March 19 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     சுவேதாரண்யேஸ்வரர்

அம்மன்         :     பிரமவித்யாம்பிகை

தல விருட்சம்   :     வடவால், கொன்றை, வில்வம்

தீர்த்தம்         :     முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)

புராண பெயர்    :     ஆதிசிதம்பரம், திருவெண்காடு

ஊர்             :     திருவெண்காடு

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு :

மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து வந்தான். இதுகுறித்து கவலை அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானின் ஆலோசனைப்படி தேவர்கள், வேற்று உருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். தேவர்களைத் தேடி திருவெண்காட்டுக்கும் வந்தான் அசுரன். சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து, அவரது அருளால் சூலாயுதத்தைப் பெற்றான். சூலாயுதத்தை வைத்து ரிஷபதேவருக்கு துன்பம் விளைவித்து அவரைக் காயப்படுத்தினான். வருத்தமடைந்த ரிஷபதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். கோபம் கொண்ட சிவபெருமான், தனது ஐந்து முகங்களில் (சத்யோஜாதம், வாமதேவம் அகோரம், தத்புருஷம், ஈசானம்) ஈசான முகத்தில் இருந்து அகோர மூர்த்தியை தோன்றச் செய்தார். அகோர உருவத்தைப் பார்த்தவுடன் அசுரன், சிவபெருமானிடம் சரண் புகுந்தான். அப்படி சரணடைந்த அசுரனை, அகோர மூர்த்தியின் காலடியின் இன்றும் காணலாம். சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி நிறுத்த மண்டபத்தில், காயம்பட்ட ரிஷப தேவரைக் காணலாம்.

 

சுவேதாரண்யர் கோயில் நடுவில் உள்ளது. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபங்களுடன் கூடிய பெரிய சந்நதி இது. மூலஸ்தானத்தில் திருவெண்காடர் மகாலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார். திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்ம வித்யாம்பிகை என்ற பெரிய நாயகி எழுந்தருளி இருக்கிறார். திருநாங்கூரில் உள்ள மதங்காசிரமத்தில் மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற திருப்பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து, அவரைத் தனது  நாதராக அடைந்தார் என்று பத்மபுராணம் கூறுகிறது.

 

மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் வளர்ந்தார் பார்வதி தேவி. சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து, அவரை இத்தலத்தில் கரம் பற்றினார். ஒருசமயம், பிரம்ம தேவருக்கு வித்தை கற்பித்ததால், பிரம்ம வித்யாம்பிகை என்ற பெயரால் அம்பாள் அழைக்கப்படுகிறார். கல்வியில் சிறந்து விளங்க, பிரம்ம வித்யாம்பிகை அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

நான்கு கரங்களுடன் இத்தலத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார், இடது மேற்கரத்தில் தாமரை, வலது மேற்கரத்தில் அக்கமாலை வைத்துள்ளார். வலது கீழ்க்கரம் அபயக்கரமாகவும், இடது கீழ்க்கரம் திருவடி பெருமைகளை பேசுவதாகவும் உள்ளன. தாமரை செல்வச் செழிப்பையும், அக்கமாலை யோகத்தையும் உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வுலகைக் காப்பதையே தேவி தவமாகக் கொண்டுள்ளாள். அம்பிகையின் தாமரைப் பாதங்கள், அப்பாதங்களில் ரத்னக் கற்களை பரல்களாக உடைய சிலம்பு, அச்செம்மணிகளின் ஒளிக்கற்றைகள் நகங்களில் பரவுவதால் செஞ்சடைகள் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. தன் கருணை கால் நகங்களிலிருந்து பாயும் கங்கையின் பிரவாகத்தின் இடையே அமர்ந்து இவ்வுலகை காப்பதைத் தவமாகக் கொண்டு தேவி விளங்குகிறாள்.

அச்செஞ்சடை, பரமன் கங்காதரரைப் போல் என் கண்களுக்குத் தோற்றமளிக்கிறது. பரமேஸ்வரனையே எண்ணும் அம்பிகையை தரிசித்து, அவளில் சிவத்தைக் காண்கிறேன். சிவத்தில் அவளைக் காண்கிறேன்,’ எனும் ஜடாலா மாஞ்சீரஸ் எனத் துவங்கும் மூக பஞ்சசதீயின் பாதாரவிந்த சதக துதி வர்ணிக்கிறது. அம்பிகையின் புன்சிரிப்பின் பெருமையோடு ஒப்பிட்டால் வெண்மையான பால் அதற்கு ஈடாகாது. பால் அம்பிகையின் புன்சிரிப்பைப் போல் வெண்மையாக மட்டுமே உள்ளது. பால், பிறர் கறப்பதால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், தேவியின் புன்சிரிப்போ வணங்குவோர்க்கு வேண்டியவற்றை விட அதிகமாகவே சுரந்தளிக்கிறது. காமதேனுவைப் போல் அனைத்தையும் பக்தர்களுக்கு அளிக்கிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • திருவெண்காடு தலத்தில் மூன்று மூர்த்திகள், மூன்று தீர்த்தம், மூன்று தலவிருட்சம் இருப்பது தனிச்சிறப்பு

 

  • சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காண முடியும். சிவபெருமான் இங்கு நவதாண்டவம் புரிந்ததால், இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

  • இத்தலத்தில் மூன்று மூர்த்திகள் (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), மூன்று சக்தி (பிரம்ம வித்யாம்பிகை, காளி, துர்கை), மூன்று தீர்த்தங்கள் (அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள்), மூன்று தலவிருட்சங்கள் (வடவால், வில்வம், கொன்றை) உள்ளன.

 

  • நடராஜ சபையும், ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கு உண்டு. தினமும் ஸ்படிக லிங்கத்துக்கு 4 அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

 

  • சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.

 

  • இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.

 

  • இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது

 

  • பிரம்மா சமாதி இங்குள்ளது. இவ்வூர் சங்கல்பத்தில் “ப்ரஹ்ம ஸ்மாஷனே” என்று சொல்லப்படுகிறது

 

  • ராமாயணத்தில் இத்தலம் பற்றி சுவேதாரண்ய க்ஷேத்ரத்தில் (திருவெண்காடு) யமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரண், தூஷனனை ராமர் சம்ஹாரம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. வட மொழியில் சுவேதாரண்யம் என்றால் வெண்மையான காடு என்று பொருள். அதாவது, திருநீற்றுக்காடு. பிரம்மனுக்கு இவ்வூர் மயானமானதால் பெரிய மயானம் என்ற பெயரும் உண்டு.

 

  • இத்தலத்தில் பட்டினத்தார் சிவ தீட்சை பெற்றுள்ளார். பட்டினத்தாருக்கு குருநாதராக இருந்து சிவபெருமான் தீட்சை அளித்த விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

  • அகோர மூர்த்தியின் வீரக் கோலம் இத்தலத்தில் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. 64 சிவ மூர்த்தங்களில் இந்த உருவம் 43-வது உருவம் ஆகும். நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து, வலது காலை பெயர்த்து அடியெடுத்து முன்வைக்க முனைவது போன்று தன் நடையழகை, சிவபெருமான் காட்டி அருள்கிறார். மூலவரைப் போன்று உற்சவரும் வீரச் செறிவைக் காட்டும் கடுமையான கோலத்தில் இருந்தாலும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிலையில்தான் உள்ளார். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால், ‘அகோரமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணிக்கு இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

 

  • திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணல் எல்லாம் சிவலிங்கங்களாகவும் தோன்றின. பூமியில் கால் வைக்கவே யோசனை செய்த சம்பந்தர், அம்பாளை நினைத்து, ‘அம்மா’ என்று அழைத்தார். சம்பந்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த பெரியநாயகி, அவரை இடுப்பில் தூக்கிக்கொண்டு கோயிலுக்கு வந்தார். சம்பந்தரை இடுப்பில் சுமந்தபடி உள்ள பெரியநாயகி விக்கிரகம், கோயில் பிரகாரத்தில் உள்ளது.

 

  • இங்குள்ள காளி சுவேத வனத்தில் எழுந்தருளிய காளியாக இருப்பதால், ‘சுவேத காளி’ என்று அழைக்கப்படுகிறார். எட்டு கரங்களில் பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். வலது காலை பீடத்தின் மீது உயர்த்திக் கொண்டு, இடது காலை தொங்கவிட்டுள்ளார். காளியை வணங்கினால், கலைகளில் சிறக்க வைப்பார். எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவராக அஷ்டபுஜ துர்கை அருள்பாலிக்கிறார், மகிஷனை அழித்த கோபம் இல்லாமல் சாந்தமான முகத்துடன் துர்கை அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

 

  • அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது.

 

  • 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெணகாட்டுநங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு.

 

  • இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்.

 

  • இந்தக் கோயிலில் சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

 

  • சத்திய நல்விரதன் என்பவர் நாகையை ஆண்ட மன்னர். இவன் ஆட்சிக்காலத்தில் சாக்தமத பிராமணர் ஒருவர் பசியோடு வந்த பிராமணருக்குக் கள்ளைக் கொடுத்து விட்டார். கள்ளுண்ட பிராமணரைத் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து அவர் செய்த பாவத்தைக் கழுவத் துணை செய்தான் சத்தியநல்விரதன். பின்னர் தன்னரசை மகனிடம் விடுத்து, திருவெண்காட்டிலேயே தங்கி வழிபாடியற்றி இறையருள் பெற்றான்.

 

  • சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி எமனையும் எழுப்பியருளினார்.

 

  • முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதமெனும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுட் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்ட சிவப்பிரியர் அதனை மன்னித் தருளினார். பின்னர் வைகாசி மாதத்து அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.
  • கந்தப்புராணத் திருவிளையாட்டுப் படலம்
  • ‘காழற்று தந்தம் அறஏகி வெண்காட்டில் ஈசன்
  • கேழற்ற தாளர்ச்சனை செய்துகிடைத்து வைகும்வேழம்” என்றும்,
  • திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப் படலம்
  • “கோடு நான்குடைய வேழம் தானவன் குறைந்த கோட்டைப்
  • பாடற நோற்றுப் பெற்ற பதியிது” என்றும் இந்நிகழ்ச்சியைப் பாடுகிறது.

திருவிழா: 

  • மாசி மாதம் – இந்திரப் பெருவிழா – 13 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும்,

 

  • வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும்,

 

  • ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும்,

 

  • ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும்,

 

  • அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும்,

 

  • ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும்,

 

  • புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும்,

 

  • கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும்,  மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன.

 

  • பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சனை வைபவம் சிறக்க நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்,

திருவெண்காடு – 609 114,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91-4364-256 424

 

அமைவிடம் :

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ தூரத்தில் திருவெண்காடு கோயில் உள்ளது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோயில் வழியாகச் செல்லும்.

 

 

 

 

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

one × 5 =