August 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பந்தநல்லூர்

  1. அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      பசுபதீஸ்வரர்

அம்மன்          :      வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி

தல விருட்சம்   :      சரக்கொன்றை

தீர்த்தம்          :      சூரிய தீர்த்தம்

புராண பெயர்    :      பந்தணைநல்லூர்

ஊர்              :      பந்தநல்லூர்

மாவட்டம்       :      தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைத்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் ஆனது. பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார்,

பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க அதன் ஒருகால் குளம்பு புற்றின் மீது பட இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள். மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்பாள் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 35 வது தேவாரத்தலம் திருப்பந்தணைநல்லூர்.

 

  • மூலவர் பசுபதீஸ்வரர். சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் லிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது

 

  • மூலவர் புற்றால் ஆனவர் என்பதால் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது.

 

  • ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன.

 

  • அம்பாள் வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை. அம்பாள் தவம் செய்யும் கோலத்தில் உள்ளதால் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாக உள்ளனர்.

 

  • சிவன் பசுவின் பதியாக வந்ததால் பசுபதீஸ்வரர் என பெயர் பெற்றார்.

 

  • கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார்.

 

  • சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு திருஞானசம்பந்தர் திருவாயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.

 

  • கோவிலுள் பிரமன் வாலி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

 

  • இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

  • சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக உள்ளனர்.

 

  • நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது.

 

  • விஷ்ணு தனி கோயிலில் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர் உமையுடன் ஆயனாக வந்து இங்கு ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

 

  • திருக்கோவிலில் காம்பீலி மன்னனின் மகன் பார்வை பெற்று திருப்பணிகளையும் செய்து வழிபட்டு இருக்கிறார் என புராண வரலாறு உள்ளது. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

 

  • காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் வழிபாடு செய்துள்ளனர்.

 

  • அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார்.

 

  • ராமலிங்க அடிகளாரும் பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர்.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

 

திருவிழா: 

மாசி மகம், பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,

பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்)

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045

 

அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து (30 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூர் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து வருபவர்கள் குத்தாலம் வழியாக பந்தநல்லூர் வரலாம்.

Share this:

Write a Reply or Comment

two + fourteen =