August 13 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமங்கலக்குடி

  1. அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர்

அம்மன்         :     மங்களாம்பிகை

தல விருட்சம்   :     கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)

தீர்த்தம்         :     மங்களதீர்த்தம் (காவிரி)

புராண பெயர்    :     திருமங்கலக்குடி

ஊர்             :     திருமங்கலக்குடி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார. கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பப் பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவநாயகன்)என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளினர்கள். இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில் மனிதன் விலங்கு பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்துள்ளார். இக்கோயிலில் சோழர் பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. காளி சூரியன் திருமால் பிரம்மா அகத்தியர் அம்பாள் ஆகாசவாணி பூமாதேவி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 38 வது தேவாரத்தலம் திருமங்கலக்குடி இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இத்தலம் பஞ்சமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 1. ஊரின் பெயர் மங்கலக்குடி 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தல தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம் 5. இத்தல விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

 

  • அனைத்து கோயில்களிலும் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரை விட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது. அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான் மலர் வைத்து பூஜித்தார்.

 

  • நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் பூஜைகள் செய்கின்றனர்.

 

  • இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

  • காவேரி சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 

  • ஒரே கோயிலே இரட்டைக் கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது.

 

  • சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக உள்ளது. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிசேகம் செய்கின்றனர்.

 

  • சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.

 

  • அனைத்து கோயில்களிலும் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.

 

  • ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார். கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது.

 

திருவிழா: 

பங்குனி உத்திரம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – 2 ம் நாள் திருக்கல்யாணம் விசேசம் – இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா இதுவே ஆகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில்,

திருமங்கலக்குடி- 612 102.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-435 – 247 0480.

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., தூரம் ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றால் திருமங்களக்குடியை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. ஆடுதுறையில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

Share this:

Write a Reply or Comment

twenty − one =