March 13 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாகாளிக்குடி

  1. அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி

உற்சவர்        :     அழகம்மை

தல விருட்சம்   :     மகிழ மரம்

ஊர்             :     மாகாளிக்குடி

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை கொண்டது அவ்விஷம். அதனால் அந்த விஷத்தை கண்டவுடன் அசுரர்களும் தேவர்களும் பயந்தார்கள். உலக நன்மைக்காக  அந்த விஷத்தைக் சிவபெருமானே வாயில் போட்டுக்கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன சக்திதேவி, விஷம் சிவபெருமானின் வயிற்குள் இறங்கிவிட கூடாதே என்று இறைவனின் கண்டத்தை (தொண்டையை) அழுத்தி பிடித்துக்கொண்டார். அதனால் விஷம் கண்டத்திலேயே தங்கிவிட்டது. இதனால் இறைவன் “நீலகண்டன்” எனப் பெயர் பெற்றார். அதே போல இறைவனின் கண்டத்தில் இருக்கும் ஆலகால விஷத்தை வெளியேற்ற, சிவபெருமானின் உச்சி தலையில் தன் கைகளால் தட்டினார் அன்னை பார்வதி. விஷம் வெளியேறக்கூடாது என இறைவனுக்கு தெரியாதா? அதனால் அதற்கு பதிலாக அந்த விநாடியே சிவனின் உச்சி தலையில் இருந்து ஒரு சக்திதேவி உருவானாள். அந்த சக்தி தேவிக்கு “உச்சிகாளி அம்மன்” என்று பெயர் வைத்தாள் பார்வதி தேவி.

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் “உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப் போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர். இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.

 

கோயில் சிறப்புகள்:

  • விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில் . இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார்.

 

  • வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  • பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.

 

  • இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள்  ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.

 

  • சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது.

 

  • உற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக் கோலத்தில் உள்ளார்.

 

  • பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில்  அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக  எழுந்தருளினாள்.

 

  • பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

 

  • ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை ‘ஆனந்த சௌபாக்கிய சுந்தரி’ என்கிறார்கள்.

 

  • இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான களுவனும் இங்கு வந்துள்ளனர். வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  • அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை “கதாதரர்’ என்றும் அழைக்கின்றனர்.

 

  • குழந்தை ரூபத்தில் சந்தான கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம், இளமை, செல்வம், ஆயுள் போன்ற நற்பலன்களை வழங்கும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார்.

 

  • காவல் தெய்வமான விலங்குத் துறையான் என்ற கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்தால், பாதுகாப்பான நீண்டகால வாழ்வு கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இவர் திருமாலின் அம்சமாக விளங்குகிறார். சங்கிலி கருப்பு என்றும் அழைப்பர். பொம்மியம்மை, வெள்ளையம்மை சமேத மதுரை வீரசுவாமியும் அருள்பாலிக்கிறார். அம்பிகையின் தேரோட்டம் நடக்கும்போது அவளுக்கு பாதுகாப்பாக இவர் வருவதாக ஐதீகம். தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இவரை கட்டிவிடுவார்கள். அதற்கு அடையாளமாக விலங்கு மீண்டும் பூட்டப்பட்டுவிடும்.

 

  • விநாயகர் எல்லா கோயில்களிலுள் நுழைவுப்பகுதியில் இடது வாயிலிலும், வலதுபுறம் சுப்பிரமணியரும் காட்சிதருவர். ஆனால் இங்கு வலது புறத்தில் வலம்புரி விநாயகரும், இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

 

திருவிழா: 

நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது. பவுர்ணமி , அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்

மாகாளிக்குடி, சமயபுரம்

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91-431 267 0860, 267 0460, 98424 02999

 

அமைவிடம்:

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 23 கி.மீ., தூரத்தில் சமயபுரம். இங்கிருந்து அரை கி.மீ., தூரத்தில் மாகாளிகுடி உள்ளது. மினி பஸ்கள், ஆட்டோக்கள் செல்கின்றன.

Share this:

Write a Reply or Comment

three × 1 =