April 24 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநறையூர்

  1. அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சித்த நாதேஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     சௌந்தர நாயகி, அழகாம்பிகை

தல விருட்சம்   :     பவளமல்லி

தீர்த்தம்         :     சித்தநாத தீர்த்தம், சூலதீர்த்தம்

புராண பெயர்    :     சித்தீஸ்வரம்

ஊர்             :     திருநறையூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்

 

  • மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் .திருநறையூர். இத்தலத்தில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

 

  • மகாலட்சுமி அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, ‘மழலை மகாலட்சுமி’ என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

 

  • இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியா கோயிலுக்கு செல்கின்றனர். அதனால் இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது

 

  • சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது.

 

  • சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

 

  • இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர்.

 

  • ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது.

 

  • பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும்.

 

  • மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

 

  • குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

 

  • தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும்,

 

  • ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.

 

  • கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.

 

  • துர்வாசமுனிவரால் பறவை உருவச்சாபம் பெற்ற மனிதன் (நரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு ‘நரவுரம்’ என்றும் பெயர்.

 

  • கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, “பிரசன்ன துர்க்கை’ என்று அழைக்கப்படுகிறாள். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள்.துர்க்கையின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஏணுடன் கா ஈட்டும் பெருநறை ஆறு என்ன வயல் ஓடி நாட்டும் பெருநறையூர் நம்பனே” என்று போற்றி உள்ளார்.

 

 

திருவிழா: 

மார்கழி திருவாதிரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஐப்பசி அன்னாபிஷேகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்,

திருநறையூர்- 612 102.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 435 – 246 7343, 246 7219

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் நாச்சியார்கோயில் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து சென்றுவிடலாம்.

 

Share this:

Write a Reply or Comment

three − two =