May 18 2018 0Comment

திண்டல் முருகன் கோவில்:

 

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் முருகன் கோவில் என்பது அருள்மிகு #வேலாயுதசாமி திருக்கோவிலாகும்.

இவர் குழந்தை வேலாயுத சுவாமி குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

தல சிறப்பு :

நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும் ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம் சிவன்பார்வதி சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர். 

முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது.

அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது.

அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோவிலை அடையலாம். 

காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.

தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தருகிறார் திண்டல்மலை முருகன். கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் #தன்னாசி குகை உள்ளது. 

இதில் சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது.

இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 

மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

கோவிலின் சிறப்பு :

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார். 

இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. #பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

ஈரோடு நகரின் வளத்திற்கும் செழிப்பிற்கும் தீர்க்கமாய் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே இந்நகரமக்களின் சிறப்பான எண்ணம் ஆகும்.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

eight − two =