்கள் அதிகம் இருப்பதால் கருங்காடு என்ற பெயரும் உள்ளது. இக்கருங்காட்டில் விளையும் கருமை நிற மூலிகைகள் மற்ற மூலிகைகளை விட மருத்துவ குணம் மிக்கவை. கருமை படர்ந்த மூலிகைகளில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. கஞ்சன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். அவரால் உருவாக்கப்பட்ட மலை என்பதால் கஞ்சமலை என்று பெயர் வந்ததாக கரபுரநாதர் புராணம் கூறுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • கர்ப்பகிரகத்தில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • 15வகை நோய்கள், மயக்கம், மனோவியாதியை நீக்கும் சக்தி படைத்த கருநெல்லி மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தால் நீண்டகால நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

 

  • `கஞ்சமலை சித்தர்` எனப்படும் காலாங்கி நாதர், சித்தர்கோயிலில் குடிகொண்டுள்ளார். பொதுவாக மூலிகைகள் நிறைந்த வனம் மற்றும் மலைகளில் சித்தர்கள் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அதை மெய்ப்பிக்கும் வகையில், கஞ்சமலை அடிவாரத்திலிருந்து மக்களின் இன்னல்களை நீக்குகிறார்  சித்தேஸ்வர சுவாமி என்றழைக்கப்படும் காலாங்கி நாதர்.

 

  • 18 சித்தர்களில் முதன்மையானவரான திருமூலர், தனது சீடரான காலாங்கிநாதருடன் இங்கு இருந்துள்ளார். அதனாலேயே இந்த ஊருக்கு சித்தர்கோயில் என்று பெயர். கஞ்சமலையில் முதுமையைப் போக்கி, இளமையைத் தரக்கூடிய மூலிகை இருப்பதையறிந்த திருமூலர், அதைத்  தேடி கஞ்சமலைக்கு வந்தார். அப்போது, அவரிடம் சீடராக இணைந்தார் காலாங்கி நாதர்.

 

திருவிழா: 

கந்தசஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்

கஞ்சமலை,

சேலம்.

 

போன்:    

+91 98431 75993

 

அமைவிடம்:

சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம். இந்தக் கோயில் பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

18 − seven =