October 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திரு ஊரகம்

  1. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்

உற்சவர்   :     பேரகத்தான்

தாயார்     :     அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி

தீர்த்தம்    :     நாக தீர்த்தம்

ஊர்       :     திரு ஊரகம்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

மகாபலி அசுரேந்திரனாக முடி சூட்டிக் கொண்டதும் அவனுடைய ஆணை 3 உலகங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும், மகாபலியின் கொட்டத்தை அடக்கவும், திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் சென்று நிம்மதியாக பகவானைத் தியானிக்க தனக்கென்று ஓர் இடம் தேவைப்படுகிறது. அதை அளித்தால் நன்மையாக இருக்கும் என்று கேட்டார். மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினார். உடனே திருமால் திரிவிக்கிரம வடிவம் எடுத்து தன்னுடைய ஒரு திருவடியால் மேலுலகத்தையும் மற்றொரு திருவடியால் கீழுலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார் அப்போதுமகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார். மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால் பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால்.

அதாவது அந்த நாகத்தைப் பார்த்தால் அவனுக்கு ஆதிசேஷன் நினைவுக்கு வரவேண்டும். ஆதிசேஷன் நினைவுக்கு வந்தால் அதில் பள்ளி கொண்ட பரந்தாமன் நினைவுக்கு வருவார். கூடவே இந்த உலகளந்த மாபெரும் தோற்றமும் நினைவுக்கு வரும் என்று திருமால் நினைத்தார் போலிருக்கிறது.

இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோயில் வளாகத்தில் திவ்ய தேசப் பெருமாளாக தரிசிக்கிறோம். நாகம் என்றாலே பால் நிவேதனம் என்ற பாரம்பரிய ஆராதனை சம்பிரதாயமும் உடன் வருகிறது. ஆதிசேஷன் பாற்கடலில் திருமாலுக்குப் படுக்கையாக இருப்பதும் இதே தொடர்பை ஒட்டித்தான் உள்ளது. அதனால்தான் ஆதிசேஷன் முதல் சிறு நாகம் வரை பாம்புக்கு பால் வார்க்கும் மரபு இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த திரு ஊரகத்தானுக்கும் பால் பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோயில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • இத்தலத்தை திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • பெருமாள் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு நெடிது உயர்ந்து தனது இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார்.

 

  • இக்கோயிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது. இது காஞ்சிக்குக் கிடைத்த பெரும்பேறு ஆகும்.

 

  • பெருமாள் சந்நிதி அருகே பகவான் ஆதிசேஷனாக திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார்.

 

  • இத்திருக்கோவில் தற்போது உள்ள பூமியின் மேல் மட்டத்திலிருந்து சுமார் 6 அடி தாழ்ந்து அமைந்துள்ளது. அதாவது இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலை அடைந்தவுடன் சுமார் 8 படிகள் கீழ் இறங்கிச் சென்ற பின்பே திருக்கோயிலை அடையலாம்.

 

  • திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டு, பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த திரிவிக்கிரமனாக அவதாரம் செய்த கோலத்தை 108 திவ்விய தேசங்களில் மூன்றே இடங்களில் மட்டும் தரிசிக்கலாம்.

 

  • முதலாவது நடுநாட்டுத் திருப்பதியான திருக்கோவிலூர். இங்கு திருவடியை உயரே தூக்கி நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டா வது- தொண்டை நாட்டுத் திருப்பதியான காஞ்சியிலுள்ள திருஊரகம் எனப்படும் உலகளந்த பெருமாள் ஆலயம் ஆகும். மூன்றாவது சோழ நாட்டுத் திருப்பதியான சீர்காழி காழிச்சீராம விண்ணகரம். இங்கு பெருமாள் தாடளன், திருவிக்கிரமன் என்ற நாமம் கொண்டுள்ளார்.

 

  • கோயிலின் 2-வது பிராகாரத்தில், வடக்கில், ஜகதீச்வர விமானத் தின் கீழ் அருள்கிறார் (திருநீரகம்) ஜகதீச பெருமாள். சங்கு- சக்ரதாரியாய் ஸ்ரீநிலமங்கை வல்லி தாயாருடன் அருளும் இந்தப் பெருமாள், அக்ரூரருக்குக் காட்சி தந்தவராம்.

 

  • பிராகாரத்தில்- தெற்கில், பத்மாமணி நாச்சியாருடன் சந்நிதி கொண்டிருக்கிறார் (திருக்காரகம்) கருணாகரப் பெருமாள். இவர், கார்ஹ மகரிஷிக்கு அருளியவராம். பிராகார வலத்தின்போதே, பார்வதிதேவிக்குக் காட்சி தந்த திருக்கார் வானம் கள்வர் பெருமாளையும் கமலவல்லித் தாயாரையும் தரிசிக்கலாம்.

 

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,

திரு ஊரகம், காஞ்சிபுரம் – 631 502.

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91- 94435 97107, 98943 88279

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

eight − four =