July 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காவளம்பாடி

  1. அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு

 

மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம்

மூலவர்        :     கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)

தாயார்          :     செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை

தீர்த்தம்         :     தடமலர்ப்பொய்கை தீர்த்தம்

புராண பெயர்    :     காவளம்பாடி

ஊர்             :     காவளம்பாடி (திருநாங்கூர்)

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர். சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

 

கிருஷ்ண பரமாத்மா சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்தியபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை. கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்தியபாமாவுக்காக பாரிஜாத மலர்ச்செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.

 

கோயில் சிறப்புகள்:

  • காவளம் என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது.

 

  • இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாக தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி.

 

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்காவளம்பாடி கோபாலகிருஷ்ணர் கோயில், 27-வது திவ்யதேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • இங்கு பெருமாள் ராஜகோபாலன் என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில், வலது கையில் சாட்டையுடனும், இடது கையைப் பசுவின்மேல் வைத்த நிலையிலும் கோயில் கொண்டிருக்கிறார். இவரருகே பாமா-ருக்மிணி உள்ளனர். துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான், சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இத்தலம் துவாரகைக்கு சமமானதாகக் கருதப்படுகிறது.

 

  • மனைவியர் பாமா, ருக்மணியுடன் கருவறையில் கிருஷ்ணர் காட்சி தரும் தலம்

 

  • மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம்

 

  • இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.

 

  • சிறிய கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்தியபாமாவுடன் எழுந்தருளியுள்ளார்.

 

  • திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் திருக்காவளம்பாடி, திருஅரியமேய விண்ணகரம், திருவண் புருஷோத்தமம், திருச்செம்பொன் செய் கோயில், திருமணிமாடக் கோயில், திருவைகுந்த விண்ணகரம் ஆகிய 6 தலங்கள் திருநாங்கூருக்கு உள்ளே அமைந்துள்ளன.

 

  • திருத்தேவனார்த் தொகை, திருத்தேற்றியம்பலம், திருமணிக்கூடம் திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன் பள்ளி ஆகிய 5 தலங்கள் திருநாங்கூருக்கு வெளியே அமைந்துள்ளன.

 

  • ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் இந்த 11 பெருமாள்களும் கருட சேவையில் மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் எழுந்தருளி திருவிழா காண்பர். இந்த 11 பெருமாள்களையும் ஒருவர் பின் ஒருவராக திருமங்கையாழ்வார் வந்து மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண் கொள்ளா கருடசேவை திருவிழாவில் கலந்து கொள்ள, பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

 

  • ஆண்டுதோறும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் திருநாங்கூரை சுற்றி உள்ள வயல் வெளிகளில் வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. கருடசேவைக்கு முன் நெற் பயிர்கள் காற்றினால் சலசல என்று சப்தமிட, அந்த சத்தத்தை கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரேவேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் அவரால் மிதிக்கப்பட்ட வயல் வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்றும் இப்பகுதியில் மக்கள் பரிபூர்ணமாக நம்புகிறார்கள்.

 

திருவிழா:

கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி விழா தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேச பெருமாள் அனைவரும் ஒன்றாக கருடசேவைக்கு மணிமாடக் கோயிலில் எழுந்தருள்வது வழக்கம்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில்,

காவளம்பாடி(திருநாங்கூர்)- 609 106

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:

+91-4364-275 478

 

அமைவிடம்:

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோயில் திருநாங்கூரில் இருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது,

 

Share this:

Write a Reply or Comment

1 × 2 =